வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (08/12/2017)

கடைசி தொடர்பு:15:49 (08/12/2017)

மறைந்த கிரவுண்ட்மேனுக்கு வெற்றியை அர்ப்பணித்த சென்னை...! #LetsFootball #HeroISL

வழக்கமாக ஆட்டம் முடிந்ததும் நடக்கும் பிரஸ் மீட். வெற்றி பெற்றிருந்தபோதும் கொஞ்சம் 'டல்'லாகத்தான் இருந்தார் சென்னையின் எஃப்.சி பயிற்சியாளர் ஜான் க்ரிகரி. கோவா அணியுடன் தோற்றபோதும் புன்னகை குறையாமல் பேசியவரின் குரல் தழுதழுத்தது. கேள்வி கேட்க பத்திரிகையாளர் மைக்கை வாங்கியதும், "ஜஸ்ட் எ மினிட்" என்றார். டிரான்ஸ்க்ரிப்ட் செய்ய லேப்டாப்களை நோக்கிக்கொண்டிருந்தவர்களின் பார்வை அவர் மீது விழுந்தது. தழுதழுத்த குரலிலேயே, தன் அணியின் வெற்றி யாருக்கானது என்பதை சொல்லத் தொடங்கினார் பயிற்சியாளர்.

"ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது. சென்னை க்ரவுண்ட்ஸ்மேன் ராஜி கடந்த வாரம் இறந்துவிட்டார். இந்த ஆடுகளத்தை அமைப்பதற்குக் கடுமையாக உழைத்தவர். மிகச்சிறப்பாகச் செயல்பட்டவர். அவரை இழந்தது துரதிருஷ்டவசமானது. அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அவருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம்" என்று முடித்தார். அந்த அறை சில நொடிகள் மௌனத்தால் நிரம்பியிருந்தது. அதுவும் அவருக்கான அஞ்சலிதானோ!

ISL

அந்த வெற்றி உண்மையில் அந்த மரணத்துக்குச் சமர்ப்பணம் செய்யக்கூடியதுதான். அவன் பராமரித்த அந்த பிட்சில், தன் வீரர்கள் கடைசி நொடி வரை போராடினார்களே, கூடியிருந்த 17,192 ரசிகர்களும் 90 நிமிடமும் தங்களை மறந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனரே, பரபரப்புக் குறையாத அந்தப் போட்டியைப் பார்த்த அனைவரும், சென்னையின் எஃப்.சி, ATK இரு அணிகளும் ஆடிய கால்பந்தால் வசியப்பட்டிருந்தனரே... இந்த வெற்றி சமர்ப்பணம் செய்யக்கூடியதுதான்!

ராஜிக்கு மொத்த மைதானமும், மௌன அஞ்சலி செலுத்தியபிறகே ஆட்டம் தொடங்கியது. அந்த நிசப்தம், முதல் பாதியில் கர்ஜனையாக மாறிடவில்லை. இரு அணிகளும் மாறி மாறி பந்தைக் கடத்துவதும் இழப்பதுவுமாக இருக்க, கோலோ, கோல் முயற்சியோகூடப் பெரிய அளவில் இல்லை. ஆனால், கடைசி 15 நிமிடங்கள், நேரு அரங்கம் அதிர்ந்தது. ஒரு நொடிகூட மௌனம் என்பதை உணர முடியவில்லை. இரு அணிகளின் வேகத்திலும், துல்லியத்திலும் மில்லியன் மடங்கு மாற்றம். சென்னை அலறிக்கொண்டே இருந்தது.

முதலில் விங்கில் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ATK அணி, ஒரு கோல் பின்தங்கியபின் வெகுண்டெழுந்தது. மான்செஸ்டர் ஜாம்பவான் ராபீ கீன் களத்தில் இருந்தது, அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. பாஸிங் பெர்ஃபெக்டாக இருந்தது. இடதுபுறமிருந்து அடிக்கப்பட்ட கிராஸ், சென்னை வீரர் இனிகோ கால்டிரான்மீது பட்டுத் திரும்பியது. அதை தனபால் கணேஷ் க்ளியர் செய்தார். ஆனால், ஷாட் நன்றாக அடிக்கப்படாததால் பந்து பாக்ஸைத் தாண்டவில்லை. குகியிடம் சிக்கிய பந்தை, கேப்டன் செரோனோ உதைத்துவிட, அது ATK வீரர் ஜெகுனியாவிடம் மாட்டிக்கொண்டது. கோல்! 77-வது நிமிடத்தில் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.

