வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (07/12/2017)

கடைசி தொடர்பு:09:58 (07/12/2017)

வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, பசில் தம்பி... ரஞ்சி, ஐ.பி.எல் டு இந்தியன் டீம்... ஒரு ரவுண்டப்!

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் விதமாக, இலங்கைக்கு எதிரான டி-20, ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுத்து, கேப்டன் பொறுப்புக்கு ரோகித் சர்மாவை டிக் செய்தது தேர்வுக்குழு. கோலிக்கு ஓய்வு எதிர்பார்த்ததே. டி - 20 அணியில் மூன்று புதுமுகங்கள் இடம்பெற்றிருப்பதுதான் விஷயம். வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, பசில் தம்பி என உள்ளூர் கிரிக்கெட்டில் ஜொலித்தவர்கள் மீது கண் வைத்துக் கொத்தியதற்காகவே தேர்வாளர்களுக்குப் பூங்கொத்து.  முதன்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காத்திருக்கும் அந்த டொமஸ்டிக் ஸ்டார்கள்  பற்றி ஒரு சின்ன அப்டேட்.

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன்


கடந்த ஐ.பி.எல் சீசனை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. தமிழ்நாடு கிரிக்கெட்டின் அழகிய வார்ப்பு. மோஸ்ட் வான்டட் ஆல் ரவுண்டர்.  தமிழ்நாடு பிரீமியர் லீக்  (டிஎன்பிஎல்) தொடரில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஐ.பி.எல்-லில் புனே அணியின் சொத்து.. அப்படி என்ன ஸ்பெஷல் இவரிடம்?

தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடிவரும் 18 வயதான வாஷிங்டன் சுந்தர், டாப் ஆர்டரில் பட்டையைக் கிளப்பும் இடது கை பேட்ஸ்மேன். ஆஃப் ஸ்பின்னர்.  டி - 20 ஃபார்மட்டில்  கையில் பேட்டைக் கொடுத்தாலும் சரி, பந்தைக் கொடுத்தாலும் சரி, இரண்டில் ஏதாவதொன்றில் மேட்ச் வின்னராக ஜொலிப்பார்.  கன்சிஸ்டன்ஸி அவரது ப்ளஸ். நெருக்கடியான நேரங்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு பெரிய டார்கெட்களை செட் செய்வதிலும், ஆஃப் பிரேக்  மூலம் துல்லியமாக பந்துவீசி,  ரன்ரேட்டை கட்டுப்படுத்துவதிலும் பக்கா.

 
கடந்த அக்டோபரில் ரஞ்சியில் முதல் சதத்தைப் பதிவுசெய்த இவர் இதுவரை 12 முதல் தர போட்டிகளில் 532 ரன்கள் குவித்துள்ளார். டாப்ஸ்கோர் 159.  துலீப் டிராஃபி தொடரில் ஒரே போட்டியில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி, இரண்டு இன்னிங்சிலும் முறையே 88 மற்றும் 42 ரன்கள் விளாசி, மெர்சல் ஆல் ரவுண்டர் எனப் பெயரெடுத்தார்.  டி.என்.பி.எல் தொடரில்  9 ஆட்டங்களில் 459 ரன்கள். இதில் ஒரு சதம் ,15 பந்துகளில் அதிவேக அரைசதம் சாதனை உட்பட மூன்று அரைசதங்கள் என விருதுகளை அள்ளினார். போதாக்குறைக்கு பெளலிங்கில் 15 விக்கெட்டுகள். அந்தத் தொடரின் செகண்ட் லீடிங் விக்கெட் டேக்கர்.  

கடந்த ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்காக களம்கண்ட இவர்  மும்பைக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை அள்ள, உடனே லைம் லைட்டுக்கு வந்தார். ஐ.பி.எல், டி.என்.பி.எல், முதல் தர போட்டிகள் என அனைத்திலும் பட்டையைக் கிளப்ப, வாஷிங்டன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தியிருக்கிறது இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு. 

