`விராட் கோலி வேற லெவல்’ - சங்ககரா சொல்லும் ரகசியம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்ககரா மனம் திறந்துள்ளார்.

டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 287 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி, 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், நடப்பு 2017-ம் ஆண்டில் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் சேர்த்து விராட் கோலி சேர்த்த ரன்கள் 2,818 ஆனது. இந்த வகையில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சங்ககாரா 2,868 ரன்கள் (2014) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,833 (2005) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர். டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், நடப்பு ஆண்டில் இனிமேல் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் பேட் செய்யப்போவதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஜனவரியில் தொடங்கும் டெஸ்ட் தொடரே விராட் கோலி பங்கேற்கும் அடுத்த சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும். 

இந்தநிலையில், விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்ககாராவே தொடர்ந்து முதலிடத்தில் இருப்பார் என்று ரசிகர் ஒருவர் தரவுகளுடன் ட்வீட்டியிருந்தார். அந்த ட்வீட்டுக்குப் பதிலளித்த சங்ககரா, ‘விராட் கோலி பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அந்த சாதனை நீண்ட நாள்கள் தாக்குப் பிடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அநேகமாக இந்தச் சாதனையை அவர் அடுத்த ஆண்டில் முறியடிப்பார். அந்தச் சாதனையையும் அதற்கடுத்த ஆண்டில் அவர் முறியடித்தபடி பயணிப்பார். அவர் வேற லெவல்’ என்று பதிவிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!