தரம்சாலாவும், இந்திய அணியின் மோசமான சாதனைகளும்!

இலங்கை அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ஸ்ரேயாஸ் ஐயர்.


அண்மையில் இலங்கை சென்று விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்து வென்றுவந்திருந்தது. மேலும், கேப்டனாக ரோகித் ஷர்மாவுக்கு முதல்தொடர் இது என்பதாலும், விராட் கோலி இல்லாத இந்திய அணி என்பதாலும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை இலங்கை அணியின் கேப்டன் திசாரா பெரேரா தேர்வு செய்தது சரி என்பது போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து, இந்திய அணியின் விக்கெட் சரிவைத் தொடங்கிவைத்தார். சொந்த மண்ணில் 4 ரன்களுக்குள் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக இந்தியா இழப்பது கடந்த  இருபது ஆண்டுகளில் இதுவே முதல்முறை. முன்னதாக, மும்பையில் கடந்த 1997-ல் நடந்த போட்டியில் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

தினேஷ் கார்த்திக்-கின் மோசமான சாதனை:

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 18 பந்துகளைச் சந்தித்த, தினேஷ் கார்த்திக் ரன்கணக்கைத் துவங்காமலேயே ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகளைச் சந்தித்து, ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற ஏக்நாத் சோலங்கியின் சாதனையை அவர் முறியடித்தார். அவர் 17 பந்துகளில் ஆட்டமிழந்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் கடந்த 1974-ல் நடந்த போட்டியில் சோலங்கி, 17 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார். மேலும், இன்றைய போட்டியில் 15 பந்துகளை எதிர்க்கொண்ட பும்ராவும், ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 11. முதல் பவர் ப்ளே ஓவர்களில் இந்திய அணியின் குறைந்தபட ஸ்கோர் இதுவே.

அதேபோல், இன்றைய போட்டியில் இந்திய அணி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் இந்திய அணி இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பாக கடந்த 1983-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அந்த போட்டியில் கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் அடித்து அசத்த, இந்தியா அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பியது. மேலும், சொந்தமண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் 112 ஆகும். இதற்கு முன்பாக, கடந்த 1986-ல் இலங்கை அணிக்கெதிரான கான்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் 78 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அஹமதாபாத் மைதானத்தில் கடந்த 1993-ல் நடந்த போட்டியில் 100 ரன்களும் எடுத்ததே இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!