93 ரன்கள்... 2 விக்கெட்...! ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 

இன்று நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ரோகித் ஷர்மா, அஸ்வின், விக்கெட் கீப்பர் சாஹா, புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் இந்திய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச்சூழலில் இணைந்த ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. புவனேஷ்வர் குமார் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 93 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா 77 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு மார்க்ரம், டீன் எல்கர் சிறப்பான தொடக்கம் அளித்தனர். அணி 50 ரன்னைக் கடந்தது. பேட்டிங்கில் ஜொலித்த பாண்ட்யா பந்துவீச்சிலும் அசத்தினார். இவரது பந்துவீச்சில் மார்க்ரம் (34 ரன்), டீன் எல்கர் (25 ரன்) ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. ரபடா (2 ரன்), அம்லா (4 ரன்) களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை  மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!