வெளியிடப்பட்ட நேரம்: 11:33 (06/01/2018)

கடைசி தொடர்பு:14:14 (06/01/2018)

டி வில்லியர்ஸுக்கு ஒரு ஸ்விங், டு பிளஸ்ஸிக்கு ஒரு யார்க்கர், மகாராஜுக்கு ஒரு பெளன்ஸர்... பலே பும்ரா... சபாஷ் புவி! #SAvIND

முதல் டெஸ்ட்டில், முதல் நாளில், முதல் செஷனில், முதல் அரைமணி நேரத்தில், 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை. தேங்ஸ் டு புவி. தன் முதல் டெஸ்ட்டில், தன் முதல் இன்னிங்ஸில், தன் முதல் ஸ்பெல்லில் எதிரணியின் கீ பிளேயரை வீழ்த்துவது தேர்ந்த பெளலருக்கு அழகு. தேங்ஸ் டு பும்ரா. 22 நிமிடத்துக்குள் எல்கர், மார்க்ரம், ஆம்லா என தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரை புவி காலி செய்தார் எனில், டேஞ்சரஸ் டி வில்லியர்ஸை தூக்கினார் பும்ரா. மூன்றாவது பந்திலேயே தென்னாப்பிரிக்காவின் தொடக்க பேட்ஸ்மேனுக்கு புவி முடிவுரை எழுதினார் எனில் வேகம், பெளன்ஸர், யார்க்கர் என சகல விதங்களிலும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களைக் கதறவிட்டார் பும்ரா. புவி, பும்ராவுக்கு ஷமி, பாண்டியா ஒத்தாசையாக இருக்க, மூன்றாவது செஷனைத் தாண்டவில்லை தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிஸ். 286 ரன்களில் ஆல் அவுட். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இத்தனை நாள்களாக இதைச் செய்யாததால்தான், துணைக் கண்டங்கள் அல்லாத ஆடுகளங்களில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. #SAvIND

#SAvIND

ஸ்கோர் 12/3 எனும்போது களத்தில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனுக்கும் உள்ளூர உதறல் ஏற்படும். ஆனால், டி வில்லியர்ஸுக்கு பயமில்லை. தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரை பதம் பார்த்த புவியின் பந்தை(யே) டி வில்லியர்ஸ் ஒரு கை பார்த்தார். தடுமாறிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேன்தான் ஒரு மோசமான பந்துக்காகக் காத்திருப்பார்; பெளலர் தவறு செய்யும் தருணத்துக்காகக் காத்திருப்பார். டி வில்லியர்ஸ் தடுமாறும் பேட்ஸ்மேன் அல்ல... எதிரணியைத் தடுமாறவைப்பவர்! அவர் மோசமான பந்துக்காகக் காத்திருப்பதில்லை; பெளலரின் தவறுக்காகக் காத்திருப்பதில்லை. லைன் அண்ட் லெந்த் பற்றி கவலையில்லை; பெளலரின் கன்சிஸ்டன்ஸி பற்றி கவலையில்லை... அடிக்க நினைத்தால் அடி!

ஃபுல் லெந்த் டெலவரியா? இந்தா, பிடி... கவர் டிரைவ். ஷார்ட் பால் அதேநேரத்தில் கொஞ்சம் வெளியே செல்கிறதா? இந்தா, பிடி... கட் ஷாட்... ஆம், புவி வீசிய ஒன்பதாவது ஓவரில் டி வில்லியர்ஸ் அடித்தது நான்கு பவுண்டரிகள். நான்குமே பக்காவான ஷாட்கள். எட்ஜ் என்ற வேலைக்கே இடமில்லை. அதிலும் அந்த ஓவரில் கடைசியாக அடித்த கட் ஷாட் ஒன்றுபோதும்! ஷாட் செலக்ஷன், மொரட்டு அடி என்பதையெல்லாம்தாண்டி, டி வில்லியர்ஸின் அப்போதைய மனநிலைதான் கவனிக்க வேண்டிய விஷயம். மூன்று விக்கெட்டுகள் விழுந்துவிட்டதே எனப் பதற்றத்தில் டொக் வைத்துக்கொண்டிருக்காமல், அசராமல் அடித்ததுதான் மேட்டர். ஆம், கவுன்ட்டர் அட்டாக்கைக் கையிலெடுத்தார் ஏபிடி. கால்பந்தில் அடிக்கடி அட்டாக்கிங்தான் பெஸ்ட் டிஃபன்ஸ் என்பார்கள். கால்பந்து மட்டுமல்ல, கிரிக்கெட்டுக்கும் அது பொருந்தும் என நிரூபித்தார், நவீன கிரிக்கெட்டின் ஏலியன். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. நெருக்கடி இந்தியாவின் பக்கம் திரும்பியது. 

