புவனேஸ்வரின் அசத்தல் ஸ்விங்; பும்ராவின் முதல் விக்கெட்! - 286 ரன்களுக்கு ஆல்அவுட்டான தென்னாப்பிரிக்கா

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டூபிளஸி பேட்டிங் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையைப் போக்கும் முனைப்பில், இந்திய அணி பீல்டிங் செய்ய களமிறங்கியது. போட்டியின் முதல் ஸ்பெல்லில் அசத்தலாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டரைப் பதம் பார்த்தார். அந்த அணி 12 ரன்கள் சேர்ப்பதற்குள், டீன் எல்கர், மார்க்ராம் மற்றும் அம்லா ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. அந்த 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமாரே கைப்பற்றினார். 

இதையடுத்து கைகோத்த கேப்டன் டூபிளசி மற்றும் ஏ.பி.டிவிலியர்ஸ் ஜோடி தென்னாப்பிரிக்க அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடியது. நான்காவது விக்கெட்டுக்கு அந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ,65 ரன்கள் எடுத்திருந்த டிவிலியர்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, முதல் விக்கெட்டாக டிவிலியர்ஸை வீழ்த்தினார். டிவிலியர்ஸ் வெளியேறிய சிறிது நேரத்திலேயே டூபிளசியும் 62 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதையடுத்து களமிறங்கிய டிகாக், 40 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் தென்னாப்பிரிக்க அணி 73.1 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.   
அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. முரளி விஜய் (1 ரன்), தவான் (16 ரன்), கேப்டன் கோலி (5 ரன்) ஆட்டமிழந்தனர். புஜாரா 5 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!