தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்! டெல்லி வீரர்களைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் | Fans question Delhi players' sportsmanship

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (03/01/2018)

கடைசி தொடர்பு:10:30 (03/01/2018)

தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்! டெல்லி வீரர்களைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டெல்லி - விதர்பா அணிகளுக்கிடையிலான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற விதர்பா, ரஞ்சிக்கோப்பையை வென்றது இதுவே முதல்முறை. 

Photo Credit: Insta/bleed.dhonism

ஏழு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி வென்றது. முதல்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ள விதர்பா அணிக்கு, டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அந்த இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின்போது, பவுன்சர் பந்து தாக்கியதால் வேதனையில் துடித்த விதர்பா வீரர் ஒருவரை டெல்லி வீரர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது, கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதுதொடர்பாக, ரசிகர் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில், டெல்லி வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் தாக்கியதால், விதர்பா அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் வேதனையில் துடிக்கிறார். ஆடுகளத்துக்கு அருகே தரையில் படுத்தபடி துடிக்கும் அவரை, டெல்லி அணியைச் சேர்ந்த வீரர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை. மைதானத்தில் இருக்கும் நடுவர்கள்கூட அவரை  கண்டுகொள்ளாதது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. எதிர்முனையில் நின்றிருந்த மற்றொரு விதர்பா பேட்ஸ்மேன் மட்டுமே மைதானத்துக்கு வெளியிலிருந்து உதவிக்கு அழைக்கிறார். கிரிக்கெட் போட்டியில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாதா... என்று நெட்டிசன்கள் டெல்லி வீரர்களுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 'மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள்' என டெல்லி கேப்டன் ரிஷாப் பாண்டை டேக் செய்து, ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.