வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (19/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (19/12/2017)

பிராட் மேனை நெருங்கும் ஸ்டீவன் ஸ்மித்!

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். 

Photo Credit: ICC


பெர்த் டெஸ்டில் இரட்டை சதமடித்து (239) அசத்திய ஸ்மித், ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 945 புள்ளிகளைப் பெற்றார். பிரிஸ்பேன் டெஸ்டுக்குப் பின்னர் 938 புள்ளிகளுடன் இருந்த ஸ்மித்துக்கு, பெர்த் டெஸ்டில் அடித்த இரட்டை சதம் கூடுதலாக 7 புள்ளிகளைப் பெற்றுத்தந்தது. இதன்மூலம், டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் லென் ஹட்டனுடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட் மேன், 961 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

அதேபோல், 114 டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள ஸ்மித், அதிக போட்டிகளில் இந்த சாதனையைத் தக்க வைத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இதில், கேரி சோபர்ஸ் (189 டெஸ்ட் போட்டிகள்), விவியன் ரிச்சர்ட்ஸ் (179 டெஸ்ட் போட்டிகள்), லாரா (140 டெஸ்ட் போட்டிகள்) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (139 டெஸ்ட் போட்டிகள்) ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களில் இருக்கின்றனர். 

ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியி கேப்டன் விராட் கோலி, 893 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு இந்திய வீரரான சட்டீஸ்வர் புஜாரா, 873 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். நான்காவது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் மற்றும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இருக்கின்றனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தில் இருக்கும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ரபாடா இரண்டாவது இடத்திலும், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் முறையே 3 மற்றும் 4 இடத்திலும் இருக்கின்றனர்.