ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய கேப்டன் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசரவைத்துள்ளார் கோலி.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து எதிரணியைக் களங்கடித்ததோடு, விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த இன்னிங்ஸில் 18 வது சதத்தைக் கோலி நிறைவு செய்தார்.

பின்னர், நாக்பூரில் கடந்த 24-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேப்டன் கோலியே காரணம் என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸில் கோலி இரட்டை சதம், அதாவது 213 ரன்கள் விளாசினார். இதன் மூலம் தனது 19வது சதத்தை அவர் நிறைவு செய்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் முரளி விஜய் 128 ரன்னும் புஜாரா 143 ரன்னும் ரோஹித் சர்மா 102 ரன்னும் அடித்தனர். ஒரு இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நான்கு பேர் சதம் விளாசினர்.

டெல்லியில் இன்று 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி ரன்களைக் குவித்துவருகிறது. இந்த இன்னிங்ஸிலும் கோலி சதம் விளாசி ரசிகர்களை மிரளவைத்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்த 4 வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி. 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 105 வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். அடுத்தடுத்து கோலியின் சதத்தால் இலங்கை அணி மிரண்டு போய் உள்ளது.

அடுத்து ஒருநாள் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!