வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (02/12/2017)

கடைசி தொடர்பு:18:40 (02/12/2017)

கோலி 156 நாட் அவுட்; இந்தியா முதல் நாளில் 371 ரன்கள் குவிப்பு

டெல்லியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 155 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 156 ரன்கள் விளாசி களத்தில் இருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டி டிரா; இரண்டாவது டெஸ்ட் போட்டி கைநழுவியபோனது. கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைவில் இருக்கிறது இலங்கை அணி. இரண்டாவது போட்டியில் வெற்றி; மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது இந்திய அணி. கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முரளி விஜய் - தவான் தொடக்க வீரர்களாகக் களமிறக்கப்பட்டனர். ஒருநாள் போட்டியைப்போல் விளையாட நினைத்த தவான் 35 பந்தில்
25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெரைரா பந்தில் லக்மாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவான் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அடுத்து புஜாரா வந்தார். இவர் சிறிது நேரம்கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. 39 பந்தில் 23 ரன் எடுத்திருந்த புஜாரா, ஹமேஜ் பந்தில் சமரவிக்ரமாவிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.

மறுமுனைவில் விளையாடிய முரளி விஜய் அரை சதம் விளாசினார். கேப்டன் கோலி களமிறங்கிய பின்னர், ஆட்டத்தின் போக்கு மாறியது. இரண்டு பேரும் சேர்ந்து ரன் விகிதத்தை உயர்த்தினர். இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது சதத்தை அடித்த முரளி விஜய் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். 267 பந்துகளைச் சந்தித்த முரளி விஜய் 155 ரன்கள் அடித்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அணியின் ரன் எண்ணிக்கை 361 ஆக இருந்தபோது விஜய் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை சண்டகன் கைப்பற்றினார். கேப்டன் கோலியும் தனது பங்குக்கு சதம் விளாசினார். இது இவரின் 20 வது சதமாகும். 

அடுத்து வந்த ரஹானே வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். 5 பந்துகளைச் சந்தித்து 1 ரன்னில் இருந்தபோது ரஹானே விக்கெட்டை சண்டகன் வீழ்த்தினார். பின்னர், ரோஹித் சர்மா களம் கண்டார். இவர் 6 ரன்னிலும் கோலி 156 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்துள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்கிறது. இலங்கை தரப்பில் சண்டிகன் 2 விக்கெட்டும் ஹமேஜ், பெரைரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.