ஸ்விங், Seam என மிரட்டிய புவியின் பந்தைப் புரட்டி எடுத்த டிவில்லியர்ஸையே ஒரு கணம் கதி கலங்க வைத்தார் பும்ரா. 140 கி.மீ வேகத்தில் யார்க்கர் இறக்குவதுதான் பும்ராவின் பியூட்டி. அதனால்தான் அவர் லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் ஆகச்சிறந்த டெத் பெளலர். ஆனால், இது டெஸ்ட் மேட்ச். அதுவும் அவரது முதல் மேட்ச். முதல் ஸ்பெல். இங்கு யார்க்கர்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கமுடியாது. வேரியேஸன் வேண்டும். வேகம் வேண்டும், டெக்னிக் வேண்டும். பும்ராவிடம் எல்லாமும் இருக்கிறது. பாதி பிட்ச்சில் கட் செய்கிறார். டி வில்லியர்ஸ் அதைத் தடுப்பதற்காக பேட்டை நீட்டுகிறார். பந்து அவர் எதிர்பார்த்த இடத்துக்கு வரவில்லை. பேட்டுக்கும் அவரது உடம்புக்கும் இடையே ஸ்விங்காகிச் செல்கிறது. உதடு குவித்து காற்றை ஊதி பெருமூச்சு விட்டார் டி வில்லியர்ஸ். பும்ராவிடமிருந்து இப்படியொரு டெலிவரியை டி வில்லியர்ஸ் எதிர்பார்க்கவில்லை. டி வில்லியர்ஸ் மட்டுமா?!

#SAvIND

கமான், கமான்... உற்சாகப்படுத்துகிறார்கள் இந்தியர்கள். அடுத்த பந்து. அதைவிட கச்சிதம். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் ஃபுல் லென்த் டெலிவரி. டி வில்லியர்ஸ் அதைத் தடுக்க முயல்கிறார். முடியவில்லை. இன்சைட் எட்ஜ் போல தெரிந்தது. ம்ஹும் பந்து பேட்டில் படவில்லை. அவரை ஏமாற்றிவிட்டது. அவரை மட்டுமல்ல விக்கெட் கீப்பரையும். டி வில்லியர்ஸ் மிஸ் செய்த பந்தை தனக்கு இடதுபுறம் டைவ் அடித்தால் மட்டுமே விக்கெட் கீப்பரால் அதைப் பிடிக்க முடியும். சகா டைவ் அடித்தார். ம்ஹும் பிடிக்கமுடியவில்லை. விக்கெட் கீப்பரென்ன... ஃபைன் லெக்கிலிருந்து ஓடி வந்த புவனேஸ்வர் குமாரே தட்டுத்தடுமாறித்தான் அதைத் தடுத்தார். வேகம் அப்படி... ஸ்விங் அப்படி...! 

அட்டகாசமான ஒரு ஸ்விங், பேட்ஸ்மேனை மட்டுமல்லாது இரு ஃபீல்டர்களையும் தடுமாற வைத்திருக்கிறது. மற்றொரு பந்தில் தன் வழக்கமான யார்க்கரில் டு பிளஸ்ஸியை நிலைகுலைய வைத்தார் பும்ரா. டி வில்லியர்ஸை ஒரு இன் ஸ்விங்கில், டு பிளஸ்ஸியை ஒரு யார்க்கரில் பதம்பார்த்த பும்ரா, மகாராஜை தடுமாறி கீழே விழ வைக்க தேர்ந்தெடுத்த ஆயுதம், பெளன்ஸர். ஆக, Seam, பெளன்ஸர் என தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் எதற்கு ஒத்துழைக்குமோ அதைக்கொண்டே அவர்களை மிரட்டியதோடு, தன் பிரத்யேக பிரம்மாஸ்திரமான யார்க்கர் மூலமும் அட்டாக் செய்தார் பும்ரா. வெல்கம் டு டெஸ்ட் கிரிக்கெட் ப்ரோ!

செகண்ட் செஷன். இந்த செஷனைக் கடத்தி விட்டால், இந்த நாளைக் கடத்தி விடலாம். எதிர்முனையில் பள்ளிப் பருவத்துத் தோழன் டு பிளஸ்ஸி இருக்கிறார். கேப்டனுக்கே உரிய பொறுப்புடன் ஆடிக் கொண்டிருக்கிறார். சப்போர்ட்டிங் ரோலை பக்காவாக செய்து கொண்டிருக்கிறார். அருமையான பார்ட்னர்ஷிப். இந்த ஜோடியைப் பிரிக்க கோலி திணறுகிறார்.  டி வில்லியர்ஸ் அரைசதம் கடந்து முன்னேறுகிறார். இவரைத் தடுக்காவிடில் சதம் அடிப்பார். ஆனால், இந்த செஷன் பும்ராவின் செஷனாக இருக்கும்போது டி வில்லியர்ஸால் என்ன செய்துவிட முடியும்.? 140 கி.மீ வேகத்தில் மீண்டும் ஒரு ஸ்விங். இந்தமுறை இன்சைட் எட்ஜ். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் விழுகிறது. அந்தச் சத்தம் காதில் கேட்கிறது. திரும்பிப் பார்க்காமலேயே தலையைத் தொங்கப் போட்டு பெவிலியன் சென்றார் டி வில்லியர்ஸ். அவர் அவ்வளவு விரக்தியாக நடையைக் கட்ட வேண்டிய அவசியமில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் ஓர் அருமையான இன்னிங்ஸ். 84 பந்துகளில் 65 ரன்கள். கெளரவமான கம்பேக். அதைவிட பும்ராவின் என்ட்ரி மாஸ் என்ட்ரி. ஆம், ஐ.பி.எல் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பும்ராவின் முதல் விக்கெட், ஏ.பி.டி வில்லியர்ஸ். பும்ரா தன் கடைசி காலத்தில் இதை பெருமையாகச் சொல்லலாம்!

