வெளியிடப்பட்ட நேரம்: 07:42 (11/12/2017)

கடைசி தொடர்பு:14:35 (11/12/2017)

‘முழிச்சுக்கோ!’ இந்தியாவுக்கு இலங்கையின் எச்சரிக்கை மணி #INDvsSL

கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் தோல்வி. இந்தியாவுடன் இந்த ஆண்டு ஆடிய 4 தொடர்களிலும் தோல்வி. அணி தேர்வில் அதிரடி மாற்றங்கள். புதிய கேப்டன். இலங்கை அணி தரம்சாலாவில் களம்காணும் முன்பாகவே எக்கச்சக்க பிரஷர். இந்தத் தொடரில் இலங்கையை வைட்வாஷ் செய்தால், ஒருநாள் ரேங்கிங்கில் இந்தியா முதலிடம் பெறலாம். ‘இந்தியா நிச்சயம் முதலிடம் பெற்றுவிடும்' என்றுதான் அனைவரும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால்.... நடந்ததோ வேறு. கத்துக்குட்டி என நினைத்திருந்த இலங்கையிடம் தோல்வி. படுதோல்வி. அதுவும், 112 ரன்னுக்கு ஆல் அவுட். என்னதான் ஆச்சு? #INDvsSL

INDvsSL

“நான் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன்" - டாஸ் முடிந்ததும், இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன வார்த்தை. இந்திய அணியின் கேம் பிளானே தவறாகத்தான் இருந்தது. ஆட்டம் நடந்தது தரம்சாலாவில். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இடம். அதனால்தான் போட்டி 2 மணி நேரம் முன்னதாகத் தொடங்கப்பட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, அது பந்துவீச்சாளர்களுக்குப் பாதகாமக அமையும். அதனால், சேஸிங் செய்வதையே கேப்டன்கள் விரும்புவார்கள். அதைத்தான் திசாரா பெரேராவும் விரும்பியிருக்கிறார். ஆனால், ரோஹித்....?

அணியின் பிளேயிங் லெவனைப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ரஹானே சேர்க்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தது தவறில்லை. இதுதான் சரியான நேரம். ஆனால், அவரை எங்கு இறக்கியிருக்கவேண்டும்? இந்தியா தடுமாறுவது 4,5-வது இடங்களில்.  அந்த இடத்தில் யார் ஆடவேண்டும் என்பதைத்தான் இதுபோன்ற தொடர்களில் தீர்மானிக்கவேண்டும். ஆனால், அவரை இறக்கியது கோலியின் இடத்தில். அதுவே அவருக்கு மிகப்பெரிய நெருக்கடி. அவரால் நிச்சயம் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடியிருக்க முடியாது.

INDvsSL Dickwella

மிடில் ஆர்டர் பிரச்னைகளை இந்தியா தீர்க்க முற்படுவதுபோல் தெரியவில்லை. இந்த இலங்கை அணியுடன் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே களமிறங்கியததாகத் தெரிந்தது. “எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில்கொண்டே அணி தேர்வு செய்யப்படுகிறது” என்று ஒவ்வொருமுறையும் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத் கூறுகிறார். ஆனால், பிளேயிங் லெவன் அந்த எண்ணத்தோடு தேர்வு செய்யப்படுவதில்லை. பௌலிங் பாண்டியாவோடு முடிந்துவிடுகிறது. கேதர் ஜாதவ் இடத்தில் இன்று மனீஷ் பாண்டே! 113 ரன் டார்கட் என்பதால் ஆறாவது பௌலர் தேவைப்படவில்லை. ஆனால், முழுமையாக 10 ஓவர்கள் வீசுமளவு பாண்டியா ரெடி என்று நம் அணியினர் முடிவுசெய்துவிட்டனரா? நாம் அடுத்து ஆடப்போவது தென்னாப்பிரிக்கா என்பது ரோஹித், ரவி சாஸ்திரிக்கு நினைவில்லையா? 

சரி, மேட்சுக்கு வருவோம். அணியின் 30 ரன்களாக இருக்கும்போது, பாண்டியாகூட இதுவரை களமிறங்கியிருக்க மாட்டார். ஆனால், நேற்று குல்தீப் களமிறங்கிவேண்டிய நிலை. 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. இது, அந்த 7 பேட்ஸ்மேன்களின் அலட்சியம் என்று சொல்லிட முடியாது. திரும்பத்திரும்ப நாம் இந்திய கிரிக்கெட்டின்மீது வைத்துவரும் குற்றச்சாட்டுதான் இதற்குக் காரணம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காத ஆடுகளம்... இன்னும் இந்திய பாடம் கற்கவில்லை.

INDvsSL

தவான் பேட்டிங். 'ஓவர் ஸ்டிக்' திசையிலிருந்து பௌலிங் செய்கிறார் மேத்யூஸ். குட் லெந்த்தில், மிடில் ஸ்டம்ப் லைனில் பால் பிட்ச் ஆகிறது. வழக்கமான இந்திய ஆடுகளங்களில், அப்படிப் பிட்ச் ஆகும் பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும். அந்த மைண்ட்செட்டில்தான் தவானும் இருக்கிறார். ஆனால், கொஞ்சம் ஸ்விங் ஆகிறது. எதிர்பார்க்கவில்லை. சுதாரித்து அடிக்கமுடியவில்லை. pad-ல் அடிக்கிறது. அவுட். இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு பூஜ்யம்!

