வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:21 (18/12/2017)

பணம், பிசினஸ்தான் இலக்கா... டி -10 போட்டி கிரிக்கெட்டின் சாபக்கேடா?!

ஷார்ஜா, இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஊர். அவர்களுக்கான வாழ்நாள் அனுபவத்தைத் தந்த மைதானம் அது. “சச்சினின் 100 சதங்களுள் உங்களுக்குப் பிடித்தது எது?” என்று கேட்டால், ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த சதம்தான் பெரும்பாலானோரின் ஃபேவரைட்டாக இருக்கும். இந்தியர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானியர்களுக்கும் அது மிக முக்கியமான மைதானம். உலகக்கோப்பையில் வீழ்த்திட முடியாத இந்திய அணியை, அவர்கள் பலமுறை வென்றது அங்குதான். உலகமே தங்கள் நாட்டுக்கு வர மறுக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அடைக்கலம் கிடைத்ததும் அங்குதான்.

sachin

ஷார்ஜாவில் கிரிக்கெட் மைதானம் தொடங்கப்பட்டதே இந்த இரு நாட்டவருக்காகத்தான். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை கௌரவப்படுத்த, 1981-ம் ஆண்டில் `The Cricketers Benefit Fund Series (CBFS)' என்பதைத் தொடங்கி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட்டைத் தோற்றுவித்தார் அப்துல் ரஹ்மான் புகாதிர். 25,000-க்கும் குறைவான இருக்கைகள்தாம். ஆனால், மூன்று நான்கு நாடுகள் கலந்துகொண்டதால், தங்கள் தேசம் விளையாடாத ஒரு விளையாட்டுக்கும் அந்நாட்டு மக்களின் ஆதரவு பெருகியது. 1984-ம் ஆண்டு முதல் இன்று வரை 231 போட்டிகளை நடத்தி, அதிக போட்டிகள் நடத்திய மைதானம் என்ற பெருமையைக்கொண்டுள்ள இந்த மைதானத்தில், இன்னொரு முக்கிய வரலாற்று நிகழ்வும் நடந்துள்ளது. கிரிக்கெட்டின் அடுத்த வெர்ஷனான டி10, இதே ஷார்ஜா மைதானத்தில் தொடங்கியிருக்கிறது.

ஐந்து நாள்கள் நடந்துகொண்டிருந்த கிரிக்கெட், பிறகு இன்னிங்ஸுக்கு 60 ஓவராகக் குறைந்தது. அறுபது, ஐம்பதானது. ஐம்பது, இருபதானது. இப்போது அதுவும் குறைந்து, இன்னிங்ஸுக்கு 10 ஓவராக மாறிவிட்டது. கால்பந்தைப்போல் இனி கிரிக்கெட்டும் 90 நிமிடத்தில் முடிந்துவிடும். டி-20 ஃபார்மட்டைவிட இரட்டிப்பு ஆக்‌ஷன். ரசிகர்களுக்கு இந்த ஃபார்மட் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மை. 

20 வயதில், ஐக்கிய அரபு அமீரகம் சென்று தொழிலதிபரான இந்தியர் ஷாஜி உல் முல்க் எடுத்த முயற்சிதான், இந்த டி-10 தொடர். ஆறு அணிகள். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த நகரங்களின் பெயரோடு தலா இரண்டு அணிகள், வங்கதேசம், இலங்கை சார்பாக தலா ஓர் அணி. முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் இந்தத் தொடரில் விளையாடிவருகின்றனர். மொத்தம் 10 ஆண்டுகளுக்கு இந்தத் தொடரின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

டி 10

“அக்ரம், மியாந்தத், இம்ரான் கான் போன்ற ஜாம்பவான்கள் பலரும் வீதியில் கிரிக்கெட் விளையாடியவர்கள்தாம். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் நாம் 10 ஓவர் போட்டிகள்தானே விளையாடுவோம். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கிரிக்கெட் வீரர்கள் அங்கிருந்துதான் பிறக்கின்றனர். பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்திருக்க, மொத்த உலகமும் தங்களைப் பார்க்க, அந்த விளையாட்டைத்தான் வீரர்கள் இப்போது விளையாடப்போகிறார்கள்; அவர்கள் வீதிகளை நோக்கிச் செல்லப்போகிறார்கள்!

இரண்டாவதாக, இன்றைய இளம் தலைமுறைக்கு நேரம் இல்லை. கால்பந்தும் கூடைப்பந்தும் ஏன் உலகம் முழுவதும் இந்த அளவுக்குப் பிரசித்திபெற்றுள்ளன? அவை 90 நிமிடத்தில் முடிந்துவிடுகின்றன என்பதுதான். நாம் விளையாட்டுகளுக்கு ஒதுக்கும் நேரம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. 90 நிமிடப் போட்டி என்பது, கிரிக்கெட்டுக்குப் பல வகைகளில் சாதகமாக இருக்கும். 10 ஓவர் கிரிக்கெட்டை, முதலில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் பிறகு ஒலிம்பிக் அரங்குக்கும்கூட எடுத்துச்செல்லலாம். மொத்த கிரிக்கெட், உலகத்துக்குமே ஒரு மாற்றம் கொடுக்கும்" என்கிறார் டி10 லீக்கின் தலைவர் சல்மான் இக்பால்.

