வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (17/12/2017)

கடைசி தொடர்பு:12:28 (17/12/2017)

ஆஷஸ் தொடரிலேயே ஃபிக்ஸிங்... கிரிக்கெட் உலகை உலுக்கும் இரு இந்திய புக்கிகள்!

அங்கே இங்கே சுற்றி அடி மடியிலேயே கைவைத்துவிட்டனர் சூதாட்டக்காரர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்பாட் ஃபிக்ஸிங் நடப்பதாக கொளுத்திப் போட்டது, பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘தி சன்’ பத்திரிகை. அந்தப் பத்திரிகையின் நிருபர்கள் நான்கு மாதங்களாக நடத்திய அண்டர்கவர் ஆப்ரேஷனில், பெர்த் டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்க இருப்பதாக க்ளூ கிடைத்தது. 

ஃபிக்ஸிங்

இந்தியர்களான சோபர்ஸ் ஜோபன், பிரியங்க் சக்சேனா இருவரும் பிரபலமான புக்கிகள். ஐ.பி.எல் உள்பட உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளில் சூதாட்டம் நடத்தும் பலே கில்லாடிகள். அவர்களிடம் ‘தி சன்’ பத்திரிகை நிருபர்கள், தங்களை லண்டனிலிருந்து செயல்படும் நிழலுக புக்கிகளுக்கு பணம் சப்ளை செய்பவர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதோடு, அந்த புக்கிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். டெல்லி, துபாய் என பல இடங்களில் புக்கிகளைச் சந்தித்துப் பேசினர். அப்போதுதான், ‘பெர்த் டெஸ்ட் போட்டியிலேயே ஃபிக்ஸிங் நடக்கலாம். ரெடியாக இருங்கள்’ என புக்கிகளிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

‘‘போட்டி தொடங்குவதற்கு முன் நான் உங்களிடம் எந்த செஷன், எந்த ஓவரில் சூதாட்டம் நடக்கப் போகிறது எனத் தகவல் சொல்வேன். சூதாட்டத்தில் தொடர்புடைய வீரர்கள் களத்தில் சமிக்ஞை செய்வர். அதை ஸ்டேடியத்தில் உள்ள எங்கள் ஆட்கள், எங்களுக்குத் தெரியப்படுத்துவர். அதன்பின் எங்கள் ஆட்டம் தொடரும். நீங்களும் பெட்டிங்கை ஆரம்பிக்கலாம்’’ என்றார் Mr Big. புக்கிகள் வட்டாரத்தில் சோபர்ஸ் ஜோபனை இப்படித்தான் அழைக்கிறார்கள்.

‘என்னது... ஆஷஸ் தொடரில் சூதாட்டமா... நம்பலாமா?’ என நிருபர்கள் கேட்டதும், ‘‘கரெக்ட் இன்ஃபர்மேஷன் பாஸ். எங்களை யாருன்னு நினைச்சிங்க! எல்லா இடத்துலயும் ஆளிருக்கு. இப்ப இருக்கிற பிளேயர்ஸ், முன்னாள் பிளேயர்ஸ், வேர்ல்ட் கப் வின் பண்ண ஆல் ரவுண்டர் இப்படி பல பேர்கிட்ட தொடர்பிருக்கு. இவ்ளோ ஏன், ஆஸ்திரேலியன் கிரிக்கெட் போர்டுல இருக்கிற பெரிய புள்ளிகிட்ட தொடர்பிருக்கு. உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க அவர்கிட்ட (The Silent Man) கூட்டிட்டுப் போறோம். ஆனா, அவரை நேரடியா சந்திச்சுப் பேச முடியாது. அவர் உங்களுக்கு என்ன கொடுப்பார்னு தெரியாது. ஒருவேளை ஸ்கிரிப்டா இருக்கலாம்... இல்லை, செஷனா (session) இருக்கலாம். 

