ஜாம்பவான்களை காலி பண்ணியது எப்படி... கத்துக்குட்டி விதர்பாவின் சக்சஸ் ஃபார்முலா! #RanjiTrophy | Vidharba's ranji triumph will change Indian cricket's fortune

வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (03/01/2018)

கடைசி தொடர்பு:14:15 (03/01/2018)

ஜாம்பவான்களை காலி பண்ணியது எப்படி... கத்துக்குட்டி விதர்பாவின் சக்சஸ் ஃபார்முலா! #RanjiTrophy

இந்தியக் கிரிக்கெட்டின் புத்தாண்டு இப்படி இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 83 ஆண்டு ரஞ்சி வரலாற்றில், பெரிதாக ஆச்சர்யங்கள் நிகழ்ந்தது இல்லை. மும்பை, கர்நாடகா, டெல்லி என தேசிய அணி வீரர்கள் அதிகம் இருக்கும் அணிகளே ஆதிக்கம் செலுத்தும். நீண்டகால முன்னேற்றத்துக்குப் பிறகு எப்போதாவது பிற அணிகள் வெற்றி பெறும். ஆனால், அதுவும் கூட எதிர்பார்த்த வெற்றியாகவே அமையும். இந்த ரஞ்சி சீசனின் முடிவு அப்படி சாதாரணமானது அல்ல. அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்தது. சொல்லப்போனால், இந்திய கிரிக்கெட்டின் பயணத்தை மாற்றக்கூடியது. அப்படியென்ன நடந்துவிட்டது? யாரும் எதிர்பாராத ஒரு வெற்றி... யாரும் எதிர்பார்க்காதவர்களின் வெற்றி... இப்படியான வெற்றிகள்தானே மாற்றத்தின் ஆரம்பம். விதர்பா - இந்திய கிரிக்கெட்டில் நடக்கப்போகும் மாற்றத்தின் ஆரம்பம்.

#RanjiTrophy

இந்தியன் டீம்ல யாரு ஆடுறா..? எல்லாம் மும்பைக்காரங்கதான். மத்த மாநிலத்துப் பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்துடுவாங்களா...?  எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், இந்திய கிரிக்கெட் அணி எத்தனை வெற்றிகளைக் குவித்தாலும், இந்தப் பழிச்சொல் இன்றுவரை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதை நம்மால் முழுதாக மறுத்துவிடவும் முடியாது. இந்திய அணியில் ஆடிய வீரர்களில் பெரும்பாலானோர் மும்பைவாலாக்கள். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா என்று அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, 1987-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மும்பைக்காரரான கவாஸ்கர். அதற்கடுத்து மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதுகிறது இந்தியா. அறிமுக வீரராகக் களமிறங்குகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - மும்பைக்காரர்!

டி-20 என்ற வார்த்தை அறியப்படாத காலத்தில், சேலஞ்சர் கோப்பை போட்டிகளில் தேசிய அணியின் சீனியர் வீரர்கள் ஆடிய காலத்தில்...ரஞ்சிக் கோப்பைதான் இந்திய அணிக்குள் நுழைவதற்கான வழி. ஒன்று புஜாரா போல் ஒவ்வொரு சீசனும் ஜொலித்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், ரமேஷ் பவார் போல் வெற்றி பெறும் அணியில் அப்படி இப்படி ஆடியிருக்க வேண்டும். ஆக, இந்திய அணிக்குள் நுழைய வெற்றி அவசியம். மும்பை அணியின் ரஞ்சி ஆதிக்கம்தான், அங்கிருந்து அதிக வீரர்கள் தேசிய அணிக்குள் நுழைவதற்குக் காரணமாக அமைந்தது. இதை உறுதிப்படுத்த பல உதாரணங்கள் உண்டு.

