வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:43 (18/12/2017)

ஷ்ரேயாஸ் ஐயர்... இந்திய மிடில் ஆர்டரின் மீகாமன்! #ShreyasIyer

“நீதான் பேட்ஸ்மேனா? உங்கிட்ட சரக்கு இருக்கிறது மாதிரி தெரியலையே. எங்க... உன் ஆட்டத்தைப் பார்ப்போம்” - டேவிட் வார்னர் தூண்டி விடுகிறார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களின் இயல்பு. ஆனால், கவுன்ட்டர் அட்டாக் கொடுப்பது ஷ்ரேயாஸ் ஐயர் பிறவி குணம். 

Shreyas Iyer

“யாராவது என்னிடம் வம்பிழுத்தால், பதிலடி கொடுத்துவிடுவேன். ஒரு சீனியர் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருப்பதால், அமைதி காத்தேன். கொஞ்சம் ரன் அடித்துவிட்டு, ஸ்லெட்ஜிங் செய்யலாம் என நினைத்தேன். எனக்கான தருணம் வந்தது. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தேன். யார் பெளலர், பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. இறங்கி வந்து முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததைப் பார்த்து நாதன் லியான் மிரண்டுவிட்டார். அவர் சிறந்த பெளலராக இருக்கலாம். ஆனால், அது என்னுடைய நாள்’’ - ஷ்ரேயாஸ் சொன்னது போலவே அது அவருடைய நாள். மும்பையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்தப் பயிற்சிப் போட்டியில் ஷ்ரேயாஸ் விளாசியது 202 ரன்கள். வார்னர் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸி அணியும் கப்சிப்.

ஷ்ரேயாஸ்...  ஸ்டீவ் ஸ்மித்தை இமிட்டேட் செய்து, லாராவின் பேக் லிஃப்டை Copy செய்து, சேவாக்கின் குணத்தோடு இந்திய அணியில் நடமாடும் பயமறியா காளை. விசாகப்பட்டினத்தில் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தபோதே தெரிந்துவிட்டது; இல்லை, மொஹாலியில் ரோகித்துடன் இணைந்து இலங்கை பெளலர்களை மிரள வைத்தபோதே புரிந்துவிட்டது; இல்லை இல்லை, ரஞ்சி டிராபியில் அஷ்வின் பந்தைக் குறிவைத்து வெளுத்தபோதே தெரிந்துவிட்டது; இல்லை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தபோதே தெரிந்துவிட்டது... இல்லை இல்லை, 2015 -16 ரஞ்சி சீசனில் 1,321 ரன்கள் விளாசியபோதே சொன்னார்கள்... அவ்வளவு ஏன், 2015 ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்காக விஸ்வரூபம் எடுத்தபோதே கணித்தார்கள்... ஷ்ரேயாஸ், இனி இந்திய கிரிக்கெட்டை ஆள்வான் என்று... ஆம், மும்பை கிரிக்கெட் பட்டை திட்டீய இன்னொரு வைரம்!

Shreyas Iyer

பெளலர்கள் லெந்த்தை, லைனை மிஸ் செய்யும்போது வெளுப்பது ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. விசாகப்பட்டினம் போட்டியில் பெளலர் மேத்யூஸ் அப்படியொரு மிஸ் செய்தார்.  ஷ்ரேயாஸ் அதை பக்கவாக யூஸ் செய்தார். புல் ஷாட். டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி. குட் லெந்த்தில் வரும் பந்தை, கவர் டிரைவ் மூலம் பவுண்டரிக்கு விரட்டினால் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். மேத்யூஸ் பந்தில் நேற்று ஷ்ரேயாஸ் விரட்டியது அந்த ரகம். வேகப்பந்தை விட ஸ்பின்னர்களைக் கதறவிடுவது தனிக் கலை. அதுவும் பிட்ச்சான பந்து சுழலும் முன் லாங் ஆனில் சிக்ஸர் பறக்கவிடுவதெல்லாம் வேற லெவல். பதிரனா பந்தில் ஷ்ரேயாஸ் அப்படி ஒரு ஷாட் அடித்தார் இல்லையா? ஷார்ட் பால், அதுவே கொஞ்சம் பெளன்ஸராக வந்தால் என்ன செய்யலாம்? சேவாக், சச்சின் இருவரும் அதை அலட்டாமல், அப்பர் கட் மூலம் தேர்ட் மேன் ஏரியாவில் பவுண்டரியை கிளியர் செய்வர். ஷ்ரேயாஸ் மட்டும் என்னவாம்? லேட் கட் பவுண்டரிகள் ராகுல் டிராவிட்டுக்குக் கைவந்த கலை அல்லவா? நேற்று ஷ்ரேயாஸ் அரைசதம் அடித்தபின் ஆடியது அந்த ரகம்தானே!