ஸ்கிரிப்ட்... செஷன்... ஒன்னுமே புரியலையே!

‘‘ஸ்கிரிப்ட் என்பது முழுக்க முழுக்க வீரர்களின் உதவியுடன் வரையறுப்பது. உதாரணத்துக்கு ஒரு செஷனில் எத்தனை ரன்கள், ஒரு இன்னிங்ஸில் எத்தனை ரன்கள், எப்போது விக்கெட் விழும். டாஸ் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்படும். இந்தத் திட்டம் வீரர்களுக்கும் தெரிவிக்கப்படும். அதன்படி அவர்கள் சில சமிக்ஞைகளை வெளிப்படுத்துவர்.’’ என்றார் ஜோபன்.

நிருபர்கள் தொடர்ந்து விளக்கம் கேட்க...

‘‘நம்பிக்கையில்லையெனில் நீங்கள் ஆஷஸ் தொடரிலேயே இதை முயற்சிக்கலாம். இரண்டு செஷன்களில் பெட்டிங் நடத்த வாய்ப்புள்ளது. ஒரு செஷனுக்கு 60 லட்சம் ரூபாய். ரெண்டு செஷனுக்கு 120 லட்சம் ரூபாய். உங்களுக்கு ஓகே எனில், பிரியங்க் உங்களை ‘தி சைலன்ட் மேனி’டம் கூட்டிச் செல்வார்.’’ என்றார்.

நிருபர்கள் இந்த டீலுக்கு ஓகே சொல்லிய பின் சக்சேனா, ‛‛நான் சைலன்ட் மேனிடம் பேசிட்டேன். ஆஷஸ் தொடரின் நடுவில் ஃபிக்ஸிங் நடக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவருக்கு மெயில் அனுப்பிவிட்டேன். பதிலுக்காகக் காத்திருக்கேன். நான் இன்னொருவருடன் ஆஸ்திரேலியாவுக்கு சொல்கிறேன். அங்கே போனதும் அவர் என்ன சொல்கிறார், என்ன ஸ்கிரிப்ட், என்ன ரேட் என்பதைப் பேசிட்டு வருகிறேன்’’ என்றார். 

ஃபிக்ஸிங்

கடந்த வாரம் பெர்த் டெஸ்ட்டில் ஃபிக்ஸிங் நடப்பதை ஜோபன் உறுதிப்படுத்தினார். ‘‘நீங்கள் அட்வான்ஸ் தர வேண்டும். எப்படி, எந்த ஓவரில் பெட் கட்ட வேண்டும் என்பதைச் சொல்வோம்’’என்றவர் இந்த வாரம்... ‘‘பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் ஃபிக்ஸிங் நடக்கலாம். இதில் ஆஸ்திரேலிய புக்கிகளும் இடம்பெற்றிருப்பதால், ஃபிக்ஸிங் நடப்பது உண்மை’’ என ‘க்ளு’ கொடுத்தார்.

முதல் அல்லது கடைசி போட்டியில் ஃபிக்ஸிங் நடத்தினால், எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், மூன்றாவது போட்டியை புக்கிகள் குறிவைத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தவிர, எல்லோரும் டி-20, ஒருநாள் என லிமிடெட் ஓவர்களை குறிவைத்திருக்க, ஆஷஸ் போன்ற பாரம்பரிய தொடர்களைக் குறிவைத்திருப்பது கிரிக்கெட்டின் உலகை உலுக்கியுள்ளது. 

