வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (04/01/2018)

கடைசி தொடர்பு:09:38 (10/01/2018)

`ஐ.பி.எல்-லில் தக்கவைக்கும் 3 வீரர்கள்?’ - சி.எஸ்.கே கொடுத்த க்ளூ!

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர், இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது. 

 

ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன. 

தடை முடிந்து ஐ.பி.எல் களத்துக்குத் திரும்பும் சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அந்த இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி வந்தனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் பெரும்பாலானோர் நட்சத்திர வீரர்கள் என்பதால், அவர்களில் எந்த 3 பேரை அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அந்தக் கேள்விக்குக் க்ளூ கொடுக்கும் விதமாகச் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் `378’ என்ற எண்களைக் குறிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது ஜெர்சி எண் ’3’ கொண்ட சுரேஷ் ரெய்னா, ஜெர்சி எண் ‘7’ கொண்ட மகேந்திரசிங் தோனி மற்றும் ஜெர்சி எண் ‘8’ கொண்ட ரவீந்திர ஜடேஜா ஆகியோரையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஐ.பி.எல். அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருக்கிறது.