வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (07/12/2017)

கடைசி தொடர்பு:09:44 (10/01/2018)

ரெய்னாவுக்கு 'எஸ்'... அஷ்வினுக்கு 'நோ'... சி.எஸ்.கே முதல் மும்பை இந்தியன்ஸ் வரை யாரை ரீடெய்ன் செய்யலாம்? #IPL2018 #CSK

'தி பாய்ஸ் ஆர் பேக்' பி.ஜி.எம்தான் இப்போது வைரல். சென்னை சூப்பர் கிங்ஸின் கம்பேக் கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜியை அதிகரித்துள்ளது. நேற்று கூடிய ஐ.பி.எல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதனால் தோனி, மீண்டும் மஞ்சள் ஜெர்சி அணிந்து, சேப்பாக்கத்தில் வலம் வருவது உறுதியாகிவிட்டது. வேறு யாரையெல்லாம் சென்னை தக்கவைத்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும். மற்ற அணிகள் யாரையெல்லாம் தக்கவைத்துக்கொள்வார்கள்? #IPL2018

Player retention-யைப் பொறுத்தவரையில், சில விதிமுறைகள் இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள்வரை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அவற்றுள் 2 மட்டுமே வெளிநாட்டு வீரர்களாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் 3 வீரர்கள்வரை மட்டுமே நேரடியாகத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்திய அணியில் விளையாடிய வீரர்கள் அதிகபட்சம் 3 பேர் இருக்கலாம். மற்ற 2 வீரர்களை 'Right to match' முறை மூலம் ஏலத்தின்போது தக்கவைத்துக்கொள்ளலாம். ஒரு அணி மூன்றுக்கும் குறைவான வீரர்களையே தக்கவைத்திருந்தால்,  'Right to match' கார்டை மூன்று முறை வரை பயன்படுத்தலாம். 

#IPL2018

ஏலத்தின்போது ஒவ்வொரு அணியும் 80 கோடி செலவு செய்ய அனுமதிக்கப்படும். அணிகள் வீரர்களைத் தக்கவைத்திருந்தால், அதற்கான தொகை அந்த 80 கோடியிலிருந்து குறைக்கப்படும். தக்கவைக்கப்படும் முதல் வீரருக்கு 12.5 கோடியும், இரண்டாவது வீரருக்கு 8.5 கோடியும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு அணி 3 வீரர்களை நேரடியாகத் தக்கவைக்க 33 கோடிவரை செலவிடலாம். இந்திய அணியில் விளையாடாத ஓர் உள்ளூர் வீரரைத் தக்கவைக்க 3 கோடி ரூபாய் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், எல்லா அணிகளும் நட்சத்திர வீரர்களையே தக்கவைத்துக்கொள்ள விரும்பும். 

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, இதுவரை ஐ.பி.எல் அணிகள் எப்படி ரீடெய்ன் செய்துள்ளன என்பதையும் அலசி எழுதியுள்ளோம். அதுமட்டுமின்றி, எந்த வீரர்களைத் தக்கவைப்பது அணிக்கு நன்மை என்று பார்ப்பதும் அவசியம். எந்தந்த அணிகள், யாரைத் தக்கவைக்கலாம்? பார்ப்போம்...

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை அணியில் இந்திய நட்சத்திரங்கள் ஏராளம். முன்பெல்லாம், மலிங்கா, பொல்லார்டு போன்ற வெளிநாட்டு வீரர்களால்தான் வெற்றிபெறும். இப்போதெல்லாம் இந்திய வீரர்கள்தான் அணியின் மேட்ச் வின்னர்கள். கேப்டன் ரோஹித் ஷர்மா, இப்போது இந்திய அணியின் துணைக் கேப்டன். இலங்கை தொடருக்கு கேப்டனும் ஆகிவிட்டார். அவர் default சாய்ஸ். அவரோடு ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பூம்ரா ஆகியோரையும் தக்கவைத்துக்கொள்வார்கள். டி-20 ஸ்பெஷலிஸ்ட்களான இருவரும் நிச்சயம் பெரும் தொகைக்கு ஏலம் போவார்கள். ஹர்திக் ஏலத்தொகையில் புதிய சாதனைகூடப் படைக்கலாம். அதனால் அவர்களை ஏலத்துக்கு விடுவது புத்திசாலித்தனம் அல்ல. என்வே ரீடெய்ன் செய்வதற்கான 3 ஆப்ஷன்கள் இவர்களாகத்தான் இருப்பர்.  

