தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. 

ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கின்றன. 

தடை முடிந்து ஐ.பி.எல். களத்துக்குத் திரும்பும் சி.எஸ்.கே. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ. நிர்வாகத்தைக் கவனிக்கும் கமிட்டியினருடன், ஐ.பி.எல். நிர்வாகக் குழுவினர் டெல்லியில் நடத்திய ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தோனி, மீண்டும் அந்த அணிக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தோனி தவிர மேலும் இரு வீரர்களை, ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!