முதல் பாதி பூப்பாதை, இரண்டாம் பாதி சிங்கப்பாதை! - ரோஹித்தின் டிராக் ரெக்கார்ட்

ROhit Sharma

டிசம்பர் 11-ம் தேதியிலிருந்து `விருஷ்கா... விருஷ்கா...' என ட்விட்டர் அலறியது. இந்திய கேப்டன் விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்துகொள்ள, ஊர் முழுக்க அதே பேச்சு. முதல் போட்டியில் இந்திய அணி கண்ட படுதோல்வியும், அடுத்த நாள் கொண்டாடப்பட்ட யுவராஜ் சிங்கின் பிறந்தநாளும்கூட, அந்த சர்ப்ரைஸ் கல்யாணத்தால் காணாமல்போயிருந்தன. இரண்டாவது ஒருநாள் போட்டியும் தொடங்கியது. ஆனாலும், விருஷ்கா மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆட்டத்துக்கு முன் வர்ணனையாளர்கள்கூட அதைப்பற்றிதான் பேசினர். மோடி, அடுத்த புதிய இந்தியாவுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அந்தத் திருமணப் பேச்சு அடங்கியிருக்காது. ஆனால், டாஸ் போடப்பட்டு மூன்று மணி நேரம்தான். கிரிக்கெட் மைதானத்திலேயே அது அடங்கிப்போனது. அடக்கினார் கோலியின் துணைக் கேப்டன் - ரோஹித் குருநாத் ஷர்மா!

 

கோலியின் திருமணத்துக்கு 729 நாள்கள் முன்னர்தான் ரோஹித்தின் திருமணம் நடந்தது. ரித்திகா, அனுஷ்கா போல் நட்சத்திரம் அல்ல என்பதால், வெறும் செய்தியாகவே கடந்திருந்தது ரோஹித்தின் திருமணம். ஆனால், சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் திருமண நாள் குறித்து மொத்த தேசத்தையும் பேசவைத்துவிட்டார் ரோஹித். இவர் 200 அடிப்பது ரசிகர்களுக்குப் புதிதல்ல. அதை எடுத்துவிட்டு தன் விரலில் முத்தமிட்டு மனைவியைப் பார்க்க, காதல், கண்ணீரின் வழியே அவரை எட்டிப்பார்த்தது. தன் திருமணநாளை எந்த இந்திய ரசிகனும் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிவிட்டார் ரோஹித். `டிசம்பர் 13', இனி நிச்சயம் ரோஹித்தின் பெயர் சொல்லும்!

ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டைச் சதங்கள். இது வேற லெவல் சாதனை. 65 பந்துகளில் அரை சதம், 115 பந்துகளில் சதம் என ஃபியட் மோடில் போனவர், சதத்துக்குப் பிறகு ஃபெராரி மோடுக்கு மாறினார். அடுத்த 36 பந்துகளில் இரட்டைச் சதம். அதுவும் மூன்றாவது இரட்டைச் சதம். இது ரோஹித்தின் ஆஸ்தான ஃபார்முலா. செஞ்சுரி அடிக்கும் வரை  விக்கெட் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கவனமாக ஆடுபவர், அதன் பிறகு வெறியாட்டம் ஆடுகிறார். ரோஹித்தின் இந்த ஃபார்முலாதான் அவரது வெற்றிக்குக் காரணம். 

எந்தப் போட்டியிலும், சதம் அடிக்கும் வரை ரோஹித் அவசரப்படுவதே இல்லை. இதுவரை அவர் அடித்துள்ள 16 சதங்களில், 3 சதங்கள் மட்டுமே 100-க்கும் குறைவான பந்துகளில் அடிக்கப்பட்டவை. சதம் அடிக்கும்போது இதுவரை அவர் வைத்திருந்த ஸ்ட்ரைக் ரேட்டில் மிக அதிகம் 117.65 தான். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு எதிராக 85 பந்துகளில் அடித்ததுதான் இவரது வேகமான செஞ்சுரி. இந்த நிதானம்தான், அவரது அரை சதங்களை சதமாக மாற்ற உதவுகிறது. சதத்தைக் கடந்துவிட்டால், ரோஹித்தின் இன்னொரு முகம் வெளிப்பட்டுவிடும். 

