வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:30 (18/12/2017)

முதல்முறையாக டாப் - 5-க்குள் நுழைந்த ரோகித் ஷர்மா!

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் ஷர்மா, முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்தார். 

இந்திய அணியின் கேப்டனாக இலங்கை ஒருநாள் தொடரை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றார். முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வீறுகொண்டு எழுந்தது. அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் ஷர்மா இரட்டை சதமடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பதிவு செய்த மூன்றாவது இரட்டை சதம் அதுவாகும். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல்முறையாக 5 வது இடத்துக்கு ரோகித் ஷர்மா முன்னேறினார். இந்தப் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில், தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் பாகிஸ்தானின் பாபர் ஆஸம், நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். 

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தானின் ஹசன் அலி, முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹீரும் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இருக்கின்றனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் டாப் 10-க்கும் ஒரே இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே. இதில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களாக யுஸ்வேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். சஹால், 28 வது இடத்திலிருந்து 23 வது இடத்துக்கும், குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 56 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.