#SAvIND

பும்ராவுக்கு இது முதல் டெஸ்ட். ஆனால், டு பிளஸ்ஸி தன் 45-வது டெஸ்ட்டில் ஆடிக்கொண்டிருக்கிறார். அதுவும் கேப்டன் என்ற பொறுப்புடன். பும்ராவின் யார்க்கருக்கு தடுமாறிக் கொண்டிருந்தால், மிடில் ஆர்டர் படுத்துவிடும். அணி துவண்டு விடும். எழுந்து நிற்க வேண்டும். அடிக்க வேண்டும். அதுவும் யார் பந்தில் தடுமாறினோமோ அவர் பந்தில் அடிக்க வேண்டும். புவனேஸ்வர் குமார் ஓவரில் டி வில்லியர்ஸ் அடித்தது போல... டு பிளஸ்ஸிக்கும் அப்படியொரு வாய்ப்பு வந்தது. பும்ரா 144 கி.மீ வேகத்தில் வீசிய பந்துகளை டிரைவ் மற்றும் பன்ச் மூலம் கவர் திசையில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். தெளிவாக அதேநேரத்தில் நிதானமாக அரை சதம் கடந்து முன்னேறிக்கொண்டிருந்த டு பிளஸ்ஸிக்கு ஒரு சிக்கல் வந்தது. ஹர்திக் பாண்டியாவின் பந்தில் எல்.பி.டபுள்.யு. இந்தியா அப்பீல் செய்தது. நடுவர் மறுத்தார். இந்தியா ரிவ்யூ கோரியது. நாட் அவுட். ஆனால், அடுத்த இரண்டாவது பந்தில் டு பிளஸ்ஸி அவுட். இத்தனைக்கும் அது மிரட்டலான பந்து இல்லை. கட் செய்ய முயன்று, எட்ஜாகி, விக்கெட் கீப்பர் கையில் சிக்கியது. 103 பந்துகளை பொறுப்பாக எதிர்கொண்டவர், 104-வது பந்தில் ஷாட் செலக்ஷனில் தவறு செய்தார். 62 ரன்களில் அவுட்டாகி, தென்னாப்பிரிக்காவை தடுமாறவைத்தார்.  

வந்ததில் இருந்தே அடித்து ஆடிய டி காக் அரைசதம் அடிக்கும் முன் (43) விக்கெட்டை இழந்தார். பிலாண்டர் 23, மகாராஜா 35, ரபாடா 26 ரன்கள் சேர்க்க, தென் ஆப்ரிக்கா கெளரவமான ஸ்கோரை எட்டியது. மூன்றாவது செஷன் தொடங்கிய சற்று நேரத்திலேயே தென் ஆப்ரிக்கா ஓய்ந்துவிட்டது. தென் ஆப்ரிக்க டாப் ஆர்டர் போலவே இந்தியாவின் டாப் ஆர்டரும்...

#SAvIND

புவி, பும்ரா பந்து ஸ்விங் ஆகும்போதே ‘இவங்களே இப்படி போடுறாங்களே... அப்போ அவங்க...?!’ என ஆச்சர்யப்பட்டது பலித்துவிட்டது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் மட்டுமே புதிய பந்தில் விக்கெட் எடுத்தார். ஆனால், தென்னாப்பிரிக்க தரப்பில் ஸ்டெய்ன், பிலாண்டர், மோர்கல் என பந்துவீசிய எல்லோருமே புதிய பந்தில் விக்கெட் எடுத்தனர், ரபாடா தவிர... அதிலும் பழைய வேகம், பழைய ஆக்ரோஷம் இல்லையென்றாலும், ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்தபின் ஸ்டெய்ன் ஆர்ப்பரித்தது, இந்தியாவுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை. முதல்நாளின் மூன்றாவது செஷனில், தென்னாப்பிரிக்க பெளலர்களைக் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களின் தரம் சோதிக்கப்பட்டுவிட்டது. இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டிக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது முதல்நாளே ரசிகர்களுக்குப் புரிந்துவிட்டது. விராட் அண்ட் கோ-வுக்கும் புரிந்திருக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்