வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (13/12/2017)

கடைசி தொடர்பு:16:25 (13/12/2017)

கடைசி ஓவரில் மனைவியின் திக் திக் நிமிடங்கள்... இரட்டை சதம் விளாசி சாதித்த ரோஹித் சர்மா

இலங்கை அணிக்கெதிராக இன்று நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும். 

Rohit


இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி. 

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பத்தில் நிதானமாக ஆரம்பித்து பின்னர் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தவான் 67 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ், 70 பந்துகளுக்கு 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கடைசி பந்து வரை களத்தில் இருந்த ரோஹித், ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 392 ரன்கள் குவித்துள்ளது. 

கடைசி ஓவரில் பதற்றம்:

ரோஹித் மற்றும் மனைவி

கடைசி ஓவரின்போது 191 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் கேப்டன் ரோஹித். பெரெரா கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் வீச, இன்னும் மூன்று ரன்களே எடுக்க வேண்டும் என்ற நிலையில், லான்ங்-ஆனில் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு கால் செய்தார் ரோஹித். எதிரே இருந்த சக வீரரான ஹர்திக் பாண்ட்டியாவும் அதற்கு ஈடு கொடுத்தார். ஒரு கட்டத்தில் ஹர்திக், சுலபமாக இரண்டாவது ரன்னை ஓடி முடிக்க, ரோஹித் டைவ் அடித்து ரன்னை கம்ப்ளீட் செய்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித்தின் மனைவி கண்ணில் கண்ணீர் கசிந்தது. அடுத்த பந்தில் மிட்-ஆனுக்கு பந்தைத் தட்டி, சுலபமாக இரண்டு ரன்கள் எடுத்தார் ரோஹித். ஒரு வழியாக 151 பந்துகளுக்கு 200 ரன்களைக் கடந்த பின்னர், ரோஹித்தின் மனைவி ஆனந்த கண்ணீரில் துள்ளிக் குதித்து உற்சாகப்படுத்த, அரங்கமே இந்திய அணி கேப்டனுக்கு எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரோஹித்துக்கு ஆட்டம் முடிந்தவுடன் இலங்கை அணி வீரர்களும் கை கொடுத்து பாராட்டினர்.