ISL

அந்த நிமிடத்திலிருந்து, ஆட்டம் இன்னும் சூடு பிடித்தது. பாக்ஸுக்குள் படம் காட்டத் தொடங்கினர் சென்னை வீரர்கள். அடுத்த ஏழாவது நிமிடம் மீண்டும் ஆட்டத்தில் முன்னிலை பெற்றது சென்னை. இடது விங்கில் பந்தை கன்ட்ரோல் செய்திருந்த நெல்சன், பாக்ஸுக்குள்ளிருந்த ரெனே மிஹிலெச்சுக்கு பாஸ் செய்ய, அதை அவர் ஜெர்ரிக்குக் கொடுத்தார். பாக்ஸுக்கு வெளியே இனிகோ மார்க் செய்யாமல் இருப்பதை அறிந்த ஜெர்ரி, அருமையாக பாஸ் போட, இனிகோ அடித்த ஷாட், ATK வீரர் டாம் தோர்ப்பின் காலில் பட்டு கோலானது. பதினேழாயிரம் ரசிகர்களின் ஆரவாரத்தில் ஆடிப்போனது நேரு மைதானம்.

ATK ஓயவில்லை. ஐந்தே நிமிடங்களில் பதில் கோல் போட்டு, சென்னை ரசிகர்களின் ஆரவாரத்தை அடக்கியது. ராபீ கீனின் வேற லெவல் பாஸை குகி கோல் அடித்து மீண்டும் ஆட்டத்தை சமனாக்கினார். வெற்றி வாய்ப்பு மீண்டும் பறிபோன ஏக்கத்தில் ரசிகர்கள் அசைவின்றி இருக்க, 5 நிமிடம் stoppage time என்று அறிவிக்கிறார் fourth official. "ஐந்து நிமிடத்தில் கோல் அடித்துவிடுவோமா?" பதினேழாயிரம் மனங்களுக்கும் ஏக்கம். ஆனால், அந்த ஏக்கமோ, குழப்பமோ நீல உடையணிந்து களத்தில் ஆடிய 11 பேருக்குக் கொஞ்சம் கூட இல்லை. டிராவிலிருந்து வெற்றியை அடைய, அவர்களுக்கு 2 நிமிடங்கள்தான் தேவைப்பட்டது. 

ISLA Jeje

ஆம், சென்னை மின்னல் வேகத்தில் கோல் திருப்பி வெற்றியை வசமாக்கியது. அந்த வெற்றி கோலை அடித்தது - 'ஸ்னைப்பர்' ஜீஜே. முதல் 3 போட்டிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காதவர், இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 65-வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தவரும் அவரேதான். சென்னை ரசிகர்களுக்கு இருப்புகொள்ளவில்லை. சாம்பியன் ஆனதுபோல் கொண்டாடினர். தோற்கடித்திருப்பது சாம்பியனை ஆயிற்றே. அதுவும் இப்படி 15 நிமிடங்களில் 4 கோல்கள் விழுந்தால்..?

தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்றுவிட்டது சென்னை. புள்ளிப்பட்டியலில் முதலிடம். 1 புள்ளி மட்டுமே வரவேண்டிய போட்டியிலும், 3 புள்ளிகள் பெற்றுவிட்டது. இந்த மூன்று புள்ளிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறுவதில் முக்கியப் பங்குவகிக்கும். ஆனால், அதைவிட, இந்த 3 புள்ளிகள் கால்பந்து அரங்கில் வாழ்ந்து இறந்தவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுதான், அதற்கான மரியாதை! Football is more than a game.