வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம்

டெல்லியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்து, இந்திய வீரர்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. நாக்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்து. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை ஆரம்பமானது. இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் போட்டித் தொடரை டிரா செய்ய முடியும். தோல்வியடையும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய நிலைவரும். டாஸில் வெற்றிபெற்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக முரளிவிஜய்- தவான் களமிறங்கினர். முதல் போட்டியில் சோபிக்காத தவான், மூன்றாவது போட்டியான இதிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடாமல், 23 ரன்னிலே ஏமாற்றத்துடன் வெளியேறினார். பின்னர் புஜாரா களம் கண்டார். இவரும் 23 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கோலி வந்தார். இவர் நங்கூரம் போல் நின்று ரன்களை விளாசினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் முரளி விஜய் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கோலியும் தன் பங்குக்கு ரன்களைக் குவித்து வருகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார். 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 105வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். 

தேனீர் இடைவேளை முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 101 ரன்னிலும் கோலி 94 ரன்னிலும் களத்தில் இருந்தனர். பின்னர் போட்டி ஆரம்பமானது. கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இவருக்கு இது 20வது சதமாகும். தற்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 102 ரன்னிலும் முரளி விஜய் 120 ரன்னிலும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!