#RanjiTrophy

ஆம், வெற்றிகள்தாம் அணிக்குள் நுழைவதற்கு முக்கியக் காரணம். வெற்றி பெறும் அணியின் வீரர்கள் மீதுதான் வெளிச்சம் பாயும். நான்கு சீசன்களுக்கு முன்பு கர்நாடக அணி, முதல் தரப் போட்டிகளில் எழுச்சி கண்டது. மும்பைக்கே கடும் சவாலாக இருந்தது. தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் ஆனது. இதோ, மனீஷ் பாண்டே, ஸ்டுவார்ட் பின்னி, ஸ்ரீநாத் அரவிந்த், கருண் நாயர் எனப் பல கர்நாடக வீரர்கள் இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்துவிட்டனர். 2005 -06 சீசனை உத்தரப்பிரதேசம் வெல்கிறது - ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா அறிமுகம். வெற்றி பெறாத அணிகளின் வீரர்களும் அணிக்குள் நுழைகிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் பல காலம் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

இந்த டி-20 யுகத்தில், ரஞ்சி மட்டுமன்றி விஜய் ஹசாரே, ஐ.பி.எல் தொடர்களும் வீரர்கள் தேர்வின் அங்கமாகிவிட்டது. ஆனால், அந்த 'வெற்றி'க்கான மோகம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 'ஒன் மேன் ஷோ' நடத்தியபோது, மன்ப்ரீத் கோனி, சுதீப் தியாகி போன்ற வீரர்களுக்குக்கூட இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணிக்குள் வரவும், தினேஷ் கார்த்திக்கின் கம்பேக்குக்கும் விஜய் ஹசாரே கோப்பை வெற்றிதான் காரணம். போன ரஞ்சி சீசனை குஜராத் வென்றதால்தான் பார்தீப் பட்டேலின் கம்பேக்கும் நிகழ்ந்தது. போன சீசன் மட்டுமல்ல, பல்வேறு ரஞ்சி தொடர்களில் சிறப்பாக ஆடியவர். ஆனால், வெற்றிக்குப் பிறகுதான் கதவு மீண்டும் திறந்திருக்கிறது.

#RanjiTrophy

திரும்பத் திரும்ப நாம் சொல்ல வருவது இதுதான்... ஒரு வீரர் இந்திய அணியில் ஆட வேண்டுமெனில், அவர் ஆடும் அணி வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் சீக்கிரம் இடம் கிடைக்கும். இல்லையேல் சில ஆண்டுகள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும். இதுதான் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் டெம்ப்ளேட்டாக இருந்துவருகிறது. ஆனால், விதர்பாவின் இந்த வெற்றி அதை மாற்றக் கூடும். ஏனெனில், அந்த அணி அப்படி... அவர்கள் வெற்றி பெற்றிருக்கும் நேரமும் அப்படி!

ரஞ்சிக் கோப்பை அரையிறுதியின் நான்காம் நாள். டார்கெட் - வெறும் 198. களமிறங்குகிறது கர்நாடகா. இந்தத் தொடரை வென்றால் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லலாம். எதிரணி - விதர்பா. "61 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஒரு அணியை, கர்நாடகா எளிதில் வென்றுவிடும்" - அனைவரும் இப்படித்தான் நினைத்திருந்தனர். ஆனால், சர்ப்ரைஸ்கள்தானே ஸ்போர்ட்ஸின் ஸ்பெஷாலிடி! 192 ஆல் அவுட் ஆகிறது கர்நாடகா. தேசிய அணியில் ஆடிய வீரர்களில் 5 பேர் கர்நாடகாவின் பிளேயிங் லெவனில். ஆனால், விதர்பாவிடம் வீழ்ந்தது. 

vidarbha

இது சர்ப்ரைஸ் வெற்றியாகவே இருந்தாலும், அதிர்ச்சி இல்லை. ஏனெனில், ஏற்கெனவே பெரிய தலைகளையெல்லாம் உருட்டிவிட்டுத்தான் அரையிறுதிக்குள் அவர்கள் நுழைந்திருந்தார்கள். முதல் போட்டியிலேயே பஞ்சாபிடம் இன்னிங்ஸ் வெற்றி. பெங்காலும் இவர்களிடம் அடி வாங்கியது. 6 போட்டிகளில் 4 வெற்றிகள். ஒரு போட்டியில் மட்டுமே முதல் இன்னிங்ஸில் பின்தங்கியிருந்தது. இப்படித் தொடர் முழுக்க ஷாக் கொடுத்துக்கொண்டேதான் இருந்தது விதர்பா. ஃபைனல் - டெல்லியுடன். கம்பீர், ரிசப் பன்ட் என்று அங்கும் அனுபவ வீரர்கள் அதிகம். ஆனால், அலட்டிக்கொள்ளவில்லை அவர்கள்.