ரோஹித்... குட் லெந்த்தில் வீசுகிறார் லக்மல். மீண்டும் பந்து பேட்டுக்கு வெளியே ஸ்விங் ஆகிச்செல்கிறது. கொஞ்சம் பௌன்ஸ் வேறு. பௌன்ஸை ரோஹித் எதிர்பார்க்கவில்லை. அவுட். இரண்டுக்கு இரண்டு! லக்மல், மேத்யூஸ் இருவரின் பந்துவீச்சிலும் அவ்வளவு துல்லியம். கொஞ்சம் கூட டைமிங் கொடுக்கவில்லை. பெரும்பாலான பந்துகள் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்டன. ஆனால், இருபுறமும் அவர்கள் ஸ்விங் செய்ததில்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் திக்குமுக்காடிப் போயினர். ஸ்விங் ஆகி வெளியே சென்ற பந்து ரோஹித்தைக் காவு வாங்கியது. இன்ஸ்விங் பாலுக்கு தினேஷ் கார்த்திக் அவுட்.

Lakmal

முந்தைய தொடர்களில் சொதப்பியதால், ஏற்கெனவே மனீஷ் பாண்டே மீது பிரஷர். அவர் ஆடவந்த சூழ்நிலை. அதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றது. 15 பந்துகள் ஆடிய அவரிடம், கொஞ்சம் கூட ஃபூட் மூவ்மென்ட் இல்லை. இவரும் லக்மலின் ஸ்விங்குக்கு பலியானார். ஸ்ரேயாஸ்...அதுவரை கொஞ்சம் பொறுமை காட்டியவர், நுவான் பிரதீப் வீசிய அந்தப் பந்தில் பேராசைப்பட்டு அவுட்டானார். அதுவரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்த லெந்த்திலிருந்து மாறுபட்டு, ஃபுல் லெந்த்தில், வெளியே வீசினார் பிரதீப். கட் செய்ய நினைத்து இன்சைடு எட்ஜாகி வெளியேறினார். 

இவரைப் போலத்தான் பாண்டியாவும். அணி இருந்த நிலையில் எதற்கு அவ்வளவு அவசரம் காட்டினார் எனப் புரியவில்லை. 'இப்படித்தான் ஆடவேண்டும்' என்று எந்தத் திட்டமும்  இல்லை. அதற்கு முன் 5 பேட்ஸ்மேன்கள் எப்படி அவுட்டானார்கள் என்ற சிந்தனையும் இல்லை. அவற்றையெல்லாம் யோசித்து, ஒரு மெச்சூர்டு இன்னிங்ஸ் ஆடும்வரை, சிறந்த ஆல்ரவுண்டர் ஆகிட முடியாது ஹர்டிக்! பேட்ஸ்மேன்களே இப்படி வெளியேற, பௌலர்கள் அவுட் ஆனதை குறைசொல்ல முடியாது. குல்தீப் - நேற்று அணியின் இரண்டாவது பெஸ்ட் பேட்ஸ்மேன். நிச்சயம் பாராட்டப்படவேண்டும். 

Dhoni

இப்படி எல்லோரும் வருவதும் போவதுமாக இருக்க, பலரும் ஓய்வு பெறச்சொன்னவர் மட்டும் ஓயாமல் நின்று ஆடிக்கொண்டிருந்தார். தோனி அடித்த 65 ரன்கள்தான், மிகக்குறைந்த ஸ்கோர் எடுக்காமல் இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றியது. இந்த இன்னிங்ஸ் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு மிகச்சிறந்த பாடம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகும், பிட்ச்சின் தன்மை அறிந்த பிறகும், அதற்குத் தகுந்தாற்போல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிட்ச் ஸ்விங் ஆவதை உணர்ந்து, முடிந்தவரை கிரீஸிலிருந்து வெளியேவந்து ஆடவே முற்பட்டார் தோனி. அவர் நிலைத்து நின்று ஆட மிகமுக்கியக் காரணம் இதுதான். மற்ற பேட்ஸ்மேன்களின் ஃபூட் வொர்க் - தரவரிசையில் கடைசி இடத்திலிருக்கும் அணி பேட்ஸ்மேன்களைப் போலத்தான் இருந்தது.

Dhoni

‘யானைக்கும் அடி சறுக்குவது போல' என்று இந்தத் தோல்வியை எடுத்துக்கொள்ள முடியாது. கோலி இல்லாததால் ஏற்பட்ட தோல்வி என்றும் மூடி மறைத்திட முடியாது. ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை, இந்தப் போட்டியும், கொல்கத்தா டெஸ்ட் போட்டியும் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டன. இனியும், கான்பூர், நாக்பூர் ஆடுகளங்களில் ஆடும் அதே மைண்ட்செட்டோடு ஆடினால், தென்னாப்பிரிக்காவில் இந்தியா வைட்வாஷ் செய்யப்படும். அணியைத் தேர்வு செய்வதில் இருந்து, ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் ஆடுவதுவரை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்தியா தக்குப்பிடிக்க முடியும். இலங்கையுடனான இந்தத் தோல்வி, வெளிநாட்டுத் தொடர்களுக்கு இன்னும் ரெடியாகாத இந்திய அணிக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி!


டிரெண்டிங் @ விகடன்