வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (14/12/2017)

கடைசி தொடர்பு:15:00 (14/12/2017)

மைதானத்துக்குள் நுழைந்து தோனியின் காலைத் தொட்டு வணங்கிய ரசிகர்!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள்கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. 

PhotoCredit: Instagram/IndianCricketTeam


மொகாலியில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் பேட்செய்த இந்திய அணி, கேப்டன் ரோகித் ஷர்மாவின் சாதனை இரட்டைச் சதத்தின் (208*) உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரட்டை சதத்தைப் பூர்த்திசெய்த ரோகித் ஷர்மா, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தனது இரண்டாவது திருமண நாளில் இரட்டை சதம் விளாசிய ரோகித் ஷர்மா, அதைத் தனது மனைவிக்கு பரிசாக அளிப்பதாகக் கூறியிருந்தார். 

ரோகித் ஷர்மாவின் இரட்டை சதம் தவிர, வேறு ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் மொகாலி  போட்டியில் நடந்தது. இந்திய அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்துவிட்டார். அவரைத் தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாவலர் ஒருவர் பின்தொடர்ந்து ஓடிவந்தார். ஆனால், அவரைவிட வேகமாக ஓடிவந்த அந்த ரசிகர், கீப்பிங் செய்துகொண்டிருந்த தோனியை நோக்கி ஓடினார். தோனியிடம் சென்று அவரது காலைத் தொட்ட பின்னரே, அந்த ரசிகரின் ஓட்டம் நின்றது. காலில் விழ முயன்ற ரசிகரை தோனி தடுத்து நிறுத்த முற்பட்டும் அது நடக்கவில்லை. இதையடுத்து, ரசிகரைத் துரத்தி வந்த பாதுகாவலர், மைதானத்துக்கு வெளியில் அவரை அழைத்துச்சென்றார்.