வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (05/12/2017)

கடைசி தொடர்பு:16:10 (05/12/2017)

உலகச் சாதனையைச் சமன்செய்யுமா இந்தியா?: டெல்லி டெஸ்டில் இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு!

டெல்லி டெஸ்டில் இலங்கை அணி வெற்றிபெற 410 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. 

மூன்றாம் நாள் ஸ்கோரான 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி, 17 ரன்கள் சேர்ப்பதற்குள் கடைசி விக்கெட்டை இழந்தது. கேப்டன் சண்டிமால், 164 ரன்கள் எடுத்து இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கவீரர் விஜய் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ரஹானேவும் 10 ரன்களில் வெளியேற, தவானுடன், புஜாரா இணைந்தார். 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தநிலையில், இந்த ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. புஜாரா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா ஆட்டமிழந்தபின்னர் ஜோடி சேர்ந்த தவான் - கோலி இணை ஒருநாள் போட்டிபோன்று அதிரடியாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.

தவான் 67 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரோகித் ஷர்மாவும் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். 55 பந்துகளில் அரைசதம் கடந்த கோலி, அடுத்த சிலநிமிடங்களில் ஆட்டமிழந்தார். புஜாரா ஆட்டமிழக்கும்போது 31 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 106 என்று இருந்தநிலையில், விராட் கோலி ஆட்டமிழக்கும் போது 50.4 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 234 என்பதை எட்டியிருந்தது. கோலி ஆட்டமிழந்த பின்னர்,  ரோகித் ஷர்மாவும் அரைசதம் அடிக்க, 5 விக்கெட் இழப்புக்கு 246 என்ற ஸ்கோருடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இலங்கை அணி வெற்றிக்கு 410 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. 

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது குறைந்தபட்சம் டிரா செய்தாலோ விராட் படை உலகச் சாதனை ஒன்றை சமன் செய்யும். தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற ஆஸ்திரேலிய அணி படைத்த சாதனையை இந்திய அணி சமன் செய்யும். ஆஸ்திரேலிய அணி, இந்தச் சாதனையைக் கடந்த 2005 முதல் 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் படைத்தது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, சமீபத்தில் அதே இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வொயிட் வாஷ் செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்ற இந்திய அணி, தற்போதைய தொடரிலும் வென்று ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்யும்.