வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (15/12/2017)

கடைசி தொடர்பு:16:41 (15/12/2017)

டி10 போட்டியில் ஹாட்ரிக்! சேவாக் உள்பட 3 பேரை வெளியேற்றி அஃப்ரிடி அசத்தல்

ஷார்ஜாவில் தொடங்கிய டி10 லீக் கிரிக்கெட் தொடரில் பக்டூன் அணியில் விளையாடி வரும் ஷாகித் அஃப்ரிடி, தான் வீசிய முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

Photo Credit: Twitter/Pakhtoon Team


டி20 போட்டிகளைப் போலவே 10 ஓவர்களைக் கொண்ட டி10 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் முதல் டி10 லீக் போட்டிகள் ஷார்ஜாவில் தொடங்கியது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர்களான இந்தியாவின் வீரேந்திர சேவாக், பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி, சோயப் மாலிக், இங்கிலாந்தின் இயான் மோர்கன் உள்ளிட்ட வீரர்கள் உள்பட முன்னணி வீரர்கள் பலர் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர். 6 அணிகள் இந்தத் தொடரின் சேவாக் தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் அணியும், அஃப்ரிடி விளையாடும் பக்டூன்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பக்டூஸ்ன் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. 122 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மராத்தா அரேபியன்ஸ் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பக்டூன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் ஐந்தாவது ஓவரை வீச வந்த அஃப்ரிடி முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரது முதல் பந்தில் தென்னாப்பிரிக்காவின் ரூசோவ் ஆட்டமிழக்க, இரண்டாவது பந்தில் வெஸ்ட் இண்டீஸின் டிவைன் பிராவோவும் மூன்றாவது பந்தில் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், டி10 லீக்கில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஃப்ரிடி பெற்றார். இந்தப் போட்டியில் அஃப்ரிடி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாகத் தொடரின் முதல் போட்டியில் கேரளா கிங்ஸ் அணி, பெங்கால் டைகர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.