வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (06/12/2017)

கடைசி தொடர்பு:17:17 (06/12/2017)

டிராவில் முடிந்த டெல்லி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் உலகச் சாதனையைச் சமன்செய்த விராட் படை!

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 


டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 536 ரன்களும் இலங்கை அணி 373 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 163 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 246 ரன்களில் டிக்ளேர் செய்து இலங்கை அணிக்கு 410 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நான்காம் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் இலங்கை அணி எடுத்திருந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை இலங்கை அணி இன்று தொடங்கியது.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே, முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய மேத்யூஸை வெளியேற்றி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா. இதையடுத்து கைகோத்த தனஞ்செயா டி செல்வா மற்றும் கேப்டன் தினேஷ் சண்டிமால் ஜோடி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து ஆடியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிமால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த தனஞ்செயா டி செல்வா, 119 ரன்களுடன் ரிட்டையர்டு ஹர்டாகி வெளியேறினார்.

அறிமுக வீரர் ரோஷன் சில்வாவுடன் கைகோத்த கீப்பர் டிக்வெல்லா மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். 103 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. ரோஷன் சில்வா 74 ரன்களுடனும் டிக்வெல்லா 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். 

இலங்கை தொடர் வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடரில் வென்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்தது. ஆஸ்திரேலிய அணி, இந்தச் சாதனையைக் கடந்த 2005 முதல் 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் படைத்தது. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி, சமீபத்தில் அதே இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வொயிட் வாஷ் செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்ற இந்திய அணி, தற்போதையத் தொடரிலும் வென்று ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்தது.