வெளியிடப்பட்ட நேரம்: 05:25 (03/12/2017)

கடைசி தொடர்பு:05:25 (03/12/2017)

உலகக் கோப்பை குரூப்கள் ரெடி... குரூப் ஆஃப் டெத் எது? #WorldCupDraw

2018-ல் நடக்கவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிக்கான ஃபைனல் டிரா வெளியாகிவிட்டது. அடுத்த ஆண்டு ஜூன் -ஜூலையில், ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிீட்டு விழா மாஸ்கோ நகரில் நடந்தது. இதில் பீலே, மாரடோனா, ரொனால்டினோ உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்றனர். #WorldCup 

WorldCup 

தகுதிச்சுற்றுப் போட்டிகளின் மூலம் உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்ற 32 அணிகளும் எட்டு குரூப்களாகப் பிரிக்கப்பட்டன. குரூப் பி மற்றும் குரூப் எஃப் பிரிவுகளைக் கிட்டத்தட்ட ‛குரூப் ஆஃப் டெத்’ எனச் சொல்லலாம். F பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, மெக்ஸிகோ மற்றும் ஸ்வீடன் மட்டுமல்லாது தென் கொரியாவும் லேசுப்பட்ட அணி அல்ல. குரூப் பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுக்கல் அணிகளுடன் இடம்பெற்றுள்ள ஈரான், மொராக்கோவை குறைத்து மதிப்பிட முடியாது. குரூப் இ பிரிவில் உள்ள பிரேசில், குரூப் டி பிரிவில் உள்ள அர்ஜென்டினா, குருஃப் சி பிரிவில் உள்ள ஃபிரான்ஸ் அணிகளுக்குப் பெரிதாக அச்சுறுத்தல் இல்லை. 

பொதுவாக எல்லா குரூப்களிலுமே குறைந்தபட்சம்  ஒரு பலமான அணியாவது இருக்குமாறு (பேலன்ஸ்டாக) அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதானால் எல்லாப் போட்டிகளுமே நிச்சயமாக சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். ஆனாலும், குரூப் பி மற்றும் குரூப் எஃப் சுற்றுப் போட்டிகளில்தான் விறுவிறுப்பு இருக்கும். குரூப் சி-யில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பெரு அணிகளுக்குள் அடுத்த சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி நிலவும்.

WorldCup 

குரூப் பி-யில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் அணிகள்தான் டாப் அணிகள். பார்சிலோனா - ரியல் மாட்ரிட் கிளப்களின் நட்சத்திரங்கள்தான் ஸ்பெயினின் வீரர்கள் லிஸ்டில் இருப்பார்கள் என்பதால் இஸ்கோ, அசான்சியோ மற்றும் செர்ஜியோ ரமோஸ் போன்ற சக கிளப் வீரர்களையே நேருக்குநேர் எதிர்கொள்ளவிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதேபோல் குரூப் ஜி-யில் இங்கிலாந்தும் பெல்ஜியமும் சமபலம் கொண்ட அணிகளாக விளங்குகின்றன. ஏறக்குறைய ஈடன் ஹசார்ட், கெவின் டிப்ரூயின், கோர்டுவா முதலிய பெல்ஜியத்தின் டாப் வீரர்கள் அனைவருமே இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் இங்கிலாந்தின் முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடுபவர்கள் என்பதால் இரண்டு அணிகளுக்குமே “பாம்பின் கால் பாம்பு அறியும்” கதைதான்.

உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா மற்றும் செர்பியா அணிகளை எளிதாக வீழ்த்தி குரூப் ஈ-யில் அடுத்த சுற்றுக்கு ஈசியாக முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்காவின் மற்றொரு முக்கிய அணியான அர்ஜென்டினா , உலகக் கோப்பைத் தொடர் தொடங்கும் முன்னரே வெற்றிக்கான ஒரு கரெக்ட் ஃபார்மேஷனைப் பிடித்துவிடும் பட்சத்தில் குரூப் டி-யில் உள்ள ஐஸ்லாந்து, குரோஷியா மற்றும் நைஜீரியா அணிகள் அர்ஜென்டினா உலகக் கோப்பை வெல்வதற்கு தடையாக இருக்கப்போவதில்லை.

WorldCup 

மொத்தம் 31 நாள்கள் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் ஜூன் 14-ல் தொடங்குகிறது. முதல் போட்டியில் உலகக் கோப்பையை நடத்தும் ரஷ்யா, சவுதி அரேபியாவைச் சந்திக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. அட்டவணை வெளியானதுமே உலகக் கோப்பை ஜுரம் அடிக்கத் தொடங்கிவிட்டது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஐஸ்லாந்து, பனாமா போன்ற சிறிய அணிகள் மிரட்டியதையும், இத்தாலி, நெதர்லாந்து போன்ற ஜாம்பவான் வெளியேறியதையும் நினைவிலிருந்து எரேஸ் செய்துவிடுவோம். இனி நம் ஃபோகஸ் எல்லாம் உலகக் கோப்பை மட்டுமே! 


டிரெண்டிங் @ விகடன்