வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (06/12/2017)

கடைசி தொடர்பு:19:38 (06/12/2017)

இங்கிலாந்து சொதப்பியது எங்கே...? மீண்டும் ஆஸ்திரேலியா ஆதிக்கம்! #Ashes

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. தொடரிலும், 2-0 என முன்னிலை. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. பிங்க் நிற பந்துகள் கொண்டு முதன்முறையாக பகலிரவு ஆட்டமாகத் தொடங்கியது இந்த ஆஷஸ் போட்டி. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையாக ரன்களைச் சேர்க்க, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே, ஸ்டுவர்ட் பிராட் விக்கெட் கீப்பரிடம், ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இல்லை எனக் கூற,  வாடிப்போனது இங்கிலாந்து. 

Ashes

விக்கெட்டுகளைத் தேடி, ஃபுல் லெந்த், குட், ஷார்ட் என மாறிமாறி பொறுமையிழந்து பந்துவீசியது வார்னருக்குச் சாதகமாகிவிட்டது. வார்னர் கொஞ்சம் செட்டில் ஆனதும், பாங்க்ராஃப்ட் ரன் அவுட்டாகி வெளியேற, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடெமியில், தங்கப்பதக்கம் வென்ற உஸ்மான் கவாஜா சேர்ந்தார். கவாஜாவின் திறமைக்கு அவர் என்றோ அணியில் தன்னைப் பெரிய ஃபோர்ஸாக மாற்றியிருக்க வேண்டும். வார்னருடன் சேர்ந்து, Floodlight வருவதற்கு முன்பே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு அடித்தளமிட்டார் கவாஜா. 47 ரன்கள் எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்தில், வார்னர் வெளியேற, ஸ்மித் உள்ளே வந்தார்.

பந்து பழையதாகிவிட்டதும், ஒரு செஷன் முடிந்து அடுத்த செஷனின் களைப்பு தெரியாத விதமும், கவாஜா, ஸ்மித்துக்குக் கைகொடுக்க, அடுத்த 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைக் கொஞ்சம் நிமிர்த்தினர். கவாஜா தன்னுடைய அரை சத்தை எட்டியவுடன் ஆண்டர்சன் வீச்சில் விழ,  ஸ்மித் அவுட்டே ஆக மாட்டாரா என வேதனைப்பட்ட இங்கிலாந்து ரசிகர்களுக்கு வரமாக வந்தார் அறிமுக வீரர் ஓவர்டன். ஆட்டம் கொஞ்சம் இங்கிலாந்தின் பக்கம் சென்றபோது, ஷான் மார்ஷ் உள்ளே வந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 206/4.

Ashes

இரண்டாம் நாள் ஆரம்பத்திலேயே, ஹாண்ட்ஸ்கோம்ப் விக்கட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்த, அணிக்காக ஏதாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் வந்த பெயின், இருமுறை தப்பிப்பிழைத்தாலும், அரை சதம் அடித்தார். மார்ஷ் அவர் பங்குக்குப் பொறுமையாக ரன்களைச் சேர்த்தார். 57 ரன்கள் எடுத்திருந்த வேளையில் பெயின் அடிக்க முற்பட்டு அவுட் ஆக, ஸ்டார்க் அவரைப் பின்தொடர்ந்தார். கம்மின்ஸ் சந்தித்த முதல் 24 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. மார்ஷ் ரன் எடுக்கட்டும் என்று உறுதுணையாக நின்றார். அதன்பின் ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி, 400 ரன்களுக்கு மேல் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். மார்ஷ் சதமடித்த பின், ஸ்மித் டிக்ளேர் செய்தார். 

இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, மார்ஷை சேர்க்கலாமா, மேக்ஸ்வெல்லை எடுக்கலாமா எனக் குழம்பிய நிர்வாகத்துக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது மார்ஷின் இந்த சதம். "என் மீது போட்ட இன்வெஸ்ட்மென்ட்டை, டபுளாகக் கொடுத்துவிட்டேன்" என்று சொல்வதைப்போல அமைந்துவிட்டது அவரது பேட்டிங். அவரது இன்னிங்ஸ் நன்கு கட்டமைக்கப்பட்ட இன்னிங்ஸ். முதல்நாள் Floodlight வெளிச்சத்திலும், இரண்டாம் நாள் புதிய பந்துக்கு எதிராக தடுப்பாட்டம் ஆடியும், சதமடித்தது சிறப்பு.

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஸ்டோன்மேன் எல்பிடபுள்யூ முறையில் வெளியேற, ஆட்டமும் மழையால் தடைபட சரியாக இருந்தது. மூன்றாவது நாள் முதல் ஓவரிலேயே ஹேஸல்வுட், வின்ஸை மெக்ராத் ஸ்டைல் துல்லியமாக அவுட்டாக்கினார். காற்று ஆஸ்திரேலியா பக்கம் அடிக்கத் தொடங்கியது. ரூட், குக், மாலன் என அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவின் வேகத்துக்கும், நாதன் லயனின் சூழலுக்கும் விக்கெட்டுகளை இழக்க, அலி - பைர்ஸ்டோவ் ஜோடி கொஞ்சம் போராடியது. ஆனாலும், நாதன் லயன் ஒற்றைக்கையில் டைவ் அடித்து அலியை காட் & பௌல் செய்ய, இங்கிலாந்து சரியத் தொடங்கியது. அந்தச் சரிவை பௌலர்கள் கொஞ்சம் மீட்டனர். வோக்ஸ் 36 ரன்கள் எடுக்க, மொத்தமாக, 215 ரன்கள்  பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இங்கிலாந்து.  மூன்றாவது நாளில் பந்துவீச்சுக்கு ஏதுவான தருணத்தில் இன்னிங்ஸ் முடிந்தது இங்கிலாந்துக்குச் சாதகமே. நன்றாகப் பந்துவீசினால், நிச்சயமாக ஆஸ்திரேலியாவுக்குத் தண்ணி காட்ட முடியும் என்கிற நம்பிக்கையில் ஆண்டர்சன் பந்தைக் கையில் எடுத்தார்.