Mumbai Indians

'Right to match' கார்டு மூலம் பொல்லார்டை மும்பை வாங்கக்கூடும். 10 சீசன்களிலும் அந்த அணிக்காக ஆடிய ஒரே வீரர் ஹர்பஜன். ஆனால், போன சீசனில் அவ்வப்போது ஓரங்கட்டப்பட்டார். அதனால் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை. மலிங்கா, பட்லர் போன்றவர்கள் போன சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. ஏற்கெனவே 3 இந்திய வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டதால், இனி இன்னொரு இந்திய வீரரைத் தக்கவைக்க முடியாது. எனவே இரண்டாவது  'Right to match' கார்டு குரூனல் பாண்டியாவுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு நல்ல கிராக்கி இருக்கும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

வீரர்களைத் தக்கவைக்கும் முடிவுக்கு கொல்கத்தாவுடன் சேர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தது பஞ்சாப் அணி. எப்போதுமே அவர்கள் இந்த முறையை விரும்பியதில்லை. கடந்தமுறைகூட மனன் வோஹ்ராவை மட்டுமே தக்கவைத்தனர். ஆனாலும், மேக்ஸ்வெல், மில்லர் போன்ற பெரிய பெயர்கள் இருப்பதால் அவர்களை தக்கவைக்கக்கூடும். இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே சாத்தியம் என்பதால், ஸ்டோய்னிஸ் ரிலீஸ் செய்யப்படலாம். ப்ரீத்தி ஜிந்தாவின் ஃபேவரைட் சான் மார்ஷ்-க்கு அவ்வளவு பெரிய தொகை வொர்த் இல்லை. ஆனாலும், அவர் ஏலத்தில் பஞ்சாப் அணியால் வாங்கப்படுவார் என்பது உலகறியும்!

Kings XI Punjab

இந்திய வீரர்களில் அக்சர் பட்டேல் மட்டுமே தக்கவைத்துக்கொள்ளப்படக்கூடியவர். ஆனால், அவருக்கும் அது பெரிய தொகை. எனவே Right to match கார்டு மூலம் அவர் வாங்கப்படலாம். கிங்ஸ் லெவன் அணி ஒரு வீரரைக்கூட தக்கவைக்காமல் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். முரளி விஜய், சஹா என யாரும் சோபிக்காததால், புதிய அணி உருவாக்கவே நினைப்பார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இவர்களுக்கும் இந்த ஃபார்மெட் பிடிக்கவில்லை. ஆனால், தக்கவைத்துக்கொள்ளத் தகுதியான வீரர்கள் இருக்கிறார்கள். ஓராண்டு தடைக்குப்பின் திரும்பும் ரஸ்ஸல் அணியின் ட்ரம்ப் கார்டாக இருப்பார். அவர் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இரண்டாவது வெளிநாட்டு வீரராக சுனில் நரேன், மோர்னே மோர்கல், ஷகிப் என நிறைய ஆப்ஷன்கள். ஆனால், கிறிஸ் லின் தேர்வு செய்யப்படுவதே புத்திசாலித்தனம். மிகச்சிறந்த டி-20 பேட்ஸ்மேன். காயங்கள் மட்டும் இல்லையெனில் டேவிட் வார்னர் போன்று அச்சுறுத்தல் அளிக்கக்கூடியவர்.

