கோலிக்கு முதல் சவால்... எப்படிச் சமாளிக்கப் போகிறது இந்தியா? #INDvSA

நான்கு வருடங்களுக்கு முன், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து என நான்கு நாடுகளிலும் தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டி கையிலிருக்கும்போதே கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கோலிக்கு அந்நிய மண்ணில் அணியை வழிநடத்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார் தோனி. 2015-ம் ஆண்டு, உலகக்கோப்பை வரவே. அதன்பிறகு, இந்தியா பல வருடங்கள் கழித்து, பெரிய ஹோம் சீசனைப்பெற்றது. கடந்த 18 மாதங்களில், மேற்கிந்தியத்தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என வரிசையாக தொடர் வெற்றிகளைக் குவித்தது மட்டுமல்லாமல் 'பெஞ்ச் ஸ்ட்ரெந்த்' எனப்படும், அடுத்த நிலை வீரர்களையும் சோதித்துப்பார்த்துவிட்டது. இந்திய மண்ணிலேயே உமேஷ் யாதவின் வேகம் மிகுந்த உத்வேகம் அளிக்கக்கூடிய விஷயமாக உருவானது பெரிய நம்பிக்கை. புவனேஷ் குமார், ஷமி போன்றவர்கள் எந்நேரமும் விக்கெட் எடுக்கக்கூடிய வித்தையைக் கைவரப்பெற்றவர்கள். ஆக, பேட்டிங் மட்டுமல்லாது இந்திய அணியின் பெளலிங் டிபார்ட்மென்ட்டும் பக்கா. இனி, என்ன செய்தால் இந்தியா முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரைக் கைப்பற்ற முடியுமென்பதைப் பார்க்கலாம். 

INDvSA

கடந்த முறை முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியே இருந்தது. சுமார் 150 ரன்கள் கையிலிருக்க தென்னாப்பிரிக்காவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர், ஃபிலாண்டரை 60 ரன்களுக்கு மேல் ஆடவிட்டு, வெற்றிவாய்ப்புக்கு வேட்டு வைத்துக்கொண்டது. நான்கு வருடங்களுக்கு முன்னர், வயதான ஜாகிர் கான், முதன்முறை பயணம் செய்த ஷமி, இஷாந்த் ஷர்மாவின் மிதமான வேகம், அஷ்வினின் எடுபடாத ஆஃப் ஸ்பின் என இந்தியாவின் பந்துவீச்சு ஒட்டுமொத்தமாக சொதப்பினாலும், விஜய், புஜாரா, கோலி, ரஹானே என நால்வரும் இந்தியாவின் மானம் காத்தனர். இரண்டாவது போட்டியில் மழையின் குறிக்கீடு இருந்தும், இந்தியா முதல் இன்னிங்ஸில் போராடி 334 ரன்கள் அடித்தது. 'ctrl + c, ctrl + v' போல, மீண்டும் இந்தியா போராடி முதல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த, நைட் வாட்ச்மேனாக வந்த டேல் ஸ்டெய்ன் தனது விக்கெட்டை இழக்காமல், காலிஸின் கடைசிப் போட்டியில் துணை நிற்க, 166 லீட் எடுத்தது. 

கடந்தமுறை மட்டுமல்ல, இந்தியா சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போதெல்லாம் நமக்கிருந்த பெரிய பிரச்னை நல்ல தொடக்கம் அமையாததே. தவான் 4 இன்னிங்ஸிலும் சோபிக்காத காரணத்தினால், புஜாரா தன்னுடைய விக்கெட்டையும், பந்தை பழசாக்க வேண்டி போராடுவதே வாடிக்கையாகிப் போனது. பந்துவீச்சாளர்களில் நான்கு பேரில் ஒருவர் விக்கெட் ஏதும் எடுக்கமுடியாமல் போனால் மீதி மூன்று பேரை மட்டும் வைத்துக்கொண்டு பத்து விக்கெட்டுகளை வீழ்த்துவதென்பது முடியாத செயல். கடந்தமுறை இந்திய அணியில் ஆல் ரவுண்டர் இல்லை. சோர்ந்துபோகாமல் பந்துவீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை, மிடில் ஆர்டரில் நிலைத்து நிற்கக்கூடிய வீரர் இல்லை (ரோஹித் சர்மா 4 இன்னிங்ஸிலும் சொதப்பியதை நினைவில் கொள்ளவும்). 

INDvSA

யோ யோ டெஸ்ட் போன்ற கடுமையான ஃபிட்னஸ் டெஸ்ட்டுகளைக் கொண்டு, தற்போதுள்ள அணியைக் கட்டமைத்துள்ளார் கோலி. விஜய், கே.எல் ராகுல் என தரமான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்ட் திறமையைப் பெரிதும் நம்பி இந்தியா களமிறங்குகிறது. இப்போதுள்ள ஒரே கேள்வி, என்ன விதமான காம்பினேஷனில் கோலி களமிங்கப்போகிறார் என்பதே.  ஓப்பனர்கள், புஜாரா, கோலி, ரோஹித்/ரஹானே என்றால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்க முடியும். அதன் பின்பு சாஹா மற்றும் பௌலர்கள் என 11வீரர்கள் யார் என்பதே தற்போதைய சஸ்பென்ஸ். 

அந்நிய மண்ணில் ரஹானேவின் பேட்டிங்கை அணி நிர்வாகம் ஒருமுறை பார்த்தால் கண்டிப்பாக அவரை உட்காரவைத்துவிட்டு ரோஹித் ஷர்மாவை எடுக்க மாட்டார்கள். ஒருதொடரின் முதல் போட்டியில் அதிக ரிஸ்க் எடுக்காமல் நல்ல தொடக்கம் அமைத்துக்கொள்ள கோலி விரும்புகிறாரா அல்லது யாரும் எதிர்பார்க்காத வகையில், இது என்னுடைய அணி, நான் எடுக்கும் முடிவே இறுதி என அசரடிக்கப்போகிறாரா என்பதே இந்திய ரசிகனின் கேள்வி! 

புவனேஷ் குமார், ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா என நான்கு பௌலர்கள் அணிக்கு பலம் சேர்ப்பார்கள். அதேபோல டாப் ஆர்டர் நான்கு பேட்ஸ்மேன்கள் மற்றும் சாஹா எனப் பத்து வீரர்கள் தங்களை தாங்களே டிக் அடித்துக்கொள்வார்கள். ஒரே கேள்வி மட்டுமே எஞ்சியுள்ளது. ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து, மிடில் ஆர்டரை அவர் கையில் கொடுத்துவிட்டு, ஹர்திக் பாண்டியவை எடுக்கலாமா? அப்படி எடுத்தால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் யாரை விடுவிப்பது? பாண்டியாவை நான்காவது பந்துவீச்சாளாராகக் கருதி, ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சுழற்பந்து வீச்சாளர்களே வேண்டாம், தேவை ஏற்பட்டால் விஜய், ரோஹித் போன்றவர்களைக் கொண்டு ஓரிரு ஓவர்கள் போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுப்பாரா? 

கேள்விகள் ஏராளம்... விடை என்ன கோலி?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!