வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (16/12/2017)

கடைசி தொடர்பு:21:00 (16/12/2017)

`எந்த அணியாக இருந்தாலும் துவம்சம் செய்வோம்!' - தவானின் சரவெடிப் பேச்சு

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நாளை மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது. இந்நிலையில், நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறகிறார்களோ அவர்களே தொடரையும் வெற்றி பெறுவர் என்பதால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், இந்தப் போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். 

தவான்

இது குறித்து பேசிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், `இதுதான் எங்களுக்கு இந்தத் தொடரின் கடைசி போட்டி. இந்தப் போட்டியில் வென்றேயாக வேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், இதைப் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் மிகவும் வலுவான அணி. எங்கள் திறமையின் மேல் அதிக நம்பிக்கை இருக்கிறது. அதனால், கண்டிப்பாக நன்றாக விளையாடுவோம். இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் நிறைய விஷயத்தை கற்றிருக்கிறோம். முதல் ஒருநாள் போட்டியில் நாங்கள் நேர்மறையாகத்தான் விளையாடச் சென்றோம். ஆனால், அன்று நாங்கள் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. சில நேரங்களில் தோல்வியடைவது நல்லதுதான். வீழ்வதில் இருந்து நம்மால் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். எங்கள் அணியில் இருக்கும் பலத்தை வைத்து, உலகில் எந்த ஓர் அணியையும் துவம்சம் செய்ய முடியும்' என்று சரவெடியாகப் பேசியுள்ளார்.