இந்த சீசனின் தொடக்கத்தில், விதர்பா அணியின் வாட்ஸ்அப் குரூப் புரொஃபைல் பிக்சராக வைக்கப்பட்ட படம் - ரஞ்சிக் கோப்பை! அப்போதே அவர்களுக்குள், 'ஏதேனும் அசாதாரணமான ஒன்றை நிகழ்த்திட வேண்டும்' என்ற துடிப்பு. லீக் போட்டியின் தொடக்கத்திலேயே அதைத் தொடங்கிவிட்டனர். மூத்த வீரர் வாசிம் ஜாஃபர், பயிற்சியாளர் சந்திரகாந்த் பன்டிட் போன்றோரும் ஹோட்டலில் தங்காமல், இளம் வீரர்களுடன் அகாடமியிலேயே தங்கியிருந்தது, அகாடமியில் மாற்றங்கள் கொண்டுவந்தது, அதன் தரத்தை உயர்த்தியது, வீரர்கள் தேர்வில் காட்டிய புத்திசாலித்தனம் என, இந்த ஆச்சர்ய வெற்றிக்குப் பின் பல திட்டமிடல்களும் மெனக்கிடல்களும் மறைந்துள்ளன. 

மாவட்ட அணிகளிலிருந்து அகாடமிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் முறையை மாற்றி, அகாடமிக்கே trials வைத்து எடுத்தது விதர்பா கிரிக்கெட் சங்கம். தரமான இளம் வீரர்கள் ஒருவரைக்கூட தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். உள்ளூர் போட்டிகளை, வழக்கமாக நடத்தும் மாதத்திலிருந்து, ரஞ்சிக் கோப்பை நடக்கும் சீசனுடன் நடத்தினர். ஃபார்மில் இருந்த வீரர்களைவிட, ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணிக்குத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். அதற்குப் பலனும் கிடைத்தது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட அக்ஷய் வாட்கருக்கு, ரஞ்சி சீசனின் பாதியில் விதர்பா அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ஃபைனலில் 133 ரன்கள்! முதல் இன்னிங்ஸ் முன்னிலைக்கு முக்கியக் காரணம். கோப்பையை அப்போதே உறுதிசெய்தார்.

இதுமட்டுமல்ல அணித்தேர்வில் அவர்கள் எடுத்த ஒவ்வொன்றுமே அட்டகாச முடிவுகள். ஓப்பனிங்கில் விளையாட அனுபவமும் வேண்டும், இளமையும் வேண்டும் என்று முடிவு செய்தனர். கேப்டன் ஃபெய்ஸ் ஃபாசலுக்கு 32 வயது, வாசிம் ஜாஃபருக்கு 39. ஜாஃபர் மூன்றாவது வீரராக்கப்படுகிறார். 22 வயது சஞ்சய் ராமசாமி, ஃபாசலுடன் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அதேபோல் பௌலிங் தேர்வும் அருமை. அனைவரும் இளைஞர்கள். அரையிறுதியில் ஆடிய இந்திய வீரர் உமேஷ் யாதவ் தென்னாப்பிரிக்கா புறப்பட்டுவிட்டார். அவர் இடத்தில்... முதல்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுதரும் போட்டியில் களமிறக்கப்படுகிறார் 19 வயது அறிமுக வீரர் ஆதித்யா தாகரே. ஃபைனலில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ஃபைனலில் ஆடிய அணியில் நால்வர் மட்டுமே 20 முதல்தரப் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஆனால், சாதித்துவிட்டனர். ஓர் அணியின் நிர்வாகம், தலைமை, வீரர்களின் ஒருங்கிணைப்பு, நம்பிக்கை அனைத்தும் சீராக இருந்தால், அனுபவம் இல்லாமலும் ஆச்சர்யங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு விதர்பா உதாரணம். சரி, இந்த அணியின் வெற்றி இந்திய அணியில் எந்த வகையான மாற்றத்தைக் கொண்டுவரும்?