“நீங்கள் ஏதாவது ஒரு ஷாட்டில் மட்டும் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தால், எதிரணி அதற்கேற்ப ஃபீல்டிங் செட் செய்து உங்களைத் தடுத்து விடும். ரொட்டேட் தி ஸ்ட்ரைக் ரொம்ப முக்கியம்’’ என்பது டிராவிட் கருத்து. இந்திய ‘ஏ’ அணி வீரர்களுக்கு அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை இது. “அதற்காக உங்கள் இயல்பான ஆட்டத்தை மாற்ற வேண்டாம்’’ என்பது அந்த ஜாம்பவானின் வேண்டுகோள். டிராவிட் சொன்ன இந்த இரு விஷயங்களையும் ஷ்ரேயாஸ் அப்படியே பின்பற்றுகிறார். குட் லெந்த் பந்துகளை டிரைவ் செய்வது, ஷாட் பால்களை புல் ஷாட் அடிப்பது, பெளன்ஸர்களை அப்பர் கட் செய்வது,  ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வரும் பந்துகளை லேட் கட் ஆடுவது, இடுப்புக்கு மேலே வரும் பந்தை ஃப்ளிக் செய்து, லெக் ஸ்பின்னை ஸ்வீப் செய்வது என ரொட்டேட் தி ஸ்ட்ரைக்கில் கில்லியாக இருக்கும் ஷ்ரேயாஸ், ஒருபோதும் தன் இயல்பான ஆட்டத்தைக் கைவிட்டதில்லை. முதல் பந்தோ, கடைசி பந்தோ ஒரே அடி... அதிரடி... அவருக்கு பேட்டில் பந்து படும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சந்தித்த முதல் பந்தில் இருந்தே ரன் எடுக்க வேண்டும். 

Shreyas Iyer

மொஹாலியில் ரோஹித் ஷர்மா அடித்த டபுள் செஞ்சுரி, ஷ்ரேயாஸின் (88 ரன்) ஆட்டத்தை மழுங்கடித்து விட்டது. ஆனால், விசாகப்பட்டினத்தில் ஷிகர் தவன் சதம் அடித்தபோதும், ஷ்ரேயாஸின் அரைசதம் தனித்துத் தெரிந்தது. ஆம், சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்த மூன்று போட்டிகளில் இரண்டில் அடுத்தடுத்து அரைசதம். ஃபீல்டிங்கிலும் சூரப்புலி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பைக்காக வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  டெஸ்ட் தொடருக்கு அவரை அழைத்தனர் தேர்வக் குழுவினர். பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும், சப்ஸ்டிட்யூட் பிளேயராக அசத்தினார். ''போ... ஏதாவது மேஜிக் செய்...!’’ என கும்ப்ளே யதார்த்தமாகத்தான் சொல்லியனுப்பினார். சொன்னதுபோலவே ஒரு ரன் அவுட் செய்தார். பெவிலியன் திரும்பியதும், ''நீ தரம்சாலா வந்ததற்கு இது ஒண்ணுபோதும்!’’ எனப் பாராட்டினார் கும்ப்ளே. கோலி விரும்பும் ஆட்டிட்யூட், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே ஷ்ரேயாஸிடம் இருப்பதால், பிளேயிங் லெவனில் அவரை இனி தவிர்க்க முடியாது. 

விராட் கோலியின் இடத்தில் இறங்கியவர் இன்று, நான்காம் இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்களின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டார். தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரிவர நிரூபிக்கவில்லை. இது ஷ்ரேயாஸுக்கு சாதகம். தவிர, யுவராஜ், ரெய்னா என சீனியர்களின் கரியருக்கும் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இனி, இந்திய அணித் தேர்வில், ஏகமனதாக மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் பெயர் டிக் செய்யப்படலாம். ஆனாலும்...

Shreyas Iyer

அவர் சதத்துக்காக ஆடவில்லை. அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆடவில்லை. மனம் சொல்வதைக் கேட்கிறார்... சேவாக் போல. இதுதான் ஆபத்தும் கூட. ஸ்லிப்பில் நிற்கும் எல்லோரும் மேத்யூஸ் இல்லை. தேர்ட் மேன் ஏரியாவில் நிற்கும் எல்லோரும் அகிலா தனஞ்செயா இல்லை. எல்லா பிட்ச்சும் ஃபிளாட் பிட்ச்கள் இல்லை. தென்னாப்பிரிக்கா வேற மாதிரி இருக்கும். அங்கு இந்த அப்பர் கட்கள் வேலைக்காகாது. எல்லா பந்திலும் ரன் எடுக்க முடியாது. பொறுமை அவசியம். மோசமான பந்தை சிக்ஸ் அடிப்பதை விட, நல்ல பந்தைத் தொடாமல் விடுவது முக்கியம். தரம்சலாவில் நேர்ந்தது போல 16/4 எங்கும் சாத்தியம். அங்கு தோனி ஆடியதைப் போல ஒரு இன்னிங்ஸ் ஆடவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தடுத்து அரைசதம் அடித்ததைப் பாராட்டியதற்கு நிகராக காட்டமான விமர்சனங்களும் வரும். ஷ்ரேயாஸ் இதை நிச்சயம் உணர்ந்திருப்பார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்