சதம் அடித்த அந்த 16 போட்டிகளிலும், சதத்துக்குப் பிறகான இவரது ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலும், 140-க்கும் மேல்தான். முதல் இரட்டைச் சதம் அடித்தபோது, கடைசி 108 ரன்கள் அடிக்க அவர் எடுத்துக்கொண்டது வெறும் 44 பந்துகள். 264 ரன் எடுத்தபோது, தான் சந்தித்த கடைசி 73 பந்துகளில் 164 ரன் குவித்தார் ரோஹித். இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில், சதத்துக்குப் பிறகு 38 பந்துகளில் 108 ரன் விளாசினார். இரட்டைச் சதம் அடித்தப் போட்டிகளில் மட்டுமல்ல, அனைத்து போட்டிகளிலுமே சதத்துக்குப் பிறகான ரோஹித்தின் ஆட்டம் வேற மாதிரிதான். சதத்துக்குப் பிறகான ஸ்ட்ரைக்ரேட் 100-க்கும் குறைவாக இருந்தது, ஒரேயொரு போட்டியில் மட்டும்தான். 

rohit sharma

ரோஹித்தின் இந்த ஃபார்முலாதான், அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதற்குக் காரணம். இந்த மூன்றாவது டபுள் செஞ்சுரிக்குப் பிறகு, சச்சினுக்கு அடுத்து ரோஹித்தே இந்தியாவின் சிறந்த ஓப்பனர் என்று புகழ்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினின் இடத்தை நிரப்பியதால், அவர்களுக்கு ரோஹித்தை எளிதில் பிடித்துவிட்டது. ஆனால்... அந்தப் பாராட்டுக்கு ரோஹித் உண்மையிலேயே உரியவர்தானா? அவர் முழுமையான ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளாரா? இரண்டுக்கும் பதில் - இல்லை!

பொதுவாக பேட்ஸ்மேன்களில் இரண்டு ரகம் உண்டு. தனது இருப்பால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்கள். மற்றொன்று, மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பயன்படுத்தி, தன் ஆட்டத்தை நிலைநிறுத்திக்கொள்பவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த இடத்திலேயே சச்சின் - ரோஹித் ஒப்பீடு காணாமல்போய்விடும். ஏனெனில், சச்சின் முதல் வகை, ரோஹித் இரண்டாவது வகை.

இந்த உண்மையை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதையும், ரோஹித்தின் சதங்களைக்கொண்டே நாம் அறிந்துகொள்ள முடியும். ரோஹித் ஸ்லோ-ஸ்டார்டர். இன்னிங்ஸை மெதுவாகத்தான் தொடங்குவார். மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் நன்றாக ஆடும்போது, ரோஹித் மீது அழுத்தம் ஏற்படாது. அந்தச் சூழலைப் பயன்படுத்தியே ரோஹித் தன் இன்னிங்ஸைக் கட்டமைக்கிறார். 

அவரது 16 சதங்களிலும் அப்படித்தான். மிகவும் பொறுமையாகவே ஆட்டத்தைத் தொடங்கியிருப்பார். மறுமுனையில் இருக்கும் ஓப்பனர், ஷிகர் தவானோ, அஜிங்யா ரஹானேவோ சிறப்பாக ஆடும்போது, ரோஹித் பொறுமையாக தன் இன்னிங்ஸை `பில்டு' செய்துகொள்வார் அல்லது மூன்றாவது வீரரான கோலி, பொறுப்புகளைத் தன்மீது போட்டுக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால், ரோஹித் ஸ்பெஷல் நிச்சயம். 

