வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (08/12/2017)

கடைசி தொடர்பு:10:45 (08/12/2017)

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முத்திரை பதிக்கும்! டிராவிட் நம்பிக்கை

'விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் முத்திரை பதிக்கும்' என்று ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டிராவிட், ’விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என சரியான கலவையில் இருக்கிறது. நமது அணியின் அனுபவ வீரர்கள் பலரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இதனால், தென்னாப்பிரிக்க மண்ணில் சாதிக்க நமது அணி தயாராகவே இருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியின் விளையாட்டைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க மண்ணில், அந்த அணிக்கு பெரிய சவாலை இந்திய அணி நிச்சயம் அளிக்கும். அந்தத் தொடரில் வீரர்களுக்குக் காயம் ஏற்படாமல் இருப்பின், நிச்சயம் பெரிய அளவில் இந்திய அணி சாதிக்கும்’ என்றார். 

நடந்துமுடிந்த இலங்கைத் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்று, ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் சாதனையைச் சமன்செய்தது. வரும் ஜனவரியில் தொடங்கும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரை வென்றால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைக்கும். உள்நாட்டில் தொடர் வெற்றிகளைக் குவித்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்தக் குறையைப் போக்கும் முனைப்பில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுகிறது.