டி வில்லியர்ஸுடன் நட்பு... சக வீரர்களுக்கு ஒரு மெசேஜ்..! கோலியின் கேம் பிளான் | 'Respect the way he plays, but it's all about getting AB out' Says Virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (02/01/2018)

கடைசி தொடர்பு:10:30 (02/01/2018)

டி வில்லியர்ஸுடன் நட்பு... சக வீரர்களுக்கு ஒரு மெசேஜ்..! கோலியின் கேம் பிளான்

பொதுவாக, பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளுக்குக் கூட்டம் அள்ளும். ஆனால், டிசம்பர் 28-ம் தேதிதான் தென்னாப்ரிக்காவுக்கே சென்றது கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. ஜனவரி 3-ம் தேதி வரை தென்னாப்பிரிக்க மக்கள் புத்தாண்டு மூடில் இருப்பர். அந்த நேரத்தில் டெஸ்ட் போட்டிகள் வைத்தால் மைதானம் நிரம்பி வழியும். அதற்கும் வாய்ப்பு இல்லை. ஜனவரி 5-ம் தேதிதான், இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. "நாங்கள் முதல் டெஸ்ட் விளையாடப் போகும் பிட்ச்சுக்கும் இந்த பிட்ச்சுக்கும் 15 சதவிகிதம் கூட பொருத்தமில்லை’’ என பயிற்சிப் போட்டிகளைப் புறக்கணித்ததற்கு விளக்கம் சொன்னார் கோலி. ஆக, விடுமுறை நாள்களில் பயிற்சிப் போட்டிக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும், முதல் டெஸ்ட் போட்டிக்கு கூட்டம் அள்ளும். ஏனெனில், "போட்டி அவ்வளவு கடுமையாக இருக்கும்’’ என்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

கோலி

அவர் சொல்வது உண்மை. இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர். விராட் கோலி மூன்று ஃபார்மட்டுக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்,  துணைக்கண்டம் அல்லாத அந்நிய மண்ணில் நடக்கும் முதல் டெஸ்ட் தொடர். இத்தனை நாள்களாக ஆசிய ஆடுகளங்களில் சாதித்ததெல்லாம் பெரிதல்ல. இலங்கையில் இலங்கையைத் தோற்கடித்தது பெரிதல்ல. இலங்கையை இந்தியாவில் தோற்கடித்ததும் பெரிதல்ல. இங்கிலாந்தை அடித்ததும் பெரிதல்ல. தென்னாப்பிரிக்காவை ஜெயிக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவை தென்னாப்பிரிக்காவில் வைத்து ஜெயிக்க வேண்டும். அதுவும் டெஸ்ட் மேட்ச்சில் ஜெயிக்க வேண்டும். அதுதான் பெருமை. அப்படித்தான் சொன்னார்கள் ரசிகர்கள். சொன்னார்கள் என்ன... இப்போதும் சொல்கிறார்கள். விராட் கோலி அடுத்தடுத்து சதம் அடித்தபோது, ‘தென்னாப்பிரிக்காவில் அடிக்கட்டும்.... பார்க்கலாம்’ என்றார்கள். அவர் இரட்டைச் சதம் அடித்தபோதும் அதையேதான் சொன்னார்கள். ஒருநாள் போட்டியில் ரோஹித் மீண்டும் டபுள் செஞ்சுரி அடித்ததெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றார்கள். ‘‘இங்க அடிக்கிறதை தென்னாப்பிரிக்காவில் அடிக்கட்டும். அப்ப சொல்றேன், ரோஹித் நல்ல பேட்ஸ்மேன்னு...’’ என பந்தயம் கட்டினார்கள். ரோஹித் மட்டுமல்ல, கோலி, தவான், ரகானே, புஜாரா என எல்லோருக்கும் இதே பந்தயம்தான்...!

