வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (03/12/2017)

கடைசி தொடர்பு:07:36 (04/12/2017)

சீருடையுடன் களமிறங்கத் தயாரான பயிற்சியாளர்கள்.. இந்திய அணி டிக்ளேர் செய்ய நிர்பந்திக்கப்பட்டதா?

டெல்லி டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. 


நான்கு விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி - ரோகித் ஷர்மா இணை, இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இரட்டை சதமடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ச்சியாக இரண்டாவது இரட்டை சதமடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னர், இந்தச் சாதனையை வினோத் காம்ப்ளி நிகழ்த்தியுள்ளார். 

இந்தப் போட்டியின்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர்கள் சுவாசிக்க சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது. டெல்லி காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடியுடன் களத்தில் இறங்கி விளையாடினர். உணவு இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு காமாகே,  அசாதாரணமாக உணர்வதாக அணியின் உடற்பயிற்சியாளரை அழைத்து இதுதொடர்பாகப் பேசினார். இதனால், போட்டி 17 நிமிடங்கள் தடைபட்டது. அதேபோல், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மலும், தன்னால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறி மைதானத்தைவிட்டு வெளியேற போட்டி தொடங்குவதில் 4 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியில் நடுவர்கள், மருத்துவர் ஒருவருடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் ஆகியோரும் கள நடுவர்களிடம் ஆலோசனை நடத்தியதைப் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 10 வீரர்களுடன் களமிறங்கும் சூழல் ஏற்பட்டபோது, அந்த அணியின் உடற்பயிற்சியாளர் நிக் லீ, ஜெர்சியுடன் களமிறங்கத் தயாரானார். அதேபோல், இலங்கையின் ஃபீல்டிங் பயிற்சியாளர் மனோஜ் அபேவிக்ரமாவும் ஃபீல்டிங் செய்யத் தயாரானார். 

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன் குவிக்க இந்திய அணி திட்டமிட்டிருந்தபோது, இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகவே டிக்ளேர் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்திய அணி தரப்பில் சாஹா 9 ரன்களுடனும், ஜடேஜா 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 57 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.