வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (17/12/2017)

கடைசி தொடர்பு:16:50 (17/12/2017)

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சரித்திரம் படைக்கும்! அணில் கும்ப்ளே நம்பிக்கை

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் புதிய சரித்திரம் படைக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் ஜனவரி 5-ல் நடக்கிறது. இந்த தொடரில் முதல்முறையாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் பேசிய அணில் கும்ப்ளே, ‘விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் புதிய வரலாறு படைக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதில் முழுநம்பிக்கை எனக்கு உண்டு’ என்றார். விராட் கோலியின் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப்-பைப் பாராட்டிய அவர், ‘விராட் தலைமையில் இந்திய மகத்தான உயரங்களை எட்டும்’ என்றும் புகழ்ந்தார். பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் துணையின்றி இந்திய அணியின் வெற்றிப்பயணம் சாத்தியமாகியிருக்காது என்று கூறிய அவர் கடந்த காலங்களில் (இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது) தனக்கு உதவியாக இருந்த நிர்வாகிகளுக்கும், வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். 

இந்திய அணியின் பயிற்சியாளராக ஓராண்டு காலம் பதவி வகித்த அணில் கும்ப்ளே, கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். கேப்டன் விராட் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது. இந்தநிலையில், விராட் கோலியைப் புகழ்ந்து அணில் கும்ப்ளே பேசியுள்ளார்.