ரசிகர்கள் இருக்கட்டும். விராட்  கோலி தெளிவாக இருக்கிறார். இந்தப்படை வெல்லும் என்கிறார். இவர்களை வைத்து டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும் என்கிறார். இந்த அணியை வைத்து தென்னாப்பிரிக்காவில் என்ன... எந்த நாட்டிலும் வெல்ல முடியும் என்கிறார். தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகத்துக்கு ஒத்துழைக்கும், பெளன்ஸருக்கு சாதகமாக இருக்கும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார். ‘‘இந்திய ஆடுகளுங்களுக்கும் இங்கே உள்ள ஆடுகளங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் எனத் தெரியும். கடந்தமுறை நாங்கள் இங்குவந்தபோது ஷார்ட் பால்களில் தடுமாறியதாகவும், பெளன்ஸர் பந்துகளில் அவுட்டானதாகவும் குற்றச்சாட்டு இருந்தது.

இந்தமுறை பிட்ச்சின் தன்மையை நன்றாக புரிந்துவைத்திருக்கிறோம். அதனால்தான் ஒரே பிட்ச்சில் இரண்டு நாள்கள் வார்ம் அப் போட்டியில் விளையாடுவதைவிட, அந்த இரண்டு நாள்களில் வெவ்வேறு ஆடுகளங்களில், வெவ்வேறு சூழலில் பயற்சி செய்ய விரும்பினோம். இந்தியாவைவிட இங்குள்ள பிட்ச்களில் ஒவ்வொரு பந்தும் வேகமாக வரும், ஒவ்வொரு பந்தும் பெளன்ஸராக வரும் என்பதை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறோம். கடந்து சென்ற பந்தைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த பந்தை தெளிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அதிக வேகத்துடன் வருகிறது, பெளன்ஸராக வருகிறது என சிந்தித்துக்கொண்டே இருக்காமல், அதை எதிர்கொள்ளத் தயராக வேண்டும். உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சோர்ந்து விடக்கூடாது’’- என, எல்லா தரப்பிலும் தயாராக இருக்கிறார் கோலி. 

கோலி

இந்திய அணிக்கு விராட் கோலி எனில், தென்னாப்பிரிக்காவுக்கு டி வில்லியர்ஸ். சர்வதேச அரங்கில் இருவரும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். ஆர்சிபி டீம் மேட்ஸ். களத்துக்கு வெளியே நல்ல நண்பர்கள். 2016 ஜனவரிக்குப் பின் கடந்த 23 மாதங்களில் ஒரேயோரு டெஸ்ட் போட்டியில்தான் விளையாடியுள்ளார் ஏபிடி. ஆனால், விராட் கோலியின் கிராப் அப்படியல்ல. இருந்தாலும் டி வில்லியர்ஸை குறைத்து மதிப்பிட முடியுமா? ‘இந்தத் தொடரில் கோலி - ஏபிடி இருவருக்கும்தான் கடும் போட்டி’ என்கின்றன தென்னாப்பிரிக்க பத்திரிகைகள். ஆனால், வெற்றி, தோல்வியை ஒரு வீரரை மட்டுமே வைத்து மதிப்பிடக் கூடாது என்பதில் கோலி தெளிவாக இருக்கிறார்.  

‘‘எங்களுடன் விளையாடிய பின் டி வில்லியர்ஸ் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறார். டி வில்லியர்ஸ் நல்ல நண்பர். அவர் விளையாடும் விதத்தை மதிக்கிறேன். ஒரு மனிதராக எப்போதுமே அவர் மீது மரியாதை இருக்கிறது. களத்தில் ஒருபோதும் நாங்கள் எல்லை மீறியதில்லை. அதேநேரத்தில் அவரை விரைவில் அவுட்டாக்க முயற்சிப்போம். அதேபோலத்தான் எதிரணியினரும் நான் விளையாடும்போது என்னை விரைவில் அவுட்டாக்க முயல்வர். நான் மட்டுமல்ல, ரஹானே, புஜாரா யார் விளையாடினாலும் அவர்கள் திட்டம் அதுவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு இந்தத் தொடரை வென்று தர வேண்டும் என ஒவ்வொரு வீரரும் விரும்புவார். தனிநபர் ஒருவர் அற்புதமாக விளையாடலாம், ஆனால், ஒரு குழுவாக செயல்படாதவரை தொடரை வெல்ல முடியாது’’ என்றார் கோலி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்