#RanjiTrophy

முதல்தரப் போட்டிகளின் வெற்றிகள்தான், வீரர்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்பது உண்மைதான். ஆனால், விதர்பாவின் வெற்றி இன்னும் கொஞ்சம் பாசிடிவானது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், மும்பை, தமிழ்நாடு போன்ற அணிகள் வெற்றிபெறாதபோதும், அந்த அணியின் வீரர்கள் ரஞ்சி சீசனிலாவது லைம்லைட்டில் இருப்பார்கள். ஆனால், இந்த விதர்பா வீரர்கள் அப்படியல்ல. வாசிம் ஜாஃபர் - இன்னும் 2 மாதங்களில் 40 வயதை நெருங்கும் இந்த முன்னாள் மும்பை வீரரும், உமேஷ் யாதவும் மட்டுமே பிரபலங்கள். மற்றவர்களெல்லாம்....?

ஃபைனலில் ஆடிய வீரர்களில், கேப்டன் ஃபாசல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியவர். மற்றபடி, அபூர்வ் வான்கடே, அக்ஷய் வாகரே ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் 'இருந்துள்ளனர்'. அவ்வளவே, மற்றவர்களெல்லாம் மராட்டிய அளவில் பரிட்சயப்பட்டிருப்பார்களே தவிர, தேசிய அளவில் அறியப்படாதவர்கள். அதனால்தான், இவர்களின் வெற்றி பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இவர்களில் எல்லோரும் வெற்றிக்காக உழைத்தவர்கள். ஆனால், தனி ஆளாக வென்றுதந்தவர்கள் இல்லை. 

ஃபைனலில் ஹாட்ரிக் வீழ்த்தியது மட்டுமல்லாமல் 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகள் வீழ்த்திய குர்பானியை அனைவரும் கொண்டாடுகின்றன. இதுவரை வெளிச்சத்துக்கு வராதவர். அதனால், உடனே அவர்மீது மேலிடம் கண்வைக்க முடியாது. ஏனெனில், 7 போட்டிகளில் 44 விக்கெட்டுகள் வீழ்த்திய கேரள வீரர் சக்சேனாவை ஒதுக்க முடியாது. பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங்கைத் தாண்டி (5 போட்டிகளில் 753 ரன்கள்) சஞ்சய் ராமசாமியை (9 போட்டிகளில் 775 ரன்கள்) தேர்வு செய்யமுடியாது. ஆக, வெற்றி பெற்ற அணிகள் இதுவரை பெற்றுவந்த சலுகைக்கு, நட்சத்திரங்கள் இல்லாத இந்த விதர்பா அணி முட்டுக்கட்டை போட்டுள்ளது.

Vidarbha

அதேசமயம், இன்று அமைந்திருக்கும் MSK பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு, முந்தைய குழுக்களைவிட சிறப்பாகச் செயல்படுகிறது. வெற்றிகளுக்கு அப்பாற்பட்டு வீரர்களின் திறமைக்கு ஓரளவு முக்கியத்துவம் தருகிறது. அதனால், அவர்கள் பழைய டெம்ப்ளேட்டிலிருந்து அணித்தேர்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள் என்று நம்பலாம். இந்தச் சமயத்தில் விதர்பா அணியின் வெற்றி வந்திருப்பதால், கத்துக்குட்டி அணிக்காக ஆடி ஜொலித்த வீரரையும் தேர்வுக்குழு கண்காணிக்கும் நிலை ஏற்படும். ஐ.பி.எல் தாண்டியும் வீரர்களை அணிக்குத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும். 

இதனால், ஒரு சீசனில் மட்டும் ஜொலித்து, பின்னர் புஸ்வானமாகும் வீரர்களுக்குப் பதிலாக, தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் மீது வெளிச்சம் படும். இனிவரும் தொடர்களில் எந்த அணியும் கத்துக்குட்டி அணியாக பாவிக்கப்படாது. அந்த அணியின் வீரர்களுக்கு மதிப்புக் கிடைக்கும். ஒவ்வொரு ரஞ்சி அணியும், தங்கள் அகாடமிகளின்மீது அக்கறை செலுத்தும். உள்ளூர் போட்டிகள் டி-20 தொடர்களுக்கான அஸ்திவாரமாக இல்லாமல், ரஞ்சிக் கோப்பைக்கான தொடர்களாக மாறக்கூடும். ஆக, விதர்பாவின் இந்த வெற்றி, கொண்டாடப்படவேண்டியது!


டிரெண்டிங் @ விகடன்