வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (22/12/2017)

கடைசி தொடர்பு:15:25 (22/12/2017)

ஊதியப் பிரச்னையால் உகாண்டாவில் தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!

உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த ஆஃப்ரோ டி20 லீக் தொடரில் பங்கேற்பதற்காக சயீத் அஜ்மல், யாசிர் ஹமீத், இம்ரான் பர்ஹாத் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் சென்றனர். 


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் வீரர்கள் உகாண்டாவுக்குச் சென்றனர். கம்பாலா நகருக்கு விமானம் மூலம் அவர்கள் சென்றடைந்த பின்னரே, ஸ்பான்சர்கள் விலகியதால் கடைசி நேரத்தில் அந்த டி20 லீக் தொடர் கைவிடப்பட்டது தெரியவந்தது. இரண்டு நாள்கள் நடைபெற வேண்டிய போட்டிகள் கைவிடப்பட்ட பின்னர், தங்களுக்குக் கொடுக்கப்படுவதாக உறுதியளித்த ஊதியத்தில் 50 சதவிகிதத்தையாவது கொடுக்கும்படி போட்டியை ஏற்பாடு செய்திருந்த உகாண்டா கிரிக்கெட் சங்கத்திடன் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தொடரின் ஸ்பான்சர்கள் விலகியதால் பணம் கொடுக்க முடியவில்லை என்று அவர்கள் கைவிரித்தனர். 
இதுகுறித்து பேசிய கிரிக்கெட் வீரர் ஒருவர், ‘டி20 லீக் தொடரின் முக்கியமான ஸ்பான்சர் விலகியதால், தங்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்று உகாண்டா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் எங்களிடம் தெரிவித்தனர். நாங்கள் உடனடியாகச் சொந்த நாட்டுக்குத் திரும்ப விரும்பினோம். விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கொடுக்கவில்லை என்பது விமான நிலையம் சென்றபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. இதனால், வேறுவழியின்றி தங்கியிருந்த ஹோட்டலுக்கு நாங்கள் திரும்பி விட்டோம். இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திடமும் உகாண்டாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடமும் பேசியிருக்கிறோம். பாகிஸ்தான் திரும்ப அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்’ என்றார். 
ஆனால், உகாண்டாவில் பத்திரமாக இருப்பதாக வீரர்களுடன் எடுத்த செல்ஃபி ஒன்றை சயீத் அஜ்மல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.