Ashes

ஆண்டர்சன், வோக்ஸ், பிராட் மூவரும் தங்களது 20+ ஓவர் ஸ்பெல்லில், சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களைப்போல பந்தை அங்குமிங்கும் ஸ்விங் செய்ய, ஆஸ்திரேலியர்கள் பந்தை தவறாகக் கணித்ததால், நான்கு விக்கட்டுகளை இழந்தனர். இதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இருவர், கவாஜா, ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும். வெகு நாள்களுக்குப் பிறகு, இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதமடிக்காமல் ஸ்மித் வெளியேறுவது இதுவே முதன்முறை. நைட் வாட்ச்மேனாக லயன் வந்து இரண்டு ஓவர்களைக் கடத்த, 53/4 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நான்காவது நாளில், இன்னமும் வீறுகொண்டெழுந்தனர் இங்கிலாந்து பெளலர்கள். 138 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட். ஒரு செஷன் நன்றாக ஆடினால் கூட, வெற்றிக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு பெவிலியன் திரும்பியவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, குக், ஸ்டோன்மான்மேன் நன்கு அடித்தளமிட்டனர்.

எப்படியாவது ஒரு பிரேக் கிடைத்துவிடாதா என்று அல்லாடியபோது, லயன், குக்கை வெளியேற்றினார். அடுத்த ஒவேரிலேயே ஸ்டோன்மேனை பௌன்ஸ் செய்து ஸ்டார்க் பெலிவியன் அனுப்பிவைத்தார். அணியைக் காப்பாற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில் ரூட் பேட் பிடிக்க, ஆட்டம் சூடுபிடித்தது. ஜேம்ஸ் வின்ஸ் மீண்டும், ஏழாவது ஸ்டம்பில் வீசப்பட்ட பந்தை துரத்தி அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்க, மாலன் ரூட்டுடன் சேர்ந்து விக்கெட் விழாமல் தடுக்க முற்பட்டார்.

Ashes

இதனிடையே, ஆஸ்திரேலியா ரிவ்யூ சிஸ்டத்தை கண்டமேனிக்கு வீணடிக்க, இங்கிலாந்தின் பார்மி ஆர்மி ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்க,  ஆஷஸ் தொடங்கிய ஒன்பதாவது நாளில் அதன் உண்மைமுகம் வெளிவந்தது. ஆட்டமும் விறுவிறுப்பானது. பேட்டின்சன் அரௌண்ட் தி விக்கட் வந்து, மாலனின் ஸ்டம்பை குறிவைத்து பந்துவீச, நாள் முடியும் தருவாயில் இங்கிலாந்து தன்னுடைய நான்காவது விக்கெட்டை இழந்தது. ரூட் மட்டும் அரை சதமடித்து நிலைத்து நிற்க, மறுமுனையில் சப்போர்ட் ஏதுமின்றி தவித்தாலும் வெற்றிக்குத் தேவையான ரன்களில் பாதியை எட்டியதில் மகிழ்ச்சியாகவே நான்காவது நாளை இங்கிலாந்து முடித்துக்கொண்டது.

இதுவரை பகலிரவு டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாள் வரை சென்றதில்லை. ஆனால், அடிலெய்ட் டெஸ்ட் அந்தக் கணக்கை உடைத்து, இரு அணிக்கும் சமமான வெற்றி வாய்ப்பை ஐந்தாம் நாளில் கொடுத்தது. ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பந்திலேயே வோக்ஸ், ஹேஸல்வுட் பந்துவீச்சில் வெளியேற, ஆஸ்திரேலியா மேலும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. துரதிருஷ்டவசமாக, பேட்டின் நுனியில் பந்து உரசி, ரூட்டும் 67 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க, ஆஸ்திரேலியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஸ்டார்க் லோயர் ஆர்டரை பதம் பார்க்க 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 2-0 முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தோல்விக்குக் காரணம் என்றாலும், இங்கிலாந்தின் பேட்டிங்கில் வீரியம் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. ரூட்டும் அரை சதங்களைச் சதமாக மாற்றமுடியாமல் தவிக்கிறார். வின்ஸ், ஸ்டோன்மேன், மாலன் என பேட்டிங் வரிசையில் அனுபவமில்லை. அணியை உடனே மீட்டெடுக்க ஒரு ஆல் ரவுண்டரும், டாப் ஆர்டரின் ரன் அடிக்கக்கூடிய சிறந்த பேட்ஸ்மேனும் உடனடித் தேவை. ஆனால் எங்கிருந்து யார் வருவார்கள், அதுதான் கேள்வி!


டிரெண்டிங் @ விகடன்