KKR

மூன்றாவது வீரராக மனீஷ் பாண்டே. வயது, திறமை அனைத்தும் உள்ளன. அவரே சரியான சாய்ஸாக இருப்பார். Right to match கார்டை குல்தீப், உத்தப்பா, உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பயன்படுத்தலாம். கம்பீர்...? வயதாகிவிட்ட ஒரே காரணத்துக்காக தாதாவையே கழட்டிவிட்டவர்கள். ரீடெய்ன் செய்து பெரிய தொகை கொடுக்கவேண்டியதில்லை. 36 வயதாகிவிட்டதால், ஏலத்தில் குறைந்த தொகைக்கே எடுக்கப்படுவார். வேண்டுமானால், Right to match கார்டு பயன்படுத்தலாம். அதற்கே தேவை ஏற்படாது. Base price-க்கு வாங்கப்பட வாய்ப்பு அதிகம். வாங்கப்படாமலும் போகக்கூடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் தக்கவைக்கப்படுவார்கள் என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்ததே. பேட்டிங்கில் பலமாக இருந்தாலும், பௌலிங் சொதப்பல்தான் ஆர்.சி.பியை கடைசி வரை பாதித்தது. அதனால், இந்த முறை பௌலிங் யூனிட்டுக்கு முக்கியத்துவம் தரப்படலாம். மூன்றாவது ஆப்ஷனாக சாஹல் அல்லது ஸ்டார்க் டிக் செய்யப்படலாம். தக்கவைக்கப்பட்டவர் அல்லாமல் மற்றவர் Right to match கார்டு மூலம் வாங்கப்படுவது பௌலிங்கை பலப்படுத்தும்.

RCB

இன்னொரு Right to match கார்டை, கே.எல்.ராகுல் அல்லது கேதார் ஜாதவுக்குப் பயன்படுத்தலாம். ராகுல் எந்த இடத்திலும் ஆடக்கூடியவர் என்பதாலும், அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடியவர் என்பதாலும், அவருக்கே பயன்படுத்துவார்கள். கெய்ல், வாட்சன்...போதும் ஆர்.சி.பி. இனியாவது திருந்துங்க!

டெல்லி டேர்டெவில்ஸ்:

இளம் அணியாக வலம்வர நினைத்து பெரிய தோல்வி கண்டனர். டி காக், ஸ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர், சாம்சன், ரிசப் பன்ட் எனப் பல நம்பிக்கை நட்சத்திரங்கள். ஆனால், அவர்களுக்குப் பெரிய தொகை கொடுப்பது ஏலத்தில் பின்னடைவைத்தரும். வேண்டுமானால், கிறிஸ் மோரிசை மட்டும் தக்கவைக்கலாம். கடந்த ஏலத்திலேயே 7 கோடிக்குப் போனவர். பெரும்பாலும் யாரையும் தக்கவைக்காமல் போக வாய்ப்புண்டு.

DD

மோரிஸையும் தக்கவைக்காத பட்சத்தில் Right to match கார்டை 3 முறை பயன்படுத்தலாம். அதன்மூலம், அவரை வாங்க முற்படலாம். மற்ற இரண்டையும் ரிசப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், டி காக் ஆகியோரில் இருவரை வாங்கப் பயன்படுத்தலாம். நாயர் டி-20 ஃபார்மட்டில் எந்த அளவுக்கு ஜொலிப்பார் என்பது கேள்விக்குறியே. அதனால், ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் என 3 மேட்ச் வின்னர்களும் கட்டாயம் தக்கவைக்கப்படுவார்கள். வார்னர் இருப்பதால் Right to match கார்டின்மூலம் ஒரு வெளிநாட்டு வீரரைத்தான் வாங்க முடியும். வில்லியம்சன், முஸ்தாஃபிசுர் போன்ற வீரர்கள் இருந்தாலும், அதை 19 வயது ரஷித் கானுக்காகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். கடந்த சீசனில் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இந்த ஆஃப்கானிஸ்தான் இளைஞர். அனைத்து அணிகளும் நிச்சயம் போட்டி போடுவார்கள். அதனால் அவரை மடக்கிவிட சன்ரைசர்ஸ் மும்முரம் காட்டவேண்டும்.

SRH

யுவராஜ் சிங்கின் வாய்ப்பு எல்லா இடத்திலும் மங்கிவிட்டது. இந்த ஐ.பி.எல் தொடரிலும் அது தொடரலாம். சன்ரைசர்ஸ் அணி, அவரைப் பயன்படுத்தாது என்றே தோன்றுகிறது. அதனால், இரண்டாவது Right to match கார்டை, கடந்த சீசனில் கலக்கிய சித்தார்த் கௌல், முகம்மது சிராஜ் அல்லது தமிழக ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் யாருக்கேனும் பயன்படுத்தலாம். 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

மீண்டும் திரும்பும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரீடெய்ன் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு அணியில் இருந்த வீரர்களை அவர்களும் சென்னையும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கடந்த ஆண்டு வேறு அணியில் ஆடாதவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக, சஞ்சு சாம்சன் 2015-ல் ராஜஸ்தான் அணிக்காக ஆடினார். ஆனால், அந்த அணி தடைசெய்யப்பட்ட காலத்தில், அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிவிட்டார். அவரை டெல்லி அணி தக்கவைக்கலாம். ஆனால், ராஜஸ்தான் அணியால் முடியாது. சென்னை அணிக்கும் இதேதான். புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் ஆடிய வீரர்களை வேண்டுமானால் அவர்கள் தக்கவைத்துக்கொள்ளலாம். 

