வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (03/01/2018)

கடைசி தொடர்பு:16:20 (03/01/2018)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்டெய்ன் ஆடுவதில் சந்தேகம்...

தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி, வரும் 5-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் பௌலர் டேல் ஸ்டெய்ன் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் நீடித்துவருகிறது.

Dale Steyn

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு, இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றிபெறுவது, தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் பௌலர் ஸ்டெய்ன், காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பதில் இன்னும் அந்த அணியின் நிர்வாகம் தெளிவான பதிலைக் கூறவில்லை. 

இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் கிப்சன், `ஸ்டெய்ன் நல்ல உடல் தகுதியோடுதான் இருக்கிறார். ஆனால், முதல் போட்டிக்களுக்கு அவர் முழுமையாக விளையாடத் தகுதி பெறுவாரா என்பதுகுறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்களைக்கொண்டு நாங்கள் களமிறங்க எத்தனித்திருக்கிறோம். அந்த மூன்று பௌலர்களில் ஸ்டெய்னும் ஒருவராக இருந்து, அவருக்கு பாதி ஆட்டத்தில் காயம் ஏற்பட்டால் என்ன செய்வது? அந்த ரிஸ்க்கை நாங்கள் எடுக்க விரும்பவில்லை' என்று தெளிவில்லாத ஒரு பதிலைக் கூறியுள்ளார். இதனால், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ஸ்டெய்ன், இந்தப் போட்டியில் கம்-பேக் கொடுப்பாரா என்று ஸ்திரமாகச் சொல்ல முடியாது.