வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (19/12/2017)

கடைசி தொடர்பு:20:30 (19/12/2017)

வெளிநாட்டில் திருமணம் செய்தது சரியா? - விராட் கோலிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ கேள்வி!

வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டது ஏன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அவரது நீண்டநாள் காதலி அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில் கடந்த 11ல் திருமணம் நடைபெற்றது. இத்தாலியில் டுஸ்கானி மாகாணத்தில் உள்ள பிப்பியானோ என்ற கிராமத்தில் உள்ள சொகுசுவிடுதியில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தது. இந்தநிலையில், விராட் கோலி வெளிநாட்டில் சென்று திருமணம் செய்துகொண்டது ஏன் என்று மத்தியப்பிரதேச மாநிலம் குணா தொகுதி எம்.எல்.ஏ. பன்னாலால் ஷாக்யா கேள்வி எழுப்பியுள்ளார். புனேவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஷாக்யா, ‘ராமர், கிருஷ்ணர், விக்ரமாதித்யா உள்ளிட்டோர் நம் நாட்டில்தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதேபோல், இங்கு கூடியிருக்கும் மக்கள் அனைவரும் நமது நாட்டிலேயே திருமணம் செய்துகொண்டனர் அல்லது திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால், நம்மில் யாரும் விராட் கோலி போல வெளிநாட்டில் சென்று திருமணம் செய்துகொள்ள மாட்டோம். பணத்தையும், புகழையும் இங்கு சம்பாதித்த விராட் கோலி, அவற்றையெல்லாம் வெளிநாட்டுக்கு அவர் எடுத்துச் சென்றுவிட்டார்’ என்று அவர் பேசினார்.