வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (06/12/2017)

கடைசி தொடர்பு:20:01 (06/12/2017)

ஓய்வெடுக்க இதுவே சரியான தருணம்! விராட் கோலி

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஓய்வெடுக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். 


இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 9 தொடர்களில் வென்ற ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் சாதனையைச் சமன் செய்தது. டெல்லி டெஸ்டின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். டெஸ்ட் தொடரை அடுத்து நடக்கும் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜனவரியில் தொடங்கும் தென்னாப்பிரிக்க தொடரைக் கணக்கில்கொண்டு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மா, இவ்விரு தொடர்களிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த கோலி, ‘கடந்த முறை எனக்கு ஓய்வளிக்கப்பட்ட போது, அந்த நாள்களைக் கடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக ஓய்வெடுக்க இதுவே சரியான தருணம்’ என்றார்.