வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (06/01/2018)

கடைசி தொடர்பு:11:20 (06/01/2018)

அதகள பௌலிங்கிற்குப் பின்னர் புவ்னேஷ்வர் குமார் என்ன சொன்னார் தெரியுமா? #INDVsSA

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதகளப்படுத்தியுள்ளார், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார். இந்நிலையில், அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ஆட்டம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

புவ்னேஷ்வர் குமார்

செய்தியாளர்களிடம் பேசிய புவி, `இந்தப் போட்டியில், ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்ற வருத்தமெல்லாம் எனக்கு இல்லை. ஒரு அணியாக நாங்கள் நன்றாகச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தான் எனது குறிக்கோளாக இருக்கிறது' என்றவரிடம், தென்னாப்பிரிக்காவின் ஸ்டார் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸுக்கு பௌலிங் செய்வதுகுறித்து கேட்கப்பட்டபோது, `டிவில்லியர்ஸ் தற்போது, உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு பௌலிங் செய்யும்போது, நமது பெஸ்ட்டை கொடுத்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். இங்கு, அவருக்கு எதிராக நன்றாக பந்து வீச முடியும். காரணம், தென்னாப்பிரிக்க பிட்ச்களில் ஸ்விங் அதிகமாக இருக்கும். குறிப்பாக, முதல் 10- 15 ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும்' என்றார் நம்பிக்கையுடன்.

பின்னர், தென்னாப்பிரிக்கா 28 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளதால், அவர்கள் கையில் ஆட்டம் சென்றுவிட்டதா? என்ற கேள்விக்கு, `அப்படிச் சொல்வதற்கில்லை. இது அவர்கள் நாடு. அவர்களுக்கு இந்த ஆடுகளம் நன்றாக பரிட்சியம் ஆனது. எனவே, அவர்கள் நன்றாக விளையாடுவார்கள், பந்து வீசுவார்கள் என்று நாங்கள் முன்னரே கணித்திருந்தோம். சில விக்கெட்டுகளை நாங்கள் இழந்திருந்தாலும், இன்னும் இந்தப் போட்டி எங்கள் கையைவிட்டு நழுவிவிடவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்' என்றார் தீர்க்கமாக.