தீபக் ஹூடா

வாஷிங்டன், தீபக் ஹூடா

தீபக் ஹூடா, ஐ.பி.எல் ரசிகர்களுக்குப் பரிச்சயமான பெயர். 2016 ஐ.பி.எல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டரான  இவர் அதற்குமுன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர். 2014-ல் நடந்த அண்டர் - 19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஜொலித்த வீரர்களில் இவர்தான் முக்கியமானவர். 2016 ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்ல காரணமாக இருந்த கீ பிளேயர்களில் இவரும் ஒருவர். சரி, பெர்பாமன்ஸ் எப்படி?

ரஞ்சி கோப்பையில் பரோடா அணிக்காக விளையாடும் 22 வயது தீபக் ஹூடா ஹேண்ட் பவர் நிறைந்த வலது கை பேட்ஸ்மேன்.  பவர்ஃபுல் ஹிட்டர். துல்லிய ஆஃப் ஸ்பின்னர். மொத்ததில்  நிறைவான ஆல்ரவுண்டர். 3 வருடங்களாக ஐ.பி.எல் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடிக்கொண்டிருக்கும் இவருக்கு அந்த அனுபவம் கூடுதல் பலம். இந்த வருடத்தைவிட போன வருட (2016) ஐ.பி.எல் தொடரில் இவரது டாப் பெர்ஃபார்மன்ஸ் இவருக்கு  நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க, அணியில் தனக்கென ஒரு இடத்தையும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஐ.பி.எல் போலவே முதல் தர போட்டிகளிலும் சோடைபோகவில்லை. 

2014-ல் நடந்த அண்டர் - 19 உலகக் கோப்பையில் இரண்டு அரை சதங்களுடன் 235 ரன்கள் குவித்ததுடன் ஒரே போட்டியில் 5 விக்கெட் சாதனை உட்பட  11 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டினார். 2016 ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக 182 ரன்கள் குவித்த இவர் தன் ஒட்டுமொத்த ஐ.பி.எல் கரியரில் ஆறு விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்த ரஞ்சி சீசனில் ஒரு இரட்டைசதம், ஒடிஸாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அரை சதம்,  இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அமர்க்களப்படுத்தியுள்ளார். முதல் தர போட்டிகளில் இவரின் தனிநபர் அதிகபட்சம் 293 ரன்கள். இந்த சீஸனில் டி -20 ஃபார்மட்டில் பரோடா அணிக்காக ஒரு சதமும் அடித்திருக்கிறார். கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் டீசண்டான பெர்ஃபாமன்ஸால் இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார்

பசில் தம்பி

வாஷிங்டன், தீபக் ஹூடா, பசில் தம்பி

கேரளாவின் எர்ணாகுளத்தை சொந்த ஊராக கொண்ட வேகப்பந்துவீச்சாளர். இவரும் ஐ.பி.எல் ஸ்டார்தான். குஜராத் லயன்ஸ் அணியின் டாப் பவுலர்களில் ஒருவர். இந்த ரஞ்சி சீசனில் கேரளா அணி காலிறுதியை எட்ட முக்கியக் காரணம் இவரின் டாப் கிளாஸ் பவுலிங்தான். கடந்தமுறை ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் இரண்டாவது லீடிங் விக்கெட் டேக்கரான இவர் இந்தியா ஏ அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய பசில், பும்ராவைப் போலவே யார்க்கர் வீசுவதில் கெட்டிக்காரர்.  24 வயதான இவரால் துல்லியமாக யார்க்கர் வீசுவதோடு மட்டுமல்லாது, ஜாகிர் கானைப் போல பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும் வல்லவர். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் டெத் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களின் நைட்மேர் . இவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கையும் அசாத்தியம்.

கடந்த ஐ.பி.எல் சீஸனில் முதன்முதலாக களமிறங்கிய இவர் 12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  29 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது ஐ.பி.எல் தொடரில் இவரது கரியர் பெஸ்ட்  ”எமெர்ஜிங் பிளேயர் விருதை பசில் வென்றதும் மீடியா வெளிச்சம் இவர்மீது பாய்ந்தது. கேரளா அணிக்காக முத்திரை பதித்துவரும் இவர், முதல் தரப் போட்டிகளில் 28, டி-20 ஃபார்மட்டில் 37 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

கலக்குங்க பாய்ஸ்!


டிரெண்டிங் @ விகடன்