RR

இப்படிப் பார்க்கையில் ராயல்ஸ் அணிக்கு எஞ்சியிருப்பவர்கள் ரஹானே, ஃபால்க்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெகுசிலரே. ஃபால்க்னர் அவுட் ஆஃப் பார்ம். கண்டிப்பாக அவர் எடுக்கப்படுவது சந்தேகமே. ரஹானே - ராஜஸ்தான் அணியின் தூண். நிச்சயம் அவரை தக்கவைப்பதில் விருப்பம் காட்டுவார்கள். இரண்டாவது வீரராக ஸ்மித்துக்கு 8.5 கோடி அதிகம். எனவே, அவரை ஏலத்தில் விட்டு Right to match மூலம் திரும்பப் பெறலாம். இன்னொரு Right to match வாய்ப்பை தவால் குல்கர்னிக்குப் பயன்படுத்தலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐ.பி.எல் சிங்கங்கள் மீண்டும் வந்துவிட்டன. கம்பேக்கில் கலக்கக் காத்திருக்கிறது சி.எஸ்.கே. தோனி என்ற பெயர் இல்லாமல் சி.எஸ்.கே முழுமை பெறாது. அந்தப் பெயரை ஐ.பி.எல் நிர்வாகமே ஆட்டோமேடிக்காக டிக் செய்துவிடும். அடுத்தது ரெய்னா. இருவரும் நிச்சயம் லிஸ்டில் இருப்பார்கள். மூன்றாவது ஆப்ஷன் யார் என்பதில்தான் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. அஷ்வின் வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். சிலர் ஜடேஜா, பிராவோ என ஆல்ரவுண்டர்களுக்கு சப்போர்ட் செய்யலாம். பிராவோவை தேர்வு செய்வதுதான் அணிக்கு நல்லது. பிராவோ மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்பதால், அணி நிர்வாகமும் அவரை தக்கவைக்கவே விரும்பும். 

CSK

இரண்டு Right to match வாய்ப்புகள் யாருக்குப் பயன்படுத்தலாம்? டுபிளஸ்ஸிஸ் இப்போதெல்லாம் பெரிய அளவில் சோபிப்பதில்லை. டுவைன் ஸ்மித் - ரிஸ்க் எடுக்கவேண்டும். மெக்குல்லம் - சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இன்னமும் அவரால் பௌலர்களை அலறவிடும் இன்னிங்ஸ்கள் ஆடமுடியும். ஃபீல்டிங்கிலும் மிகப்பெரிய பலம். ஏற்கெனவே, இப்படியொரு சூழலில் சென்னை அணி மைக் ஹஸ்ஸியை வாங்கியுள்ளது. அதனால், இம்முறை மெக்குல்லம் வாங்கப்படலாம். அஷ்வினா? ஜடேஜாவா? பௌலராக, அஷ்வினைவிட வாஷிங்டன் சுந்தர் நல்ல ஆப்ஷன். அதனால் அவரை முயற்சி செய்யலாம். பேட்டிங்கிலும் அணிக்குப் பலம் சேர்ப்பார். ஆக, இரண்டாவது Right to match கார்டு ஜடேஜாவை சென்னைக்கு அழைத்துவர உதவும்.

இவை, நமது எதிர்பார்ப்பும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கணிப்பும்தான். ஒவ்வொரு அணியும் இப்படியே முடிவு எடுக்குமா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. பல முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்படலாம். உலகறியாத பல இளம் வீரர்கள் கோடிகளில் ஏலம் போகலாம். விளையாட்டு உலகின் சிறப்பே சர்ப்ரைஸ்கள்தானே. அதிலும், ஐ.பி.எல் வேறு லெவல் சர்ப்ரைஸ்கள் கொடுக்கும் தொடர். எது வேண்டுமானாலும் நடக்கலாம்!


டிரெண்டிங் @ விகடன்