வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (21/12/2017)

கடைசி தொடர்பு:19:13 (21/12/2017)

சிந்து ஃபைனல்களில் தடுமாறுவது ஏன்... பலம்தான் பலவீனமா?!

இந்த ஆண்டு மட்டும் ஆறு தொடர்களின் இறுதிப்போட்டிகளுக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து. உலக சாம்பியன்ஷிப், துபாய் உலக சூப்பர் சீரீஸ் போன்ற மிகப்பெரிய தொடர்களும் அவற்றுள் அடக்கம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலுமே வெற்றியை மயிரிழையில் தவறவிட்டார் சிந்து. தோல்வி ஒருபோதும் அவரை வதைப்பதில்லை. துவண்டுவிடாமல் ஒவ்வொரு தொடரிலும் அடுத்தகட்டத்தை எட்டிக்கொண்டே இருக்கிறார்.

சிந்து

சிந்துவின் கடின உழைப்பை, ரியோ ஒலிம்பிக் முதலே பார்த்துவருகிறோம். இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டு, 1 மணி நேரம் 23 நிமிடங்கள் போராடினார். அதைப்போல், ஆகஸ்ட் மாதம்  நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்த்து  1 மணி நேரம் 50 நிமிடம் போராடினார். உலக சூப்பர் சீரிஸ் ஃபைனலில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்த்து 1 மணி நேரம் 34 நிமிடங்கள் விளையாடினார். இந்த மூன்று போட்டிகளிலும் ஓர் ஒற்றுமை உண்டு: மூன்று போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார் சிந்து! 

யாரும் குறைகூற முடியாத உழைப்பை ஒவ்வொரு போட்டியிலும் செலுத்துகிறார். எந்த ஒரு இறுதிப்போட்டியிலும் அவர் மனதளவில் தனக்குத் தடையை ஏற்படுத்திக்கொண்டதில்லை. இருந்தும்கூட, தங்கப்பதக்கம் வாங்கவிடாமல் அப்படி என்னதான்  அவரைத் தடுக்கிறது? ஒட்டுமொத்த நாடும் தன்னை உற்றுநோக்கும் அனுபவம் முதன்முதலில் சிந்துவுக்கு ரியோ ஒலிம்பிக்கில்தான் அமைந்தது. அந்த அழுத்தத்துக்கு அப்போது அவர் புதிது. ஆனால், அவர் இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் மற்றும் சூப்பர் சீரீஸ் இறுதிப்போட்டிகளில் இந்த அழுத்தத்துக்குத் தன்னை நன்றாகவே தயார்செய்து வைத்திருந்தார்.

sindhu

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சிந்துவுக்கு எதிராக ஆடிய மரின், இடதுகை ஆட்டக்காரர். சிந்துவை வீழ்த்துவதற்கான எல்லா கோணங்களையும் அலசி ஆராய்ந்து விளையாட, மிக எளிதாகவே இது அவருக்குப் பேருதவி புரிந்தது. அப்போது சிந்துவுக்குக் கிடைத்திருந்த ஒலிம்பிக் அனுபவங்கள் மிக மிகக் குறைவு. அதைத் தொடர்ந்து அவர் ஆடிய உலக சாம்பியன்ஷிப் மற்றும் சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டிகளில் இரண்டு எதிராளிகளுமே ஜப்பானியர்கள் என்பதையும் அவ்வளவு எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியாது. 

இயல்பாகவே நம் கண்ணில் தென்படும் விஷயம், போட்டியின் பாதியிலேயே அவருடைய உடல் சோர்வடைந்துவிடுவதுதான். ஏன்? `எதிராளிகள் எல்லாம் இந்த ஒன்றரை மணி நேரத்தில் சோர்வடைவது இல்லையா?' எனக் கேட்கலாம். உண்மைதான். அவர்களும் சோர்வடைகின்றார்கள். ஆனால், சிந்துவைப்போல பாதி நேரம் கடந்தவுடனேயே அவர்கள் சோர்வடைவதில்லை. சிந்துவின் திறமையைக் குறை சொல்வதற்காக இதை இங்கு பதிவுசெய்யவில்லை. சிந்துவின் விளையாட்டுப் பாணி, அவருடைய உடல் சோர்வுக்கு ஒரு காரணமாக அமைகிறது. 