இந்தச் செய்தி வெளியானதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) பதறியடித்துக்கொண்டு பதிலளித்துள்ளது. ICC செய்தித் தொடர்பாளர், “இது வருத்தமளிக்கும் விஷயம். ஊழல் தடுப்புப் பிரிவு இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும். ‘தி சன்’ பத்திரிகையுடன் ஆலோசித்து, அவர்கள் தரும் ஆதாரங்களின்படியும் விசாரணை நடத்தப்படும்’’ என்றார். ஐ.சி.சி-யிடம் ஏற்கெனவே ஆவணங்களைத் தர இருப்பதாக ‘தி சன்’ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுஒருபுறம் இருக்க, முதல் ஆளாக, எங்கள் வீரர்கள் இந்த ஃபிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். "கிரிக்கெட்டின் மேன்மையைக் காப்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி-யுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது’’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘‘பத்திரிகையில் வெளியான சூதாட்ட விவகாரம் வருத்தமளிக்கிறது. புக்கிகள் தங்களைத் தொடர்பு கொள்ள முயன்றதாக வீரர்கள் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இருப்பினும், கிரிக்கெட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஆளாளுக்கு முந்திக்கொண்டு விளக்கம் அளிப்பது இருக்கட்டும். எந்த சூதாட்டமும் மேல் மட்டத்தில் இருப்பவர்களின் துணையின்றி நடப்பதில்லை என்பதே உண்மை!

ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம்

ஜோபன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து,  ஐ.பி.எல் தொடரில் இரண்டு அணிகளில் 18 முறை ஃபிக்ஸிங் நடத்தியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகள்தான் சூதாட்டத்தின் கூடாரமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு சில வீரர்கள் தங்களுக்கென தனியாக ஏஜென்ட்கள், புக்கிகள் வைத்திருப்பதாகச் சொன்னதுதான் ஹைலைட்.  

கடந்த பத்து ஆண்டுகளில் ஐ.பி.எல் மூலமாக தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என பல சர்வதேச வீரர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் பணத்துக்கு உத்தரவாதம் கிடைப்பதிலும், பாதுகாப்பு விஷயத்திலும் தெளிவாக இருந்துள்ளனர். ஒரு டி-20 போட்டியில் வைடு வீசி, ரன்ரேட்டை சரிக்கட்டுவதற்காக ஒரு டெஸ்ட் பிளேயர், £175,000 பெற்றுள்ளார். மற்றொரு பேட்ஸ்மேன், ஒரு ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழப்பதற்காக பெருந்தொகை வாங்கியுள்ளார். 

சமிக்ஞைகள் குறித்த சந்தேகத்துக்கு ஜோபன் சொன்ன விளக்கம்

முன்கூட்டியே, எப்படி சிக்னல் கொடுக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டுவிடும். பொதுவாக, கிரிக்கெட் போட்டிகளின்போது, வீரர்கள் தரும் எல்லா சிக்னலையும் நம்மால் கணித்திட முடியாது. ஏனெனில், பெரும்பாலான சமிக்ஞைகள் ஓர் ஓவர் முடிந்தபின்பே நிகழும். இதை டிவியில் கிரிக்கெட் பார்ப்பவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அதற்காகத்தான் புக்கிகள் சிலர் தங்கள் ஆட்களை மைதானத்துக்கு அனுப்பி, அவர்களிடம் இருந்து வீரர்களின் சிக்னல் குறித்த அப்டேட்டைப் பெறுகின்றனர். 

இன்னும் தெளிவாகச் சொல்கிறார் ஜோபன், “நான் உங்களுக்கு சிவப்பு வாட்ச் கொடுப்பேன். அதை நீங்கள் அணிந்து வர வேண்டும். அவ்வளவுதான். பொதுவாக ஐ.பி.எல் போட்டியில், வீரர்களுக்கு ஐந்து முழுக்கை சட்டை, ஐந்து அரைக்கை சட்டை கொடுப்பர். சூதாட்டத்துக்கு ஒப்புக்கொண்ட வீரர் முழுக்கைச்சட்டை அணிந்து பந்துவீசினால், அவர் நமக்கு சிக்னல் கொடுப்பதாக அர்த்தம். 6,10,15,20-வது ஓவர்களை அவர் வீசுவார் என அர்த்தம்.

