வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (06/01/2018)

கடைசி தொடர்பு:14:15 (06/01/2018)

`ஆஸ்திரேலியா, டி20 போட்டிகள்ல சாதிக்கணும்னா இதைச் செய்யணும்!' - பாண்டிங்கின் வார்னிங்

ஐந்து போட்டிகள்கொண்ட ஆஷஸ் தொடரை முதல் மூன்று போட்டிகளில் வென்றுதன்மூலம் அசால்ட்டாகக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா. உலக கிரிக்கெட்டில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஜாம்பவானாகத் திகழ்ந்த ஒரே அணி, ஆஸ்திரேலியா மட்டும்தான். ஆனால், தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து எனப் பல அணிகள் டாப் ஃபார்ம் காட்டி, ஆஸ்திரேலியாவை பல போட்டிகளில் மண்ணைக் கவ்வ வைத்துவிட்டன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் டி20 ரெக்கார்டு, ஒரு ஜாம்பவான் அணிக்கு மிக மோசமானதாகவே இருக்கிறது. இதுவரை ஒரு டி20 உலகக் கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற வரலாற்றிலிருந்தே, இந்த வகை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பது புலப்படும். இந்தச் சூழலை மாற்றத்தான், தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு வெகு நாள்களாக கேப்டனாக இருந்த பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார். 

பாண்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளர் ஆக விருப்பம் தெரிவித்துவரும் பாண்டிங், டி20 போட்டிகளுக்கு ஸ்பெஷல் கவனம் கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். வரும் 2020-ம் ஆண்டு, சொந்த நாட்டில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பையைக் கைப்பற்றிக் கொடுப்பதன்மூலம், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைத் தொடங்கலாம் என்றும் அவர் கருதுகிறார். இதுகுறித்து பேசிய அவர், `டி20 போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிக கவனம் செலுத்தும் வரை, சாதகமான முடிவுகள் கிட்டப்போவதில்லை. பிக் பேஷ் தொடரைத் தவிர, ஆஸ்திரேலியர்களுக்கு டி20 போட்டிப் பயிற்சி இருப்பதில்லை. ஐ.பி.எல் விளையாடினால், கொஞ்சம் பயிற்சி கிடைக்கும். உண்மையில், ஆஸ்திரேலியர்கள் அதிக டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. குறிப்பாக, அவர்கள் ஒன்றாக இணைந்து டி20 போட்டிகளில் விளையாடுவதே இல்லை. இது மாறியே ஆக வேண்டும்' என்று நெத்தியடியாகக் கூறியுள்ளார்.