சிந்துவின் உயரம், அவருடைய மிகப்பெரிய பலம். ஆட்டக்களத்தில் பந்து எங்கு வீசப்பட்டாலும் அதை எளிதாக எதிராளியிடம் திருப்பிச் செலுத்துவது சிந்துவுக்குக் கைவந்தகலை. அதுவே சிந்துவின் பலம் என்றுகூட சொல்லலாம். எதிரியின் பலவீனம்தானே நமக்கு பலம்? சிந்துவின் எதிராளிகள் அனைவருமே, அவரைப் பெரிதாக ஓடவிடுவதில்லை. மிக மிகக் குறுகலான கோணங்களில்தான் சிந்துவிடம் பந்து வருகிறது. ஆதலால், அவர் தன்னுடைய களம் முழுக்க ஓடியாடி விளையாடுவதைவிட, குனிந்து நிமிர்ந்து ஆடுவதே அவசியமாகிறது. அவருடைய உயரம், இதற்கு அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை.

ஒலிம்பிக் முடிந்த பிறகே, சிந்துவுக்குத் தன்னுடைய உடல் வலிமையையும் ஒத்துழைக்கும் திறனையும் நன்றாக மேம்படுத்துவதன் அவசியம் புரிந்தது. அன்றுமுதலே அவர் அதற்கான பயிற்சிகளையும் தீவிரமாக எடுத்துவருகிறார். அதை அவர் மேலும் மேம்படுத்தினால், சிக்கலான தருணங்களில் அது அவருக்குப் பெரிதும் கைகொடுக்கும். தாக்குதல் பாணி ஆட்டக்காரராகச் சிந்து இருப்பதால், அனைத்து ஷாட்களையும் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் அணுகுகிறார். பாதி ஆட்டத்தில் அவருடைய உடல் சோர்ந்துபோவதற்கு, இதுவும் ஒரு காரணம். 

வேர்ல்டு சூப்பர் சீரிஸ் ஃபைனலில் யமாகுச்சியுடன் நடந்த ஆட்டத்திலும் சரி, ஒகுஹாராவுடன் ஆகஸ்டில் நடந்த ஆட்டத்திலும் சரி, பயிற்சியாளர் கோபிசந்த், சிந்துவுக்குக் களத்தில் சொல்லிக்கொண்டே இருந்தது, ``சக்தியை வீணாக்காதே... சரியான தருணங்களில் மட்டும் அடித்து ஆடு!'' என்பதுதான். ஆனால், மிக எளிதாகவே யமாகுச்சியுடன் நடந்த போட்டியில் சிந்து சோர்ந்துபோய்விட்டார். யமாகுச்சி, ஆட்டநுணுக்கங்கள் அனைத்திலும் தேர்ந்தவர். அதைவிட அவருடைய பெரிய பலம், இக்கட்டான சூழ்நிலைகளும் சோர்ந்துபோகாத உடற்கட்டும், சக்தியும்தான். இந்த இரண்டு போட்டிகளிலுமே, அவர் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணம், அவர் கையை மீறிய தவறுகள் அனைத்தும் அவருடைய உடல் சோர்வினால் ஏற்பட்டவைதாம். 

சிந்துவுக்கு ஏற்கெனவே ஆட்ட நுணுக்கங்கள் அனைத்தும் விரல்நுனியில் உள்ளன. எனவே, ஒரு அத்லெட்டான அவர் தற்போது கவனிக்கவேண்டிய விஷயம், உடல்சோர்வடையாமல் காப்பது மட்டுமே. அதற்கேற்ப பயிற்சிகளையும் உத்திகளையும் மாற்றி அமைத்தால், சிந்து சிங்கநடை போடுவார்!


டிரெண்டிங் @ விகடன்