ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் பெங்கால், கர்நாடகா #RanjiTrophy2017

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு கர்நாடகா மற்றும் பெங்கால் அணிகள் தகுதிபெற்றன. கர்நாடகா, பலம் வாய்ந்த மும்பை அணியையும், பெங்கால் அணி நடப்புச் சாம்பியன் குஜராத் அணியையும் வீழ்த்தின. மற்ற காலிறுதிப் போட்டிகளில் விதர்பா மற்றும் டெல்லி அணிகளும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில், குஜராத், பெங்கால் அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்கால் அணி 354 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து ஆடிய குஜராத் அணி, 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஞ்சிக் கோப்பை நாக் அவுட் போட்டிகளைப் பொறுத்தவரை, ஆட்டம் டிராவானால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதனால், பெங்கால் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் பொறுமையாக ஆடியது. அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, தங்கள் பௌலர்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டி, டிக்ளேர் செய்யாமல், அந்த அணி முழுமையாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 695 ரன்கள் எடுத்தது. ரித்திக் சாட்டர்ஜி இரட்டைச் சதமும், மஜும்தார் சதமும் விளாசினர். அபிமன்யு ஈஸ்வரன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். 

ரஞ்சிக் கோப்பை - கம்பீர்

மத்தியப் பிரதேச அணியுடனான போட்டியில், டெல்லி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் மத்தியப் பிரதேசம் 338 ரன்களும், டெல்லி 405 ரன்களும் எடுத்தன. 67 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்தியப் பிரதேச அணி, விகாஸ் மிஸ்ராவின் சுழலில் சிக்கி, 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெற்றி இலக்கான 217 ரன்களை, 3 விக்கெட் இழப்புக்கு எட்டியது டெல்லி. முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் 95 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

மூன்றாவது காலிறுதிப் போட்டியில், கேரளா மற்றும் விதர்பா அணிகள் மோதின. முதலில் ஆடிய விதர்பா, 246 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கேரளா, 176 ரன்களிலேயே சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடிய விதர்பா அணி, 9 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் கேரளா சொதப்பல் ஆட்டம் ஆடி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

ரஞ்சிக் கோப்பை - வினய்

நாக்பூரில் நடந்த போட்டியில், பலம் வாய்ந்த மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. வினய் குமாரின் வேகத்தில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் வேகமாக வெளியேறினர். கடைசியில் குல்கர்னி (75 ரன்கள்) கைகொடுக்க, 173 என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது மும்பை. ஸ்ரேயாஸ் கோபாலின் சதம், 4 வீரர்களின் அரைசதம் என மும்பை அணியின் பௌலிங்கைப் பதம்பார்த்த கர்நாடகா, 570 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் கௌதம் 6 விக்கெட் வீழ்த்தி மிரட்ட, 377 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மும்பை. இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி பெற்றது.

அடுத்த வாரம் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், பெங்கால் அணி டெல்லியையும், கர்நாடகா அணி விதர்பாவையும் எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் டிசம்பர் 17 முதல் 21 வரை நடைபெறும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!