10 ஓவர்களாகக் குறைக்கப்படும்போது, ஒலிம்பிக் போன்ற அரங்குக்கு கிரிக்கெட்டை எடுத்துச்செல்ல முடியும். உயர்ந்த கட்டடங்கள்சூழ் அமீரகத்தின் ஏழைவர்க்கம், அந்த விளையாட்டை விளையாடுவதற்கு இது ஒரு தூண்டுகோலாக அமையும். ஆனால், அவர் சொல்வதுபோல் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? அந்த ஏழைச் சிறுவர்கள் கிரிக்கெட்டுக்குள் நுழைந்திட உண்மையிலேயே வழிவகுக்குமா? இந்த டி10 ஃபார்மட், கிரிக்கெட்டுக்குச் சாதகமா... பாதகமா?

பல வகைகளில், இந்தத் தொடர் கிரிக்கெட்டுக்குப் பாதகமே! எப்படி?

கிரிக்கெட், இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவருகிறது. முக்கியமாக தொலைக்காட்சியின் தேவைக்கேற்ப செயல்படத் தொடங்கியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். டி20 போட்டிகள் தொடங்கியதிலிருந்தே அதன்மீதான மோகம், டெஸ்ட் போட்டியின்மீது நெகட்டிவான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இப்போது 10 ஓவர் போட்டிகள் வேறு!

டி10

இந்தப் போட்டிகளில் ஓய்வுபெற்ற வீரர்கள் மட்டும் ஆடினால் பரவாயில்லை. மோர்கன், பிராவோ, ரில்லி ருசோ என நடப்பு வீரர்கள் பலரும் இந்தத் தொடரில் விளையாடுவதால், இதுவும் சர்வதேச கவனம் பெறும். இந்நிலையில், பெட்டிங், ஃபிக்ஸிங் போன்றவை நடக்க, இந்தத் தொடர் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். ஐ.சி.சி-க்குக் கீழ் நடக்காத தொடர் என்பதால், சூதாட்ட தடுப்பு (anti fixing) கமிட்டியின் பார்வையும் இதன்மீது விழாது.

`ஐக்கிய அரபு அமீரக வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். இங்கு கிரிக்கெட்டை முன்னேற்றப்போகிறோம்' என்கிறார்கள். இந்தத் தொடரில் ஆடும் அணிகளில் இடம்பெறவேண்டிய உள்ளூர் வீரர்களின் எண்ணிக்கை இரண்டுதாம். பிளேயிங் லெவனில் ஒருவர் இடம்பெற்றால் போதும். இப்படியிருக்கையில், எத்தனை வீரர்களின் திறமையை அவர்கள் அடையாளம் காணப்போகிறார்கள்? முழுக்க முழுக்க வெளிநாட்டு ஸ்டார்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். 

darren bravo

டி-20 லீக்குகள் எல்லா நாடுகளிலும் தொடங்கப்பட, பல தேசிய அணிகளுக்கு அது பின்னடைவாக இருந்தது. உதாரணமாக, ஐ.பி.எல் தொடரில் விளையாட டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வுபெற்றார் லசித் மலிங்கா. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், சம்பளத்தைக் காரணம் காட்டி `தேசிய அணியே வேண்டாம்!' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். சில தினங்களுக்கு முன்னர், “இனி தேசிய அணியில் ஆடுவது பற்றி யோசிக்கவில்லை" என்று கேஷுவலாகச் சொல்கிறார் டுவைன் பிராவோ. இவையெல்லாம் டி-20 தொடர்கள் பிரபலமடைந்ததன் விளைவு.

இந்த 10 ஓவர் தொடர் நடக்கும் இதே நேரத்தில்தான், வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் டெஸ்ட் தொடரான Regional four day competition நடந்துகொண்டிருக்கிறது. அதில் டிரினிடாட் அண்ட் டொபாகோ அணிக்காக ஆடிக்கொண்டிருக்கவேண்டிய டேரன் பிராவோ, துபாயில், பங்களா அணிக்காக விளையாடிவருகிறார். கிரிக்கெட் ஆட வந்த புதிதில் ‘அடுத்த லாரா’ என்றெல்லாம் சொல்லப்பட்டவர், 10 ஓவர் போட்டிக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது நிச்சயம் கிரிக்கெட்டுக்குச் சாபக்கேடுதான்.

darren sammy

அவரைப்போல் பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அந்த டெஸ்ட் தொடரைப் புறக்கணித்து, டி-10 தொடரில் ஆடிக்கொண்டிருக்கின்றனர். முன்னாள் கேப்டன் டேரன் சம்மி, ஜேசன் சார்லஸ் இருவரும்கூட தாங்கள் ஆடவேண்டிய விண்ட்வேல்டு தீவுகள் அணிக்குப் பதிலாக இந்தத் தொடரில் ஆடிவருகின்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு, முக்கியமான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன். இப்போது பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் முடிந்த மறுநாளே துபாயில் இறங்கியுள்ளார். ஓய்வு வேண்டாமா ஷகிப்?

பிசினஸ். இதுதான் இந்தத் தொடர்களின் நோக்கம். இதுபோன்ற தொடர்கள் கிரிக்கெட்டின் பாரம்பர்ய ஃபார்மட்டான டெஸ்ட் போட்டிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பல வகைகளிலும் பாதகமாகவே அமையும். இதில் ஓய்வுபெறாத சர்வதேச வீரர்கள் விளையாடுவது இன்னும் தவறு. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும். ஆனால், அவர்களும் பிசினஸ் செய்பவர்கள்தானே!


டிரெண்டிங் @ விகடன்