வெளியிடப்பட்ட நேரம்: 03:16 (22/12/2017)

கடைசி தொடர்பு:14:09 (22/12/2017)

'ஸ்டைலில் கங்குலி... அதிரடியில் ஷேவாக்..!' - விரட்டி விரட்டி வெளுக்கும் ஷிகர் தவான்

கிரிக்கெட்டில் சிலரது ஓய்வு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். `இவர் மீண்டும் வருவாரா?' என்பதைவிட, `இவரைப் போன்று இன்னொருவர் கிடைப்பாரா?' என்ற ஏக்கம்தான் அதிகம் இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்தாலும், `இன்னும் டிராவிட்டின் இடத்தை நிரப்ப முடியவில்லையே, லட்சுமண் போன்ற வீரர் இன்னும் வரவில்லையே' என்ற ஏக்கச் சொற்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஜாம்பவான்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், அவர்களுக்கு நிகராக சில சமயங்களில் புதிய வீரர்கள் விளையாடும்போது, ஃப்ளாஷ்பேக்குகள் நம்மை எவர்கிரீன் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். 

கோலியின் கவர் டிரைவ்கள், சச்சினின் கிளாசிக்கல் ஷாட்களை நினைவுப்படுத்தும். அனைவரும் ஆட்டமிழக்க, தனி ஆளாக புஜாரா போராடும்போதெல்லாம் டிராவிட் ரசிகர்கள் அவரது இன்னிங்ஸ்களை அசைபோடுவர். எண்ணிப்பார்க்க இப்படியான நினைவுகள் ஏதுமில்லா, கங்குலி ரசிகர்களுக்காக அடியெடுத்து வைத்தார் ஷிகர் தவான். 5 அடி 11 அங்குலம். கங்குலியின் அதே உயரம். அவரைப் போன்றே இடதுகை பேட்டிங். அதையெல்லாம் தாண்டி, ஆஃப் சைடு வீசப்பட்ட பந்துகள் எல்லாம், புயல் வேகத்தில் பெளண்டரிக்குச் செல்ல... `ஆஃப் சைடின் கடவுள்' என வர்ணிக்கப்பட்ட கங்குலியின் இன்னிங்ஸைப் பார்த்ததுபோன்ற மிரட்சி. ஆடுவது கங்குலிதானோ என்றுகூட தோன்றியது. சர்வதேசக் கிரிக்கெட்டின் என்ட்ரியே ஒரு மாஸ் வீரனைப் போன்ற என்ட்ரி... மாஸ் என்ட்ரி!

தவான்

2013, மொஹாலி டெஸ்டில் அறிமுக வீரராகக் களமிறங்கியபோது, சேவாக்கையும் நினைவுப்படுத்தத் தவறவில்லை ஷிகர். மூன்றாவது போட்டிக்கான அணியில், சேவாக்கின் இடம் தவானுக்கு வழங்கப்பட்டது. மிகப்பெரிய பொறுப்பு. அறிமுக வீரர். ஆழம் பார்த்துவிடலாம் என நினைத்தது ஆஸ்திரேலியா. ஆனால், அவரது டீலிங்கே வேற மாதிரி இருந்தது. ஒருநாள் போட்டியைப்போல் ஆடினார். மிட்சல் ஸ்டார்க், பீட்டர் சிடில், நாதன் லயான், டோஹர்டி என அனைவரையும் புரட்டியெடுத்தார். 

நான்கு ஆண்டுகளாக அணியின் நம்பிக்கையான வீரர்களுள் ஒருவராக தவான் திகழ்வதற்கு, அவரது இந்த அணுகுமுறையே காரணம். பௌலர் யார், அணியின் ரன்ரேட் என்ன, எந்த மாதிரியான பிட்ச்... இவை எதுவும் தவானின் ஆட்டத்தைத் தீர்மானித்ததுமில்லை; கட்டுப்படுத்தியதுமில்லை. அவரது ஆட்டத்தைத் தீர்மானிக்கும் ஒரே விஷயம் - ஷிகர் தவான். ஏதோ பெயருக்கு முதல் ஓவர் மட்டும் பௌலரை ஆசுவாசப்படுத்திவிட்டு, இரண்டாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை `டேக் ஓவர்' செய்துகொள்கிறார். ஆஃப் சைடு ஷாட்களில் கங்குலியைக் கண்ட இந்திய ரசிகன், இவரது அதிரடியில் சேவாக்கையும் கண்டு சந்தோஷப்பட்டான்.

