வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (03/01/2018)

கடைசி தொடர்பு:17:40 (03/01/2018)

`பெஸ்ட் டெஸ்ட் அணியாக உருவெடுக்க வாய்ப்பு!' - நெகிழும் புஜாரா

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தொடர் குறித்து கருத்து கூறியுள்ளார் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான செத்தேஷ்வரா புஜாரா. 

cheteshwar pujara

புஜாரா பேசுகையில், `இந்தியா சார்பில் இதுவரை விளாயாடிய டெஸ்ட் அணிகளில் சிறந்த அணியாக உருவெடுக்க எங்களுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என நாங்கள் அடுத்தடுத்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்போகும் அனைத்து நாடுகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கண்டிப்பாக அந்தப் பெயரைப் பெற முடியும். வெளிநாடுகளில் நன்றாக விளையாடக்கூடிய அளவுக்கு இந்திய அணியில் திறமை இருக்கிறது' என்று நம்பிக்கை ததும்பக் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா தொடர் குறித்து பேசிய புஜாரா, `தென்னாப்பிரிக்கா தொடருக்கு நாங்கள் இதுவரை செய்துவரும் பயிற்சி நன்றாகவே அமைந்துள்ளது. இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம். தென்னாப்பிரிக்கா வந்துள்ளது தொடரை வெற்றி பெறுவதற்காக. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், தற்போது அணியில் இருக்கும் பலர் ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் விளையாடியுள்ளோம். எனவே, அது கண்டிப்பாக உதவும். நானும் இங்கு இதற்கு முன்னர் இரண்டு தொடர்களில் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொண்டால் வெற்றி நிச்சயம்தான்' என்றார் உறுதிபட.