டெல்லி காற்றுமாசு: ஐ.சி.சி-யிடம் புகார் கூறிய இலங்கை கிரிக்கெட்வாரியம்!

டெல்லி காற்றுமாசு தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.


இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் நடந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில், காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. மேலும், முகமூடி அணிந்துகொண்டு இரண்டாவது நாளில் ஃபீல்டிங் செய்தனர். இதனால் இந்திய அணி, இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், டெல்லியில் காற்றுமாசு அதிகம் இருந்த நிலையில் போட்டி நடத்தப்பட்டதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இலங்கைக் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகரா தெரிவித்தார். இதுதொடர்பாக ஐ.சி.சி-யிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டதாகவும், 4 வீரர்கள் வாந்தி எடுக்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டதால், இதுபோன்ற சூழலில் தங்களால் விளையாட முடியவில்லை’ என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

டெல்லி டெஸ்டில், ஃபீல்டிங்கின்போது முகமூடி அணிந்து விளையாடிய இலங்கை வீரர்கள், பேட்டிங்கின்போது அணியவில்லை. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. டெல்லி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய, 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!