காலையில் ஸ்டூவர்ட் பிராட்... மாலையில் அலெஸ்டர் குக்... இன்று இங்கிலாந்தின் தினம்! #Ashes | Alastair Cook's Century keep England on course

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (27/12/2017)

கடைசி தொடர்பு:19:05 (27/12/2017)

காலையில் ஸ்டூவர்ட் பிராட்... மாலையில் அலெஸ்டர் குக்... இன்று இங்கிலாந்தின் தினம்! #Ashes

260/4 to 327/10. வாட்டே கம்பேக். எல்லோரும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஸ்டூவர்ட் பிராட் அள்ளியது நான்கு விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்களில் ஆல் அவுட். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள், இங்கிலாந்தின் நாள். ஆம், முதன்முறையாக ஆஷஸ் (Ashes) தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கொஞ்சமேனும் ஆட்டம் காட்டியிருக்கிறது இங்கிலாந்து. பெளலர்கள் 67 ரன்களில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்த, அலெஸ்டர் குக், ஜோ ரூட் பேட்டிங்கில் சார்ஜ் எடுத்துக்கொண்டனர். டெஸ்ட் அரங்கில் குக் 32-வது சதம் அடித்து நாட் அவுட். அவருக்குப் பக்கபலமாக ஜோ ரூட் 49 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 192/2.

 Alastair Cook - Ashes

ஆஷஸ் எப்போதோ இங்கிலாந்திடம் இருந்து கைநழுவிவிட்டது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் டெஸ்ட்களில் சுரத்து இல்லை. கிட்டத்தட்ட எல்லாமே ஒன்சைட் கேம். ஸ்மித் சதம் அடிப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆஷஸின் இயல்பான ஆக்ரோஷம் மிஸ்ஸிங். பாக்ஸிங் டே டெஸ்ட் கிட்டத்தட்ட இந்த ஆஷஸின் டெட்ரப்பர். இதில் வென்றாலும் கோப்பை வரப் போவதில்லை. ஆனால், இங்கிலாந்தின் மானம் காக்கப்படும். டெஸ்ட் போட்டிகளை ஐந்து நாள்கள் நடக்கும் போட்டியாகப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். அதையே Session, Session-ஆகப் பிரித்துப் பார்த்தால் எளிது. இது டிராவிட் பாணி. லஞ்ச் பிரேக் வரை தாக்குப் பிடித்துவிட்டால் போதும் என்பாராம். மதிய உணவு இடைவேளைக்குப் பின், டீ பிரேக் வரை தாக்குப்பிடித்துவிட்டால் போதும் என்பாராம். Second session முடிந்ததும், ‘இவ்வளவு நேரம் ஆடிட்டோம், இனி ஒரு Session தாக்குப்பிடிக்க முடியாதா?’ என்பாராம். டெஸ்ட் போட்டிகளில் தாக்குப் பிடிக்கும் கலை இது. 

Stuart broad celebrates his 4 wicket haul- Ashes

ஒரு வழியாக, இங்கிலாந்து வீரர்கள் முதன்முறையாக இந்த ஆஷஸ் தொடரில் Session-ல் தாக்குப்பிடிக்கும் ஃபார்முலாவைக் கண்டுபிடித்துவிட்டனர். மெல்போர்னில், பாக்ஸிங் டே அன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளில், டேவிட் வார்னர் சதம், ஸ்மித் சதத்தை நோக்கிய வேகம் என ஆஸ்திரேலியா மிரட்டியது. 244/3. நாட் பேட். ஆனால், இரண்டாவது நாளில் ‘இது எங்க நாள்...’ என மிரட்டினர் ஸ்டூவர்ட் பிராட் அண்ட் கோ.

இங்கிலாந்து பேட்டிங். ஸ்டோன்மேன் 15, வின்ஸ் 17 ரன்களில் வெளியேற, கேப்டனும், முன்னாள் கேப்டனும் பொறுப்பேற்க வேண்டிய நிலை. அலெஸ்டர் குக் கடந்த 10 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஷஸ் போன்ற பெரிய தொடரில், ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக, பெரிய இலக்கைத் துரத்தும்போது, குக் போன்ற அனுபவ வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். ஆனால், குக் இந்தத் தொடரில் நேற்று வரை இப்படியொரு ஆட்டம் ஆடவில்லை. ஆனால், இன்று ஆடினார். பாயின்ட், கவர், லெக் சைடு என எல்லா திசைகளிலும் தேர்ந்தெடுத்து ஷாட் ஆடினார். 66 ரன் எடுத்திருந்தபோது மிட்செல் மார்ஷ் பந்தில் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார். கேட்ச் மிஸ். நம்பமுடியவில்லை. குக் தப்பினார். இங்கிலாந்து தப்பியது.

Smith dropped a catch

எப்படியும் குக் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். ஜோ ரூட் - குக் பார்ட்னர்ஷிப்பை் பிரிக்க வேண்டும் என போராடினார் ஸ்மித். பெளலர்களை மாற்றினார். ஃபீல்டர்களை மாற்றினார். ம்ஹும்... ‘நானே முதல்ல பெளலர்டா, அப்புறம்தான் பேட்ஸ்மேன்...’ என பந்தைக் கையில் எடுத்தார். பலனில்லை. குக்கை அவுட் செய்யமுடியவில்லை. ரூட் - குக் பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்ய முடியவில்லை. மாறாக, குக் சதத்தை நெருங்கியிருந்தார். கேட்ச் மிஸ் செய்ததை விக்கெட் எடுத்து நேர்த்தி செய்துவிடலாம் என முயன்றார் ஸ்மித். விதி, அவர் பந்திலேயே லெக் சைடில் ஒரு பவுண்டரி அடித்தார் குக். சதம். டெஸ்ட் அரங்கில் 32-வது சதம். கூடவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில், எட்டாவது இடத்தில் இருந்த இலங்கையின் ஜெயவர்தனேவை  (11,814)ப் பின்னுக்குத் தள்ளினார். தற்போது வெஸ்ட் இண்டீஸின் சந்தர் பாலுக்கு (11,867) அடுத்த இடத்தில் இருக்கிறார்.  11,816 ரன்களுடன் எட்டாவது இடத்தில் இருக்கும் குக், நாளை பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சந்தர் பாலையும் பின்னுக்குத் தள்ள நேரிடும். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த எட்டாவது வீரர், சுனில் கவாஸ்கருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் முக்கியமான (பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டு,சிட்னி, மெல்போர்ன்) ஐந்து மைதானங்களில் சதம் அடித்தவர் என்ற பெருமையுடன் பெவிலியன் திரும்பிய குக்கை, ஆஸ்திரேலிய வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். டிரெஸ்ஸிங் ரூம் திரும்பியதும், நாளை குக்கை முதல் Session முடிவதற்குள் வீழ்த்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணி திட்டம் தீட்டும். குக் 104 ரன்னுடன் நிற்காமல், ஸ்மித் போல, விராட் கோலி போல இரட்டைச் சதம் நோக்கி நகர்ந்தால் மேட்ச் நன்றாக இருக்கும். குக் மட்டுமல்ல அரைசதத்தை சதமாக மாற்ற முடியாமல் திணறும் ஜோ ரூட், பெரிய இன்னிங்ஸ் ஆடினால், ஆட்டம் இன்னும் களைகட்டும். ஆஷஸ் அதன் இயல்பைப் பெறும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்