ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்! | Steve Waugh's son Austin Waugh named in Australia U19 WC squad

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (15/12/2017)

கடைசி தொடர்பு:19:50 (15/12/2017)

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன்!

நியூசிலாந்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜூனியர் உலகக் கோப்பைத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Photo Source: Twitter/cricket.com.au


ஜேசன் சங்கா தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக் இடம்பெற்றுள்ளார். தந்தையைப்போல் பேட்டிங்கில் மட்டுமல்லாது, மிதவேகப்பந்து வீசுவதிலும் வல்லவரான ஆஸ்டின் வாக், ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார். அண்மையில் இலங்கை ஜூனியர் அணிக்கெதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ஆஸ்டின், ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேசன் சங்கா சதமடித்து அசத்தினார். இதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை 18 வயதான ஜேசன் சங்கா படைத்திருந்தார். அதேபோல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்டின் மகன் வில் சதர்லேண்டும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸும் துணை பயிற்சியாளராக கிறிஸ் ரோஜர்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி, வரும் ஜனவரி 14-ல் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய ஜூனியர் அணியை எதிர்கொள்கிறது.