ஷிகர் தவான் அசத்தல் சதம்! தொடர்ச்சியாக எட்டாவது ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி | India wins third ODI and series against SL

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (17/12/2017)

கடைசி தொடர்பு:08:10 (18/12/2017)

ஷிகர் தவான் அசத்தல் சதம்! தொடர்ச்சியாக எட்டாவது ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. 

Photo Credit:ICC

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க வீரர் உபுல் தரங்காவின் 95 ரன்கள் உதவியுடன் 215 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, சஹால் மற்றும் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கியது. கடைசி 8 விக்கெட்டுகளை 55 ரன்களுக்கு இழந்த இலங்கை அணி, 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதையடுத்து, 216 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் ஷர்மா விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஷிகர் தவானுடன் கைகோத்த ஸ்ரேயாஸ் ஐயர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. ஒரு முனையில் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. 

ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த பின்னர், வழக்கமான தாக்குதல் பாணி ஆட்டத்துக்குத் திரும்பிய தவான் 84 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்தப் போட்டியின் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தவான் 4,000 ரன்களைக் கடந்தார். 95 இன்னிங்ஸ்கள் மூலம் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த தவான், விராட் கோலி (93 இன்னிங்ஸ்கள்) அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது. தவான் 100 ரன்களுடனும், அவருக்கு உறுதுணையாக இருந்த தினேஷ் கார்த்திக், 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி தொடர்ச்சியாக 8-வது முறையாகத் தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13 தொடர்களை வென்றுள்ளது.


[X] Close

[X] Close