தவான்

இந்திய அணி உலக அரங்கில் சாதிப்பதற்கு அச்சாணியாக விளங்கியதே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்தான். சச்சின் - கங்குலி, சச்சின் - சேவாக், சேவாக் - கம்பீர் என 20 ஆண்டுகள் பக்கா ஓப்பனர்கள் கிடைக்க, `அடுத்த தலைமுறைக்கு யார்?' என்ற பெரிய கேள்வி. எல்லோரும் சுமாரான வீரர்கள். அந்த ஜாம்பவான்களுக்கு இணையாகச் சாதிக்க வேண்டும். ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து அப்படியொரு கூட்டணியை உருவாக்கினார். டெஸ்டில் விஜய்யுடன். மிகவும் பொறுமையாக இன்னிங்ஸை பில்ட் செய்வது ரோஹித்தின் ஸ்டைல். இவரும் அப்படி ஆடினால் ஆரம்பத்திலேயே எதிரணியின் நம்பிக்கை அதிகரித்துவிடும். அணியின் ப்ளானும் சொதப்பக்கூடும். தன் அதிரடி ஆட்டத்தால் அதையெல்லாம் பேலன்ஸ் செய்துகொண்டிருக்கிறார் ஷிகர், கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல்!

உண்மையான ஒரு பேட்ஸ்மேனின் திறமை, நெருக்கடியான தருணங்களில்தான் வெளிப்படும். அப்படிப்பட்ட தருணங்களில் தவான் தன்னை பலமுறை நிரூபித்துள்ளார். ``ஐ.சி.சி டோர்னமென்ட் வந்தாலே சின்ராசை கையில புடிக்க முடியாது" என்று மீம் போடும் அளவுக்கு, மிக முக்கியத் தொடர்களில் மெர்சல் ஆட்டம் ஆடியுள்ளார். 2013 மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் டாப் ரன் ஸ்கோரர் இவரே. 2015 உலகக்கோப்பையில், இந்தியாவின் பெஸ்ட் பேட்ஸ்மேன் இவரே. ஐ.சி.சி தொடர்களில் இவரது சராசரி 65.47. ஐந்து சதங்கள் அடித்திருக்கிறார். 

ஐ.சி.சி தொடர்களில் மட்டுமல்ல, மிக முக்கியப் போட்டிகள் ஒவ்வொன்றிலும், அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 2013-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் தொடரிலும் ஆஸி. அணியைக் கதறவிட்டார் ஷிகர். 360 என்ற இலக்கை இந்தியா துரத்திய இரண்டாவது போட்டியில் 86 பந்துகளில் 95 ரன் எடுத்து, அணியின் பிரஷரை வெகுவாகக் குறைத்தார். அதே தொடரின் நான்காவது போட்டி - மீண்டும் பெரிய டார்கெட். 350 ரன் எடுக்க வேண்டும். 102 பந்துகளில் சதம். இந்தியா வெற்றி பெற்றது. இப்படி மிகப்பெரிய போட்டிகளில், மிகப்பெரிய அணிகளை எதிர்கொள்வதில் தவான் கில்லி!

கம்பேக் கொடுப்பதிலும் தவான் கெத்துதான். கங்குலி, யுவராஜ் சிங் போல் மிரட்டல் கம்பேக் கொடுத்தவர். கம்பேக்கின் காலகட்டம் குறுகியதாக இருந்ததால், அது பெரிய அளவில் பேசப்படவில்லை. 2011-ம் ஆண்டில் ஒருநாள் அணிக்குள் நுழைந்த தவான், முதல் 5 போட்டிகளில் 69 ரன்தான் எடுத்தார். இரண்டு ஆண்டுகள் ஓரங்கட்டப்பட்டார். 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுக்க முழுக்க இளம் அணியை அனுப்ப நினைத்து, தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2 சதம், 1 அரைசதம். அணியின் முக்கிய ஆளாக உருவெடுத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் காயத்தாலும், மோசமான ஃபார்மாலும் பல டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்டார். இலங்கை தொடரில் சேர்க்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 190 ரன் குவித்தார்.

இப்படி ஒவ்வொரு தருணத்திலும் தன்னை நிரூபித்துள்ளார் தவான். இந்த நான்கு ஆண்டுகளில் இவரது கன்சிஸ்டென்சியும் ஆச்சர்யப்படக்கூடியதே. இந்திய ஒருநாள் அணியில், அசைக்க முடியா அங்கமாகிவிட்டார். `தென்னாப்பிரிக்கத் தொடரில் தவான் இந்தியாவின் முக்கிய வீரர்' என அந்த அணியின் முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித்கூட தெரிவித்துள்ளார். ஆம், தவான் அந்த வெளிநாட்டு மைதானங்களை எப்படி டேமேஜ் செய்யக்கூடியவர் என்பதை அவர்கள் அறிவார்கள். கோலி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றிகளுக்கு தவானும் மிகப்பெரிய அங்கம்!


டிரெண்டிங் @ விகடன்