ஒரு வைடு வீசினாலும் அதுவும் சிக்னல்தான். ரன் அப் வந்துவிட்டு பந்துவீசாமல் சென்றாலும் அதுவும் சிக்னல். பேட்ஸ்மேன் என்றால் பெளலர் ஓடி வரும்போது திடீரென பந்தைச் சந்திக்காமல் விட்டோலோ, சைட் ஸ்கிரீனை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னாலோ... ஹெல்மெட்டைக் கழட்டி மாட்டினாலோ, கிளவுஸ் மாற்றினாலோ, எல்லாமே சிக்னல்தான். இந்த சிக்னலை ஸ்டேடியத்தில் இருப்பவர் கண்டுபிடித்துச் சொன்ன அடுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் பெட்டிங் ஆரம்பித்துவிடும். வீரர்களுக்குப் பணம் ஹவாலா முறையில் கிடைக்கும். பெரும்பாலும் வீரர்கள் தங்கள் ஏஜென்ட் பெயரிலேயே பணத்தை அனுப்பச் சொல்வர். பணப் பரிமாற்றம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் நடக்கும். 

சூதாட்டத்தின் செயல்பாடு...

*புக்கிகள் பெரும்பாலும் முன்னாள் வீரர்கள், அதிகாரிகள் மூலமே சர்வதேச வீரர்களை அணுகுவர். 

*ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி உள்ளிட்ட விஷயங்களை அந்தக் கும்பல் பக்காவாக பாடம் எடுத்துவிடும்.

*களத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஸ்கிரிப்டும் வீரர்களுக்குத் தரப்படும். உதாரணத்துக்கு... ஓர் ஓவரில் எத்தனை ரன்கள் கொடுப்பது, ரன் ரேட்டைக் குறைப்பது, ஆட்டத்தின் முடிவைப் பாதிப்பது, விக்கெட்டை இழப்பது, டாஸ் ஜெயித்ததும் எதைத் தேர்வு செய்வது என எல்லாமே விவரமாக இருக்கும்.

*கேப்டனோ அல்லது வீரரோ, ஃபீல்டிங்கை மாற்றுவது, ஹெல்மெட்டை வேறு இடத்தில் வைப்பதன் மூலமும் சிக்னல் கொடுக்கலாம். 
களத்தில் இருக்கும் புக்கிகள்தான் சூதாட்டத்தின் உயிர்நாடி. அவர்கள் கொடுக்கும் தகவல்களின் மூலம்தான், கோடிக்கணக்கில் சூதாட்டம் நடக்கும். 

*ஆண்டுதோறும் இந்தியாவில் 100 பில்லியன் பவுண்டு மதிப்பில் சூதாட்டம் நடக்கிறது. 

யார் அந்த சோபர்ஸ் ஜோபன், பிரியங்க் சக்சேனா?

மாநில அளவிலான முன்னாள் கிரிக்கெட் வீரர். வயது 31. ஒரு காலத்தில் டெல்லி அணியில் இந்தியக் கேப்டன் விராட் கோலியுடன் விளையாடியவர். பிரயங்க் சக்சேனா உடன் இணைந்து பத்து ஆண்டுகளாக ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் வசந்த் விகார் பகுதியில் ஆடம்பர பங்ளா உள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த தற்காப்புக் கலை பெண்ணுடன் நிச்சயம் நடந்துள்ளது. அவரது சோசியல் மீடியாவை ஆராய்ந்தாலே, அவரது ஆடம்பர வாழ்க்கை தெரிய வரும்.

பிரியங்க் சக்சேனா, பிரபல புக்கி. புகையிலை வர்த்தகர். தென் ஆப்ரிக்காவில் பல தொழில்களை நடத்தி வருகிறார். டெல்லியைச் சேர்ந்த இவர் கிரிக்கெட்டர்களுடன் நெருங்கி பழகி, அவர்களை தன் வலையில் வீழ்த்துவதில் கில்லி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்