அந்த 16 சதங்களின்போதும் மறுமுனையில் ஒருவர் ரோஹித் மீதான அழுத்தத்தைக் குறைத்துள்ளார். அவர் சதம் அடித்தப் போட்டிகளில், தவான் 3, ரஹானே 3, ரெய்னா 3, தோனி 1, ஸ்ரேயாஸ் ஐயர் 1, கோலி 4 முறை அரை சதம் கடந்துள்ளனர். நான்கு போட்டிகளில் கோலி சதமும் அடித்துள்ளார். இப்படி மற்ற வீரர்கள் அடித்து ஆடி, அணியின் ரன்ரேட்டை சீராக வைத்திருப்பதைப் பயன்படுத்தியே ரோஹித்தின் ஆட்டம் அமைகிறது. யாருமே அரை சதம் அடிக்காதபோது, ரோஹித் ஒருமுறைகூட சதம் அடித்ததில்லை. காரணம், மற்றவர்கள் ஆட்டமிழக்கும் பிரஷரில் தானும் வீழ்ந்துவிடுவார்.

rohit

பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆட்ட நாயகன் விருது பலமுறை வாங்கியுள்ளார். ஆனால், `ரோஹித்தால் மட்டும்தான் இந்தியா ஜெயித்தது' என்று சொல்லக்கூடிய பர்ஃபாமென்ஸ் ஒன்றுகூட ரோஹித்வசம் இல்லை. சுருங்கச் சொன்னால், ரோஹித் மேட்ச்வின்னர் கிடையாது. விரேந்தர் சேவாக் - ரோஹித்தைவிட ஒரு சதம் குறைவாக, அதாவது 15 சதங்கள் அடித்துள்ளார். அந்த 15 சதங்களில் மூன்று, மற்ற எந்த வீரரும் அரை சதம்கூட அடிக்காதபோது வந்தவை. `அப்போ அனைவரும் புகழும் விராட்?' - அப்படி யாருமே சோபிக்காத நான்கு போட்டிகளில் தனியாளாக நின்று சதம் அடித்துள்ளார். 

ரோஹித் சதம் அடிக்கும்வரை பொறுமையாக ஆடுவதால், மறுமுனையில் ஆடும் பேட்ஸ்மேன் அடித்து ஆடவேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாவார். தவான், கோலி இருவரும் அதற்கு ஈடுகொடுத்து ஆடிவிடுவதால், ரோஹித்தின் வேகம் நெகட்டிவாகத் தெரிவதில்லை. ரோஹித்தின் கன்சிஸ்டன்சி அடிபடுவதற்குக் காரணமே இதுதான். முதலில் இரண்டு, மூன்று விக்கெட்டுகள் போய்விட்டால், ரோஹித்தால் வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியாது.

ரோஹித், தனி ஆளாக இதுவரை இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்ததில்லை. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தோனி ஆடியது போன்ற ஒரு இன்னிங்ஸ், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரில் இலங்கைக்கு எதிராக கோலி ஆடியது போன்ற ஒரு இன்னிங்ஸ் ரோஹித் இதுவரை தந்ததில்லை. அப்படித் தந்தால் மட்டுமே அவர் முழுமையான பேட்ஸ்மேன்.

ரோஹித்தின் இரட்டைச் சதங்களைக் கொண்டாடலாம், அவரது பேட்டிங்கைப் புகழலாம். ஆனால், அவரை மற்ற ஜாம்பவான்களோடு ஒப்பிடுவது இப்போதைக்குச் சரியல்ல. இவரது கன்சிஸ்டன்சி சீராகி, மேட்ச் வின்னராக எப்போது உருவெடுக்கிறாரோ, அப்போது சச்சினுக்கு நிகராக ஒப்பிடலாம். அதுவரை, ரோஹித் ஷர்மா - அசாத்திய சாதனைகளை தன்வசம்கொண்டுள்ள ஒரு யூஷுவல் பேட்ஸ்மேன். அவ்வளவே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!