வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (06/01/2018)

கடைசி தொடர்பு:19:55 (06/01/2018)

எட்டாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள்! தென்னாப்பிரிக்காவில் அசத்திய பாண்ட்யா - புவனேஷ்வர் ஜோடி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹர்திக் பாண்ட்யா - புவனேஷ்வர் குமார் ஜோடி, 8-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. 


கேப்டவுனில் நடந்துவரும் போட்டியின் முதல் நாளில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. முதல் நாள் ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, மெதுவாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. நான்காவது விக்கெட்டுக்குத் தடுப்பாட்டம் ஆடிய புஜாரா - ரோகித் ஷர்மா ஜோடி 30 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அஷ்வின் 12 ரன்களிலும், விக்கெட் கீப்பர் சாஹா ரன் கணக்கைத் தொடங்காமலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தநிலையில், புவனேஷ்வர் குமாருடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா, அணியைச் சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்காவின் வேகக் கூட்டணியைத் திறம்பட சமாளித்த பாண்ட்யா, 46 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். அரை சதத்தில் 40 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகவே பாண்ட்யா சேர்த்திருந்தார். 8-வது விக்கெட்டுக்கு பாண்ட்யா - புவனேஷ்வர் குமார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 99 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி முதல் 7 விக்கெட்டுகளை 92 ரன்களுக்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது. புவனேஷ்வர் குமார் 25 ரன்களில் வெளியேறினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்ட்யா, 93 ரன்களில் ரபாடா பந்துவீச்சில், கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 77 ரன்கள் குறைவாகும். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் பிலாண்டர், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.